கண்ட நாள் முதலாய்-பகுதி-39
....கண்ட நாள் முதலாய்....
பகுதி : 39
தனது பாடத்திற்குத் தேவையான சிறு குறிப்புகளைச் சேகரிப்பதற்காக வீட்டிற்குள்ளேயே அவளுக்காகவே அரவிந்தனால் பண்ணிக் கொடுக்கப்பட்டிருந்த நூலக அறையினுள் நுழைந்து கொண்டாள் துளசி...
அந்த அறையினை அவன் தனக்காக எடுத்துக் கொண்ட போது இப்படியெல்லாம் செய்து ஆச்சரியத்திற்குள்ளாக்குவன் என்று அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை...அன்றைய இரவில் அவன் தாமதமாய் வந்ததிற்காக அவனிடம் கோபப்பட்டவள்,அன்று இரவு முழுவதுமே அவன் இதற்கான வேலையில் தான் ஈடுபட்டான் என்று தெரிய வந்த போது அவனின் அந்த அதீதமான அன்பில் வியந்துதான் போனாள்...
சிறுவயதிலிருந்தே அவளுக்குள் இருந்த ஆசையினை அவன் அவளுக்கே தெரியாமல் அறிந்து நிறைவேற்றி வைத்ததில் அவன் மேலான காதல் அவளுக்குள் வேரூன்ற ஆரம்பித்தது...
அவளுக்குப் பிடித்தமான அனைத்துப் புத்தகங்களையும் உள்ளடக்கியிருந்தவன்..அவளின் கல்விக்கும் வேலைக்கும் அவசியப்படுகின்ற புத்தகங்களையும் அதில் இணைத்துக் கொள்ளத் தவறவில்லை...
தனக்குத் தேவையான புத்தகத்தோடு அமர்ந்து கொண்டவளுக்கு,நேரம் போனதே தெரியாமல் போக அதற்குள்ளேயே மூழ்கிப் போனாள்...அப்போது வேறு ஏதோ புத்தகத்தை எடுப்பதற்காய் அலுமாரியில் ஒவ்வொரு புத்தகங்களாய் பார்த்து அலசி ஆராய்ந்து கொண்டு சென்றவளின் கவனத்தை கீழே விழுந்த "அன்றொரு நாள் மழையில்..."எனும் கவிதைப் புத்தகம் அவளுடைய கவனத்தை திசை திருப்பியது...
அதை எடுத்துப் பார்த்தவளுக்கு அன்றைய மழைநாளின் நிகழ்வுகள் அனைத்தும் இனிமையான நினைவுகளாய் மனதினைத் தட்டிச் செல்ல,அன்று நடந்தவற்றை மனம் ஒவ்வொன்றாய் மீட்டிப் பார்த்து புன்னகைத்துக் கொண்டது...
அன்று அவள் அவனிடம் நடந்து கொண்ட விதத்தில் அவன் வெகுவாக ஆச்சரியப்பட்டுப் போனதை இன்று நினைக்கையில் அவளுக்கே அது கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருந்தது...முதலில் அவனை அவள் தள்ளிவிட்டு வந்தது அவனது முத்தம் தந்த வெறுப்பினால் அல்ல...அவனது முதல் ஸ்பரிசத்தில் ஒட்டிக் கொண்ட நாணத்தால் என்று சிறிது நேரத்திலேயே அவள் உள்ளம் உணர்ந்து கொள்ள முடிந்ததினால்தான்,அவளால் அவனிடம் அதன் பின்பு சகஜமாக கதைக்க முடிந்தது..
முதலில் தொற்றிக் கொண்ட கூச்சமும் நாணமும் அவனது சங்கடமான நிலையினைப் பார்த்ததும் எங்கென்று தெரியாமலேயே அவளிடமிருந்து ஓடி விட்டது...அவனை அவ்வாறு பார்த்த பின் அவளது மனதினில் தோன்றியது ஒன்று மட்டுமே,அது அவனது வாடிய முகத்தினை மலரச் செய்ய வேண்டும் என்பது மட்டுமேதான்...ஆனால் அதன் பின் அவளது அணைப்பினில் அவன் அடைக்கலமாகிக் கொண்டதெல்லாம் அவளே எதிர்பார்த்திராத நிகழ்வு..
