என் இதயத்தில் நீ பிறந்த நாள் 3

நிச்சயமாய்
நேசிப்போமா என்ற
நிதர்சனம் தெரியாமலே
நடந்து முடிந்துவிடுகிறது
நிஜத்தில் பல
நிச்சயதார்தங்கள்
நீட்டினேன் விரலை நானும்
நீ மோதிரம் இடவே !

அந்தப் புகைப்படம் :

எல்லோர் வாழ்க்கையிலும்
சில பல அழகான
புகைப்படங்கள் இருக்கும்
நினைவுகளை
சுமந்து கொண்டு
இன்னும் நம்மோடு
பழங்கதைகள் பேசியபடி

கமந்து கிடந்தது
பொக்கை வாயுடன்
சிரிக்கும் மழலை
கால புகைப்படம்

சட்டை இல்லா
பூ பாவாடை
போட்ட புகைப்படம்

ஒன்றாம் கிளாஸ்
வகுப்புல முதல்
வரிசையில் நிற்கிற
க்ரூப் போட்டோ

வயதுக்கு வந்த நேர
மஞ்சள் நீராட்டுவிழா
தாவணி புகைப்படம்

எல்லாவற்றுக்கும் மேலாக
புடவையும் பூவுமாய்
புன்னகை சேர்த்து
சரிந்து நிற்கும்
அந்த ஒற்றை
புகைப்படம் இன்னமும்
ஒட்டிக் கிடக்கிறது
என் அலமாரியில்

இப்போது பார்க்கும்
போதெல்லாம் பெரும்
சிரிப்பைத் தரும்
அந்த புகைப்படம்
சிரிப்பை மட்டுமல்ல
வெட்கத்தையும் தான்

எனக்கானவனைத் தேட
என் பெற்றோர் கையில்
ஒருகாலம் வெகு
பத்திரமாக இருந்த
அந்த புகைப்படத்தின்
நகலொன்று தானது

எனக்கானவன் இவன்
என்று அப்பாவும்
அம்மாவும் சேர்ந்து
காட்டிய ஒரு
கள்வனின் புகைப்படமும்
இப்போது அதே
அலமாரியில் இருந்து
நமட்டுச் சிரிப்பு
சிரித்துக் கொண்டிருக்கிறது

இப்போது பெரும்
சிரிப்பைத் தரும்
புகைப்படம் எடுத்த
நாளொன்றில் அன்று
பெரும் அமர்க்களம்தான்
நடந்தேறியது வீட்டில்

அன்றைக்கு காலை
விடுப்பில் வந்திருந்த
என்னிடம் அம்மா
காபியைத் தந்தபடி
இன்றைக்கு சாயந்திரம்
புகைப்படம் எடுக்கப்
போய் விடலாம்
என்று பொடிபோட்டு
பேச ஆரம்பித்தார்கள்

கடுத்த காப்பியைக்
குடித்ததுபோல
மாறிய முகத்தோடு
இப்போதான் மா
வந்தேன் சேவென்று
சலித்தபடி எழும்பிவிட்டு
நான் வரவில்லை
என்று தோட்டம்
பார்க்க போனேன்

அம்மா மேலொன்றும்
சொல்லவில்லை ஏன்
சாய்ங்காலமும் தொந்தரவு
செய்யவே இல்லை
சந்தோசமாக இருந்தேன்
கடந்த விடுமுறையை
கடத்தி ஓடியதைப்போல
இந்த மூன்று நாட்களையும்
கழித்து ஓடிவிடலாமென்று

இரவு நிலவு
மவுனமாய் ஜன்னலோடு
வந்து ஏதோதோ
பேசியது இருந்தும்
மனதே சரியில்லை

அம்மா கட்டில்மேல
படித்திருக்க நான்
அவள் கீழேதான்
பாயில் படுத்திருக்கிறேன்

நிலவு ஒளியில்
அம்மா அதிக
அழகோடு அமைதியாய்
உறங்கி கொண்டிருந்தாள்

நான் ஏன் இப்போதெல்லாம்
அம்மாவிடம் சண்டை
போடுகிறேன் ஐயோ
எல்லாம் இந்த
வரன் பார்க்க வேண்டும்
என்ற அம்மாவின் உந்துதலிலும்
இப்போ வேண்டாம்
என்ற என் எரிச்சலிலும்
தான் அரங்கேறுகின்றன
கோபத்தின் களியாட்டங்கள்

