கண்ட நாள் முதலாய்-பகுதி-45

....கண்ட நாள் முதலாய்.....

பகுதி : 45

இன்றோடு ஒருவாரமாகிவிட்டது அரவிந்தனும் துளசியும் ஒருவருக்கொருவர் பேசி..அவனோடு பேசுவதற்கு அவளும் இந்த ஏழு நாட்களாய் எவ்வளவோ முயன்றுவிட்டாள்...ஆனால் அன்று அவளைவிட்டு விலகியவன்தான் அதன் பின் அவளை முழுதாகவே தவிர்க்கத் தொடங்கிவிட்டான்...

ஏற்கனவே அவன் அன்று கடற்கரையில் நடந்தவற்றை சொல்லாமல் விட்டதற்கான காரணத்தை எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்தவள்,அரவிந்தனின் முற்றுமுழுதான விலகலில் துடிதுடித்துப் போய்விட்டாள்...முதன் முறையாக அவன் அவளிடம் காட்டிய இந்த விலகல் அவள் மனதினை மிகவும் பாதித்தது...

அவர்கள் இருவரது வாழ்க்கை முறையுமே முன்னதிலிருந்து இப்போது தலைகீழாக மாறியிருந்தது...ஒன்றாகவே வேலைக்குச் சென்று வருபவர்கள் தனித்தனியாக செல்லத் தொடங்கியிருந்தார்கள்...ஒன்றாக அமர்ந்து உணவருந்துவர்கள்,சாப்பாட்டையே மறந்து ஒருவருக்குள் ஒருவர் கண்ணீரில் மூழ்கிக் கொண்டார்கள்....

திருமணம் ஆன நாளிலிருந்து இருவருக்குள்ளேயுமே ஒரு சிறிய இடைவெளி இருந்திருந்தாலும்...இருவருமே மனதளவில் ஒன்றாகத்தான் இருந்தார்கள்...ஆனால் இப்போது அவர்கள் உள்ளங்களுமே இரண்டாகிப் போனதில் பிரிவென்ற சொல் அவர்கள் இருவரையையுமே துரத்தத் தொடங்கியிருந்தது..

பேசித் தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவுமே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்...ஆனால் அவன் பேசுவதற்கே தயாராக இல்லாத போது அவளால் மட்டும் என்ன செய்துவிட முடியும்...??...பரத் ஸ்வேதாவின் திருமணத்திற்குச் செல்லும் போது கூட அவன் அவளிடத்தில் நன்றாகத்தானே பேசினான்...அங்கே சென்ற பின்னர்தான் ஏதோ நடந்திருக்கிறது என்று ஊகிக்க முடிந்த அவளால் அது என்னவென்றுதான் புரிந்து கொள்ளவே முடியவில்லை...

அவளும் எப்படி எப்படியெல்லாம் மூளையைக் கசக்கி யோசித்துப் பார்த்துவிட்டாள்...ஆனால் அவனின் விலகலுக்கான காரணம்தான் அவளிற்குப் பிடிபடவேயில்லை...இதையே யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தவள்,கடிகார மணியின் சத்தத்தில் விழித்துக் கொண்டாள்...

கடிகாரம் காட்டிய நேரம் அவள் வேலைக்குக் கிளம்ப வேண்டும் என்பதை நினைவுபடுத்த விரைந்து தயாரானவள்,பைக்கில் ஏறிப் பறந்தாள்...அவனோடு கதைத்துச் சிரித்தவாறே காரில் சென்ற தருணங்கள் எல்லாம் அப்போது அவளை ஒன்றுசேர்ந்து வதைக்கத் தொடங்கின...அவற்றை எல்லாம் கடினப்பட்டு பின்னுக்குத்தள்ளியவள்..பைக்கை ஓட்டுவதில் தன் கவனத்தைப் பதித்துக் கொண்டாள்...ஆனாலும் அரவிந்தனையே சுற்றிக் கொண்டிருந்த அவள் மனதைத்தான் அவளால் எவ்வளவு முயன்றும் திசைதிருப்பிக் கொள்ளவே முடியவில்லை....

அங்கே அலுவலகத்தில் அமர்ந்திருந்தவாறு எதிரே தெரிந்த கணனியின் திரையினை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனும் அவளின் மனநிலையில்தான் இருந்தான்...அவள் என்னவென்று புரியாமலேயே தவித்துக் கொண்டிருக்கிறாள் என்றால்,இவன் அறியக் கூடாததனைத்தையும் அறிந்து தொலைத்ததில் அதையே நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான்...

நிகழ்காலத்தில் அவள் மனம் வென்றவனாய் அவன் மட்டுமேதான் இருக்கிறான் என்பதில் அவனுக்கு எந்தவித சந்தேகங்களுமே இருக்கவில்லை...அவளுக்கு இனி என்றுமே அவன் மட்டும்தான் என்பதில் அவன் மனம் கர்வம் கொண்டாலும்...அவள் மனதிற்கு முதல் காதலனாய் இன்னொருத்தன் இருந்திருக்கிறான் என்பதில்தான் அவன் மனம் அடிவாங்கிக் கொண்டது...அதிலும் அது அவனின் தம்பியாகவே இருந்து வைத்ததில் அரவிந்தனின் மனம் சொல்லமுடியாத துயரத்தில் சிக்கித்தவித்துக் கொண்டிருந்தது....

