பாசமில்லா உறவுகள்

எம் இதயம் கவர்ந்த செல்வமே ஏன் - இந்த
உலகம் கடந்து சென்றாய் ...?

மலர்ந்த பூவொன்று
வாசனையை பரவச் செய்து
வசந்தத்தை பறித்துச் சென்றது .....

நினைவுகள் நித்தம் வந்து
நிம்மதியை தொலைக்கின்றது .....
வருமா மீண்டும் வசந்தம் என்ற
தொடரான கேள்வியோடு
தொடர்கின்றது எம் கண்ணீர் பயணம் .....

பத்து மாதம் சுமக்கவில்லை- ஆனால்
அரவணைக்கும் உன் அன்பில் -நீ
தாயின் மறு உருவம்......

வேதனைகள் வேர்வரை சென்றாலும்
விழுதுகளாய் எம்மைத் தாங்கினாய் ....
உன் குரல் கேளாமல் பரிதவிக்கும்
எம் குமுறல்கள் - உன்
காதுகளில் கேட்கிறதா ?

ஆறாத துயரம் கூட ஆற்றும்
உன் செல்ல மொழி ..
தீராத சோகமெல்லாம் தீர்க்கும்
உன் புன்னகை .....

உயரங்கள் நாம் காண எம்
வாழ்க்கைப் பயணத்தில்
துணையாய் நீ நின்றாய்
பணம் தேடி அலையும்
பாசமில்லா உலகினில்- உன்
போல் பாசத்தை மிஞ்சிட
யார் உள்ளனர் இப் பூமிதனில்???

ஏக்கம் மட்டும் மிஞ்ச
நீர்த்துளிகள் நிறைகின்றன....
காலங்கள் கரைந்தாலும்
ஆயிரம் உறவுகள் எம் அருகில் இருந்தாலும்
எம் கண்களில் ஒளிரும்
உன் அன்பின் வெளிச்சம் .......

உன் பிரிவால் தவிக்கும் உன் உறவுகள்

எழுதியவர் : (1-Feb-18, 9:04 am)
பார்வை : 3086

மேலே