கோபம் கொண்டு
நடித்து நாடகமாடிய
குழந்தை மனசுக்கு
இப்போது அம்மாவைக்
கட்டிக்கொண்டு வேண்டாம்ம்மா
என்று அழுதிட வேண்டும்போல
எண்ணங்கள் எம்பிக்கொண்டிருந்தன

உறங்கிக்கொண்டிருந்த அம்மாவிடம்
உளறிக்கொண்டே பின்னெப்படியோ
ஒருவாறு தூங்கிபோனேனோ

அடுத்தநாள் காலை
அம்மாவிடம் சண்டை
போட தோன்றவில்லை
அவள் கால்களை
பூனைக்குட்டியாய்
சுற்றிக் கொண்டே
இருந்தேன்

அலுவலக அலட்டல்
கிடைத்த பாராட்டு
விடுதி தோழியின்
வீடு விஷேஷம் என
கதை கதையாய்
பேசிக்கொண்டிருந்தேன்
அவளும் வரன்பற்றி
பேச்சு எடுக்காததால்
நீண்டுகொண்டே போனது
அம்மா மகள் கதை
அழகான நதியாய்

மாலை மயங்கிய
நேரத்தில் அவள்
வந்தாள் எதிர்பாராததால்
ஆர்ப்பரித்தேன் நான்
அத்தான் கிளம்பிவிட்டார்
தங்கையும் அக்காவும்
கதை பேசுங்கள்
என்று குசுகுசுத்துவிட்டு

அவனும் வந்தான்
அவன் எங்கள்
குடும்பத்தின் முதல்
குட்டிக் கண்ணன்
அவன் நடைபோட
தொடங்கி இருந்த
பருவமது அவன்
சித்தி சித்தி என்று
சிணுங்க சினுங்க
நான் சிலிர்த்து
முத்தங்கள் கொடுக்கும்
காலம் அது

இரவு சாப்பாட்டு
வேளை முடிந்து
மொட்டை மாடி
போவோமா என்று
அக்கா கேட்க
உற்சாகமாய் எழுந்தேன்

குழந்தை குடு குடுவென
விளையாடியதை ரசித்துக்கொண்டிருந்த
என் ரசனையை மெல்ல
கலைத்து அவள்
ஆரம்பித்தாள் ஏன்
புகைப்படம் எடுக்கல என்று

ஆரம்பித்துவிட்டாளா என்று
அவளை அமைதியாகப்
பார்த்தேன் இப்போது
அம்மா மொட்டைமாடி
நீங்க போங்க நான்
வரவில்லமா என்று
சொன்னதன் காரணம்
புரிந்தது
திடீரென்று அக்கா
வீடுவந்து தங்குவது
ஏனென்றும் புரிந்தது

பெருமூச்சு சேர்த்தெடுத்து
ஏனோ பிடிக்கல
என்றேன்
வயசு ஆகவில்லேயன்று
நினைக்கிறியா கேட்டாள்

இன்னும் கொஞ்ச நாள்
என்று இழுத்தேன்
அவள் நிறைய
பேசினாள்
கண்ணன் அவள்
மடியில் விழுந்து
தூங்கும் வரை

அவள் பலமணி
நேரம் பேசியதில்
மனதில் எல்லாம்
பதியவும் இல்லை
பிடிக்கவும் இல்லை

ஆனால் அத்தான்
என்னை நல்லா
பார்த்துக்கறாங்க
அப்பா மாதிரி
பார்த்துக் கொள்கிறார்
அப்பாவுக்கு மேலாக
பார்த்துக் கொள்கிறார்
உன்னையும் ஒருவர்
அப்படி பார்த்துக்க
வருவார் என்றாள்
அக்கா அப்போது
அத்தானின் அவளாக
எனக்குத் தெரிந்தாள்
ம்ம் கொட்டிக்கொண்டிருந்தேன்

என் முகம் பார்த்து
சொன்னாள் அவள்
உன்னைப் பத்தியே
யோசிக்கிறாய் பேசுகிறாய்
உனக்கு வயசாகவில்லை
ஆனால்
அப்பாவுக்கு வயசாகிவிட்டது
மனதில் வைத்துக்கொள்
காலாகாலத்தில் எல்லாம்
அவருக்காகவாது நடக்கணும்
என்று அவள் சொன்னதுதான்
தாமதம் மனசுக்குள்
பெரும் புயல் கரையேறியது

