விவசாயி

பூமிக்கு பச்சை வண்ண சேலை, வானுக்கு நீல வண்ண
சேலை ,நடுவில் அருவியாய் பொங்கும் சந்தோஷங்களுடன் நான்! நெல் வயல்கள்,நாற்று நடும்
பாட்டோடு பாவையர்கள்,புல் கட்டோடு பூவையர்கள்!
ஏரில் கட்டிய காளைகளோடு கட்டிளங்காளையர்,
கவலை மறந்து கவலையில்( ஏற்றம்)நீர் பாய்ச்சும்
உழவர்கள்,நீரில் தவளைப் பாட்டு,வானில் குயில் பாட்டு
நடுவில் தேன் குடிக்கும் வண்டுகளின் ரீங்காரம் சலசலக்கும் நீரோடையின் சங்கீதம்,தெனறல் காற்றின்
சுகந்தம்,நகரும் நொடியெல்லாம் சொர்க்கம்,
அடடா! கிராமத்தான் கொடுத்து வைத்தவன்,(விவசாயி)
நகரத்தானுக்கு ஒவ்வொரு நிமிடமும் நரகம்.
(என்ன,காலையிலேயே கனவா?)
விவசாயி ,அவன் சேற்றில் கால் வைக்க நாம் சோற்றில்
கை வைத்தோம்.இன்று,நீர் தேங்கிக் கிடந்த நெல் வயல்
போய் அவன் கணக்கில் கடன் தேங்கிக் கிடக்கிறது.
அரிசி புடைத்த முறத்தால் புலி விரட்டிய உழவன்
மனைவிக்கு, இன்று எலிக் கறிக்கு கூட நாதியில்லை,
தானியம் விளைந்தாலன்றோ வயல் தேடி எலியும் வரும்
ஒன்றிரண்டு வந்தாலும் அவை,அரவுக்கிரையாகிடுமே!
உயிர் வளர்க்கவே பாடுபடும் இந்த பாட்டாளி எங்கே
பயிர் வளர்ப்பது,ஏரோட்டி நெல் விதைத்து சோறூட்டிய
விவசாயி இன்று கூறு போட்டு நிலத்தை விற்கிறான்,
காரோட்டி வந்த சில கணவான்கள் அவன் நிலத்தில்
(bore well) போரோட்டி மிச்ச நீரையும் உறிஞ்சி காசாக்கி
சென்று விட்டான்;இன்று நீரும் இல்லை,ஏரும் இல்லை,
எருவும் இல்லை,காப்பாற்ற யாரும் இல்லை;சொர்க்க
பூமியில் வாழ்ந்த விவசாயி இன்னுயிர் நீக்கி வானுலக
சொர்க்கம் தேடுகிறான்!
ஒவ்வொருவரும் வீட்டிற்கு நான்கு செடி வளருங்கள்🍎
விவசாயத்தில் கலந்து விட்ட விஷசாயம் விலக்கிடுங்கள்!

எழுதியவர் : பாலமுருகன்பாபு (2-Feb-18, 9:39 am)
Tanglish : vivasaayi
பார்வை : 1687

மேலே