ஆனாலும் அன்றைய நாளின் பின் அவர்கள் இருவருமே முன்னரை விடவும் ஒருவருக்கொருவர் நன்றாக நெருக்கமாகிக் கொண்டார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை...இருந்தும் அவர்கள் உள்ளங்களில் ஒளிந்து கொண்டிருந்த காதலை அவர்களிருவமே ஒருவரிடத்தில் ஒருவர் சொல்லிக் கொள்ளாமலேயே மனதிற்குள்ளேயே காதலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்...
அவள் அதன் நினைவுகளிலேயே முழ்கியிருந்ததில் அறைக்குள் நுழைந்த அரவிந்தனைக் கவனிக்கவில்லை...அவள் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு பார்வையை எங்கேயோ பதித்துச் சிரித்துக் கொண்டிருப்பதையே விசித்திரமாகப் பார்த்துக் கொண்டு வந்தவன்,அவள் முகத்துக்கு நேரே சொடக்குப் போட்டு அவளை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தான்...
"ஹலோ மேடம்...என்ன நின்னுகிட்டே தூக்கமா...??..."
அவனது கேள்வியில் அசடு வழிய நின்றவள்...சாட்டுக்கு ஏதோ ஒரு பதிலைச் சொல்லி மழுப்பிக் கொண்டாள்...
"ஆமா அரவிந்...நின்று கொண்டே தூங்குவது எப்படி...??என்றொரு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்...உங்களுக் தெரியாதா...??..."
"அது சரி...கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலை..."என்று புருவத்தை உயர்த்தியவன்,அதைக் கேட்டு அவள் சிரிக்கவும்...அவனையும் அந்தச் சிரிப்பு தொற்றிக் கொண்டது...
கல்யாணத்திற்கு முன்னெல்லாம் "அரவிந்"என்று அழைத்தவள்,திருமணத்தன்று இரவிற்குப் பின் "அரவிந்தன்"என்றே நீட்டி முழங்கிக் கொண்டிருந்தாள்...ஆனால் இப்போதெல்லாம் அவள் மீண்டும் "அரவிந்"என்றே அழைக்கத் தொடங்கியிருந்ததை அவனது மனம் ஆசையோடு குறித்துக் கொண்டது...
"ஆமா..என்ன சேர் இந்தப் பக்கம்...??.."
"ம்ம்...இரவுச் சாப்பாட்டுக்கு எப்பவுமே டான்னு ஒன்பது மணிக்கு வாற என்னோட பொண்டாட்டியை காணோம்...அதான் நானே வந்து கையோடு தூக்கிட்டுப் போயிடலாம்னு வந்தேன்..."
அவன் அதை வம்பாகச் சொன்னாலும்..அவனது விழிகள் குறும்புடன் "தூக்கவா"என்று கேட்டதில்...அவசரமாகச் சாப்பாட்டு மேசையை நோக்கி நடையைக் கட்டினாள்...ஏற்கனவே ஒரு முறை அவளைத் தூக்கி அவள் பட்ட பாடு போதாதா..??
அவளது அவசரத்தைக் கண்டு அவன் உதட்டோரமாய் புன்முறுவல் தோன்ற...அவனும் அதற்கு மேல் அவளை வம்பிழுக்காமல் அவள் பின்னுடனேயே சென்றான்...
அவனுக்கான உணவினை அவள் போட்டுக் கொடுக்க,அவளுக்கான உணவினை அவன் போட்டுக் கொடுத்தான்...இதுவும் அவர்கள் கடைப்பிடிக்கின்றதில் ஒன்று...அருகருகே அமர்ந்து உணவினை ருசி பார்க்கத் தொடங்கியவர்கள்,அடிக்கடி ஒருவர் முகத்தை ஒருவர் அவரவர் அறியாமல் கள்ளமாய் பார்த்துக் கொண்டார்கள்...
சாப்பிட்டு முடித்ததும் அவள் மறுபடியும் நோட்ஸ் எடுக்க வேண்டுமென்று நூலக அறைக்குள் புகுந்து கொள்ள,அவனும் மடிக்கணிணியோடு ஹோலில் வந்து அமர்ந்து கொண்டான்...நேரம் பன்னிரெண்டைத் தொட்டும் அவள் அறையை விட்டு வெளிவராததைக் கண்டு நூலக அறைக்குள் சென்றே பார்த்தான்...
அங்கே அவள் மேசை மேலே நாலைந்து புத்தகங்களை பரப்பி வைத்து அதற்கு மேலே நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்...புன்னகைத்தவாறே அவளுக்கருகில் சென்று அமர்ந்து கொண்டவன்,அவள் முகத்தைப் பார்த்தவாறே அவளைப் போல் படுத்துக் கொண்டான்...
