செய்க செயற்கரியன

விழியில் வடிவதெல்லாம்
இதயத்தின் அழுகையாகுமோ?
ஆனந்தமும் கண்ணீர் தருமன்றோ...!

இதயத்தின் அழுகையெல்லாம்
விழியில் வடிந்திடுமோ?
சில அழுகைகள் மௌனம் மட்டும் கூறுமன்றோ..!

இதயத்தின் புன்னகையெல்லாம்
இதழ்கள் விரித்திடுமோ?
சில சந்தோஷங்கள் கண்ணியம் காக்குமன்றோ..!

இதழ்கள் விரிப்பதெல்லாம்
இதயத்தின் புன்னகையாகுமோ?
காயங்களை கட்டமைக்கவும் சில பூக்குமன்றோ..!

சிந்துவதெல்லாம் விரயமென்று ஆகுமோ?
மழைத்துளிகள் மண்ணுயிரின் ஆதாரமன்றோ…!

வீழ்ச்சியெல்லாம் தோல்வியென்று ஆகுமோ?
விதைகளும் விருட்சமாகுமன்றோ…!

உயிர் தரித்திருப்பதெல்லாம்
வாழ்வதென்று ஆகுமோ?
உயிர் துறந்தபின்னும் வாழச்செய்வன
உன் செயற்கரிய செயல்களன்றோ...!

ஆதலின்,
செய்க செயற்கரியன!
இயலாவிடிலும்
தவிர்க்க தகாதன!

எழுதியவர் : நந்தினி.சு (17-Jan-18, 1:27 am)
சேர்த்தது : Nanthini S
பார்வை : 1048

மேலே