அம்மா பற்றி கவிதைகள்

முதன் முதலாய் பாடிய
முதற்கவிதையே அம்மா
உனை வரிக்க
வடிவெடுத்த வார்த்தைகளோ
வரிசைகளாய்...........

சுமையோடு சுமந்து
சுமை தாங்கியானாய்..
பத்து மாதம் தான் -எனை
பத்திரமாய் சுமந்தாய் அல்ல ,,,
இப்போதும்,,,-என்
சுமைதாங்கும் தூண்தானே
நீ அம்மா..

உன்.........
கற்பனைக் கருவறையுள்
கருத்தரித்த கனவுகளோ
கடலைப்போல் என்றாய்
அத்தனையும் .......
நடந்ததும் நடக்காததுமாய்...
நகர்கிறது உன் ஏக்கம்...

வாழ்க்கையோடு காலம்
வலிந்திளுக்கும் யுத்தத்தில்
வலிமையோடு வாழ
வழிகள் பல
கற்றுத் தந்தாய்..
வாழ்கிறேன் என்றாலும்
முடியவில்லை என்னால்..

உதைத்து உதைத்து
உருண்டு புரண்டு -உன்
உயிர் வாங்கிய போதும்
உனக்கு வலி எடுத்திருக்கும்-ஆனால்,,,
ஈரைந்து மாதமும்
உவகையோடுதானே காத்திருந்தாய் -அதனால்
உனை உதறிச்செல்ல
உளம் மாற்றிய
சூழல்கள்... அத்தனையும்
தூக்கி எறிந்தேன்..
ஏனெனில் நீ
உடைந்து போவாய் என்பதற்காய் !!!
உன் கரம் பற்றி வாழ்கின்றேன்...

விலகி வந்த போது
விதியென்று நினைத்தேன்..
பிரிவு எம்மை
பிரித்து வைத்தாலும்
அதை வெல்ல
பாதைகள் தேடுகிறேன்..
காத்திருப்பாயா எனக்காய்!!!

ஏற்றங்களில் ஏறும் போது
பெருமையடைந்தேன் உன் பிள்ளையென்று..
வாழ்க்கை வலித்த போது
வாய்விட்டு கேட்டேன்...
ஏன் என்னை பெற்றாய் என்று!!!
சிரித்த முகத்துடன்
தந்தாய் வரைவிலக்கணம்..
தோல்வியும் துன்பமும்
தோளின் மேல் குந்திய போதும்
முதுகில் தடவும்
முதல் மனிதமும் நீதானே,,,

எழுதியவர் : (17-Jan-18, 5:59 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 1817

மேலே