காற்றில் அவள் முகத்தை மறைத்து அங்குமிங்குமாய் அசைந்து கொண்டிருந்த முடி அவள் அழகை இன்னும் கூட்டிக் காட்டுவது போல் தோன்றியது அவனுக்கு...வழமையாக அதை ஒதுக்கி விடுபவன்...அன்று அதை ரசித்துக் கொண்டிருந்தான்...இருளோடு கலந்திருந்த மெல்லிய வெளிச்சத்தில் அவளின் முகத்திலிருந்த பிரகாசம் அவனுள் புதுவித இம்சைகளைக் கிளப்பி விட்டது...
அவள் இமைகளைத் திறந்து பார்க்கும் வரை அந்த அழகிய நிமிடங்கள் அப்படியேதான் கழிந்தது...அவள் இமைகளைச் சிமிட்டி விழிகளைத் திறக்கவும் அவன் அவசரமாய் எழுந்தமர்ந்து கொண்டான்...கண்ணைக் கசக்கிக் கொண்டே எழுந்தவள்,அவன் எதற்கு அங்கே இருக்கிறான் என்று புரியாமல் விழித்தாள்...பின் அறையைச் சுற்றி நோட்டமிட்டவளுக்கு..அப்போதுதான் தான் எங்கிருக்கிறோம் என்ற நினைவே வந்தது...
"சொரி அரவிந்....காலையிலிருந்து ஒரே வேலை...அந்தக் களைப்பில அப்படியே தூங்கிட்டேன் போல...ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா...??.."
"அப்போவே வந்திட்டன்,நீ தூங்கிட்டிருந்த அழகை ரசிச்சிட்டே இருந்ததில என்னை நானே மறந்து போனேன்..அப்புறம் எங்க உன்னை எழுப்புறது..."என்று அவளிடம் சொல்லத்தான் அவனுக்கும் ஆசையாக இருந்தது...ஆனால் அது முடியாதென்ற காரணத்தினால்,
"இல்லை துளசி...இப்போதான் வந்தேன்...நீ நல்லா தூங்கிட்டு இருந்த...அதான் எழுப்பவும் மனம் வரல..."என்று மட்டுமே சொல்லிக் கொண்டான்...
"ம்ம்...சரி வாங்க போலாம்..."என்றவள் புத்தகங்களை அந்தந்த இடங்களில் வைத்து விட்டு அவனோடு மேலே சென்றாள்...ஏற்கனவே அவள் குட்டித் தூக்கமொன்றை போட்டு விட்ட காரணத்தினால் அவளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் உறக்கம் வந்து விடவில்லை...
ஆனால் அவன் படுத்த உடனேயே தூங்கி விட்டான்...எப்போதும் அவள் தூங்கிய பின் அவளது விரல்களோடு அவனது விரல்களைப் பிணைத்துக் கொள்பவன்..இன்று அவளிற்கு முன்னே உறங்கிப் போனதில்,துளசி அவனது விரல்களை தன் கரத்தினால் மெதுவாகப் பற்றிக் கொண்டாள்....
எப்போதெல்லாம் அவனது கரத்துக்குள் அவளது கரம் அடைக்கலமாகிக் கொள்கிறதோ,அப்போதெல்லாம் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்து கொள்பவள்...அப்போதெல்லாம் மனதின் ஓரமாய்
ஏற்படும் இரசாயன மாற்றத்தையும் உணர்ந்துதான் வைத்திருந்தாள்...ஆனால் அதற்கான காரணம்தான் அவளுக்குப் பிடிபடவேயில்லை...ஆனாலும் அதை அவள் ஆழமாக யோசித்து தன்னைத் தானே குழப்பிக் கொண்டதுமில்லை...
கொஞ்ச நேரத்தில் அவளையும் நித்திராதேவி வந்து அரவணைத்துக் கொள்ள அவளும் இமைகளை மூடி உறக்கத்தை தழுவிக் கொண்டாள்...இவர்களை வேடிக்கை பார்க்க ஐன்னல் வழியே எட்டிப் பார்த்த தென்றலும் அவர்களைக் குளிர்மைப்படுத்திவிட்டு அங்கிருந்து சத்தமின்றியே விடைபெற்றுக் கொண்டது...
தொடரும்....