வெள்ளிநிலம் -குழந்தை வாசிப்பு

அன்புள்ள ஜெ,



நவம்பர் 2017ல் இருந்து 28 அத்தியாயங்களாகச் சுட்டி விகடனில் வெளிவந்த தங்களின் ‘வெள்ளி நிலம்’ தொடரை, விகடன் இணையதளத்தில் தொடர்ந்து வாசித்து வந்தேன்.



ஸ்பிடி சமவெளியில் ஒரு பௌத்த மம்மி கண்டுபிடிக்கப்படுவதில் ஆரம்பித்து, அதைத்திருட முயலும் ஒரு குழு, ராணுவத் தலையீடு என்று ஒரு புதையல் வேட்டையைப்போலத் தொடர்ந்து திபெத் வரை சென்று முடிகிறது. வெறும் கதையாக இல்லாமல், அந்த நிலத்தைப்பற்றிய அடிப்படைச் செய்திகள், சரித்திரம்,மக்களின் உடலமைப்பு, வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், தற்போதைய ராணுவக் கேந்திரங்கள், தகவல் தொடர்பு, பனிமலை அவர்களுக்கு அளிக்கும் நடைமுறைச்சிக்கல்கள், பனிப்புயலால் ஏற்படும் ஆபத்துகள், தற்காப்பு என்று ஏராளமான தகவல்கள்.



ஒவ்வொரு அத்தியாயத்தின் அடியிலும், அதில் இடம்பெற்ற ஏதேனும் ஒன்றைப்பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. இந்தக்குறிப்புக்களையே தனியாக ஒரு புத்தகமாகப் போடலாம். லாப்ரடார் ரெட்ரீவர் நாய், லாசா நாய், பாராசூட் கண்டுபிடிப்பு, சீன எழுத்துருக்கள், மோர்ஸ் தந்தி, கற்காலம் முதல் இரும்புக் காலம் வரையிலான வரலாற்றுக் காலப் பகுப்பு, அஸ்ஸாமின் மொய்தாம்கள், சீனாவின் களிமண் ராணுவம் என்று பலவிதமான தலைப்புகளில் சுருக்கமான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ட்ரோன்களின் பெயர்க்காரணம் எனக்கு ஒரு புதிய செய்தியாக இருந்தது. இறுதி அத்தியாயம் தொன்மையான லியாங் ஷு பண்பாடு பற்றிய குறிப்புடன் முடிகிறது. இறுதி அத்தியாயத்தில் கதையில் வரும் கொற்றவை – லியாங்ஷூ பண்பாட்டுத் தொடர்பு ஒரு ஆச்சரியம்.



கதையில் முக்கியத் துப்புக்களைக் கண்டறியும் நாக்போ நாய், அதனுடன் பேசும் சிறுவன் நார்போ, கேப்டன் பாண்டியன், ஆராய்ச்சியாளர் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் என்ற நால்வர் அணியின் கூட்டுத்திறமை, திபெத்திய லியாங்ஷூ புரட்சியாளர்களுக்குச் சாத்தியமாகாததைச் சாத்தியமாக்குகிறது. மம்மியைக் கண்டு பயந்து ஓடுவதும், மனிதர்களுக்கு அறிவில்லை என்று அடிக்கடி திட்டுவதும், சடை நாயைக்கண்டு பம்மி அழுவதும், ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கப் பயந்து தகறாரு செய்வதும் என்று நாக்போ ஒரே சேட்டை.



இந்தத் தொடர் வந்துகொண்டிருந்தபோது, அலுவலக வேலையாக மும்பை செல்லும்போது விமானத்தில் குடிப்பதற்கு கஷ்மீரி கவா என்ற டீ கொடுத்தார்கள். சர்க்கரைக்குப் பதில் உப்பு. தவறாகக் கொடுத்துவிட்டார்களோ என்று கேட்டபோது, இந்த டீயை உப்பு சேர்த்துத்தான் குடிப்பார்கள் என்றார்கள். நான் மிளகுத்தூளையும் சேர்த்துக் குடித்தேன். சூப்பு போல இருந்தது. அடுத்த வாரம், வெள்ளி நிலத்தில் கதாபாத்திரங்கள் கஷ்மீரி கவா குடித்தபோது மிகவும் மகிழ்ந்தேன்.



இந்தக் கடிதம் எழுதுவதற்கு முன் என் இளைய பெண்ணிடம் தொடரைக் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். 15 நிமிடங்கள் கழித்துப் பார்த்தபோது முதல் பக்கம் தாண்டவில்லை. தமிழில் சரளமாகப் படிப்பதில் தடை. இரண்டு அத்தியாங்களைப் படித்துக்காட்டினேன். கிழவர் சோடாக் காதுகேளாமல் மற்றவர்களைத் திட்டும் இடத்தையும், கூட்டத்தின் கால்களுக்குள் நாக்போ தலையை விட்டு எட்டிப்பார்க்கும் இடத்தையும் சிரித்து ரசித்தாள். கதை mysterious இருப்பதாகவும்,நகைச்சுவைப்பகுதி நன்றாக இருப்பதாகவும், டாவா புகைபிடிப்பது பிடிக்கவில்லை என்றும் சொன்னாள். புத்தகமாக வாங்கிக் கொடுத்தால் படிப்பாயா என்று கேட்டதற்கு, படித்துக் காண்பித்தால் சரி என்று சொன்னாள். கதை கேட்பதற்கும், வாசிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைப்பற்றிய தங்கள் பதிவு ஞாபகம் வந்தது. வாசிக்க வைக்கவேண்டும்.



நன்றி.



அன்புடன்,

S பாலகிருஷ்ணன், சென்னை.



அன்புள்ள பாலகிருஷ்ணன்



இன்றைய குழந்தைகளுக்கு மொழித்திறனை விட பொது அறிவும் கதையறிவும் அதிகம் – காரணம் காட்சியூடகம். அவை காட்சியூடகம் வழியாக நெடுந்தொலைவு சென்றுவிடுகின்றன. அதன்பின் எளிய குழந்தைநூல்கள் ஆர்வமூட்டுவதில்லை. ஆகவே எளியமொழியில் ஆனால் தீவிரமான சிந்தனைகளுடன் எழுதப்பட்ட குழந்தைநூல்கள் தேவை என்பது என் எண்ணம் .வெள்ளிநிலம் அப்படிப்பட்ட ஆக்கம்



ஆகவே அவர்கள் வாசிக்கச் சோம்பல்படுவார்கள். வேகமற்ற வாசிப்பை விட உள்ளம் விரைந்து முன்னால் செல்வதன் சிக்கல் அது. அதற்கு நாம் நல்ல நூல்களை வாசித்து சுவையை காட்டவேண்டும். கூடவே கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்புப் பழக்கத்தையும் உருவாக்கவேண்டும். எந்த இடத்தில் வாசித்துக்காட்டுவதை நிறுத்திவிடுவது என்பது மிக முக்கியமானது



ஜெ

எழுதியவர் : (9-Feb-18, 5:23 pm)
பார்வை : 91

மேலே