அப்பாவின் நரைமுடி
தோய்ந்த தாடியும்
முகமும் அன்று
இரவு என்னை
என்னவோ செய்தது

காலைல கையில
காபியோடு போலாமா
புகைப்படம் எடுக்க
புன்னகையோடு கேட்ட
அக்காவிடம் அன்று
அலட்டாமல் அழகாய்
குழந்தையாய் சரியென்றேன்
சின்னதாய் ஒரு
சிணுங்கலோடு
புடவை உடுத்து
கடைப்பக்கம் போனால்
எல்லோர்க்கும் தெரியுமே
என்று இழுத்தேன்

அவளும் இதை
அனுபவித்ததாலோ என்னவோ
அண்ணனிடம் சொல்லி
புகைப்படக்காரரை வீட்டுக்கு
வரவே செய்யலாமென்றாள்.

சுடிதார் என்றேன்
எப்போதும் சுடிதார்
போட்டு பழக்கப்பட்ட
நான் புடவைதான்
என்றாள் அவளே
புடவையைத் தேர்வும்
செய்தாள்

கனகாமர வண்ணப்புடவை
அக்கா திருமணத்திற்கு
மாப்பிள்ளை வீட்டார்
சீராக தந்திருந்த
புடவை அது
இது சூப்பராக
இருக்கும் உனக்கு
என்று சொன்னாள்
உடுத்தியும் விட்டாள்.

அதற்குள் அண்ணன்
பூவங்கி வந்துவிட்டான்
இன்னும் பத்துபதினைந்து
நிமிடத்தில் வருவார்
என்று சிரித்தான்

கண்ணாடியில் நான்
என்னைப்பார்த்து
சிரித்துக் கொண்டிருந்தேன்
கூடவே கொஞ்சம்
ரசித்துக் கொண்டிருந்தேன்
புடவைக்குள் என்ன
மாய மந்திரமுள்ளதோ
கட்டும் பெண்களையெல்லாம்
சட்டென்று தேவதையாக்கிவிடுகிறதே

நான் வைத்திருந்த
சின்னப் பொட்டை
எடுத்துவிட்டு பெரிதாக
ஓன்று ஓட்டினாள்
போட்டோவில் தெரியாதாம்

அவள் என்னைவிட
அதிகம் என்னை
ரசித்து அழகுபடுத்திக்
கொண்டிருந்தாள் பிள்ளையை
கொண்டாய் கெட்டி
பள்ளிக்கு அனுப்பும்
அன்னையாக அப்போது
அவள் தெரிந்தாள்

மாடி ஏற தொடங்கினோம்
மாவிலைகள் பக்கத்தில்
எடுத்தால் நல்லாயிருக்கும்
என்று சொன்னாள்

புகைப்படக்காரர் வந்து
அப்படி நில்லுங்க
இப்படி பாருங்க
அப்படி சிரிங்க
லேசா சரிங்க
என்று சொல்லிக்கொண்டிருந்தார்
லேசான கடுப்புடன்
யாரென்று தெரியாதவர்
முன்னாலே ஈயென்று
சிரிப்பது எப்படி
என்று முனகியபடி
விடுங்க சாமி
என்று மனசு
உள்ளுக்குள் சொல்லியது
இரண்டு மூன்று
எடுங்க நல்லா
என்றான் அண்ணன்
நல்லா எடுத்துவிடலாம்
அவர் சிரித்தார் .

க்ளிக் க்ளிக்
முடிந்தது புகைப்பட நேரம்
இது இது
என்று சிலப்படங்கள்
காட்டினார் அவர்
காமெராவில்
நன்றாகவே இருந்தது

இன்னும் சில நாட்கள்
கழித்து கவரில்
வந்து சேர்ந்தது
புகைப்படம் எல்லாம்
சாய்ந்தபடி சிரித்தபடி
சிலையாய் நான்
பல முகங்களோடு
புரியாத கனவுகளோடு
யாரையோ தேடியபடி
எனக்கான என்னவனை !!

எழுதியவர் : யாழினி வளன் (4-Feb-18, 4:19 am)
பார்வை : 205

மேலே