காதலர்கள் கவனத்திற்கு பகுதி 4

1. அங்கு ஏதோ ஒரு

அரசனின் புகழை நிலைநாட்ட

அரண்மனை கட்டும் பணி

நடக்கிறது போலும்…



எங்கு நோக்கினும்

வடித்து முடிக்கப்பட்ட அழகிய சிற்பங்களும்

சிற்பிகள் செதுக்கிக் கொண்டிருக்கும்

அரைகுறை சிற்பங்களும்

இன்னும் செதுக்கத் துவங்காத

சிலைகளுக்கான பெரிய பாறைகளும்



எண்ணமுடியாத அளவில்

எத்தனையோ யானைகளும்

கட்டுமானப் பணியிலிருக்கும்

கணகற்ற அடிமைகளும்

மேற்பார்வையில் இருக்கும்

அரசாங்க மந்திரிகளும்



இன்னும் நினைவிலில்லாத

எத்தனையோ காட்சிகள்…

சற்று தொலைவில்

இயற்கையும் பிரமிக்கும் அழகில்

பேரழகி சிலை ஒன்று



என்ன இது…? !!

துண்டிக்கப்பட்ட கைகட்டைவிரல் ஒன்றும்

சற்று நேரத்திற்கு முன்னால் சிந்தி

இன்னும் உறையாத குருதியும் மண்ணில்

எந்த சிற்பியுடையதென்று தெரியவில்லை





இன்னும் சற்று தொலைவில்

உதிர்ந்த சில முடிகளும்

உடைந்த சில வளையல் துண்டுகளும்

அறுந்து சிதறிய சில

பாசிமணிகளும் பரவிக்கிடந்தன

அடையாளம் கண்டுவிட்டேன்

நிச்சயமாய் இது உன்னுடையதுதான்…



மனம் வெடித்து உயிர் பதைத்து

ஓடுகிறேன்… ஓடுகிறேன்…

நண்பன் உதைத்து

உறக்கம் கெடுத்துவிட்டான்

கனவும் கலைந்துவிட்டது.

2. விமானத்தின் இரைச்சல் கேட்டு

நீ அண்ணாந்து பார்க்கையில்தான்

தற்செயலாகப் பார்த்தேன்

உன் கழுத்துப் பாசிமாலையின்

நுனியில் தொங்கும்

மூன்று முத்துக்களில்

ஒன்றைக் காணவில்லை


3 பேருந்துப் படிக்கட்டில்

கால் இடறியபோது

நீ கண்களில் காட்டிய

பதற்றத்தைப் பார்த்துவிட்டு

விழுந்திருக்கலாம் என்றே

தோன்றுகிறுது எனக்கு

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (11-Feb-18, 7:35 pm)
பார்வை : 141

மேலே