இந்தக் குழப்பத்தில் தவித்துக் கொண்டிருந்தவனால் துளசியிடம் முகம் கொடுத்துக் கூட பேச முடியவில்லை...அதனாலேயே இந்த ஒருவாரகாலமாக அவளைத் தவிர்த்தே வந்தான்...அதனால் அவள் எவ்வளவு காயப்படுவாள் என்பதை அறிந்தும் அவளிடத்திலிருந்து அவன் விலகியேதான் இருக்கிறான்...

ஆனால் எவ்வளவு காலத்திற்குத்தான் அவனால் அவளைவிட்டு விலகியிருக்க முடியும்..??இந்த ஏழு நாட்களாய் ஒரே வீட்டில் இருந்துமே அவளிடம் பேசாமல்,அவளைப் பார்க்காமல்..எவ்வளவு கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அவன் மட்டுமே அறிவான்...

என்று அவளை அந்தக் கடற்கரையில் வைத்துப் பார்த்தானோ அன்றே அவளிடம் அவன் மொத்தமாய் விழுந்துவிட்டான்...அவளின் சின்னச் சின்ன அசைவுகளைக் கூட அவள் அறியாமலேயே அன்று ரசித்துக் கொண்டிருந்தவனின் மனதினை அவளும் அவன் அறியாமலேயே களவாடிக் கொண்டாள்...அதன் பின் அவளோடு நடந்த மோதல் அவனே எதிர்பார்க்காதது...

அன்று அவனிடத்தில் அவள் காட்டிய வெட்கத்தை இன்று நினைக்கையிலும் அவன் மேனியெங்கிலும் சில்லென்ற உணர்வலைகள் தோன்றி மறைந்தது...அதன் பின் அவள் அங்கிருந்து செல்லும் வரை அவளையே பார்வைகளால் தொடர்ந்து கொண்டிருந்தவன்,அவளது தேடலையும் மறைவாக இருந்து ரசித்துக் கொண்டுதான் இருந்தான்....

ஆனால் அதை இன்று நினைத்துப் பார்க்கையில் அன்றைய அவளின் தேடல் அவனுக்கானதா??இல்லை அர்ஜீனுக்கானதா??என்பது புரியாமல் குழம்பி நின்றான்....அன்று அவளின் விழிகள் அவனைத் தேடி அலைபாய்ந்ததை எண்ணி சந்தோசப்பட்டுக் கொண்டவனால் இன்று சந்தோசப்பட்டுக் கொள்ள முடியவில்லை...

அன்று அர்ஜீனும் அவனுமாகத்தான் கடற்கரைக்கு வந்திருந்தார்கள்...அரவிந்தன் தனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்தவாறு காருக்குள்ளேயே அமர்ந்துவிட...அர்ஜீன் காரின் வெளியே நின்று கடலை ரசித்துக் கொண்டிருந்தான்...ஆனால் எதேட்சையாகத் திரும்பிய அவர்கள் இருவரது பார்வையுமே துளசி ஒருத்தியிடத்திலேயே நிலைத்துப் போனதை காலத்தின் விளையாட்டு என்றுதான் சொல்ல வேண்டும்...

இடையிலேயே அலுவலகத்திலிருந்து அழைப்பு வரவும் அர்ஜீன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்...ஆனால் அரவிந்தனோ துளசி அங்கிருந்து செல்லும் வரையிலும் அவளை பார்வைகளால் தொடர்ந்த வண்ணமேதான் இருந்தான்...அதன் பின் அவளையே அவனுக்கான மனைவியாக வீட்டில் பேசி முடித்ததெல்லாம் அவனே நினைத்துப் பார்க்காதது...

அடுத்தடுத்து அவனது வாழ்க்கையில் நடந்த எதிர்பாராத நிகழ்வுகளில் ஆனந்தத்திலேயே சுழன்று கொண்டிருந்தவன்...திருமணம் முடிந்ததும் அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவளிடம் தன் காதலைச் சொல்ல வேண்டுமென்றுதான் எண்ணியிருந்தான்...ஆனால் அன்றைய இரவில் அவள் கூறியதைக் கேட்ட பின்பு அவனது காதலை அவனுக்குள்ளேயே மறைத்துக் கொள்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை..

அவள் அன்று அவகாசம் கேட்ட போது கூட அவள் வாழ்வில் இன்னொரு காதல் இருந்திருக்கக் கூடுமென அவன் கனவிலும் எண்ணியதில்லை...அவளுக்கும் அவன் மேல் காதல் வரும் வரையிலும் அன்றைய நாளில் நிகழ்ந்த சந்திப்பை பற்றி எதுவுமே கூறாமல் விடுத்தவன்,அவளின் காதலிற்காய் காத்திருக்கத் தொடங்கினான்...

இன்று அவன் நினைத்தது போலவே அவளது காதல் அவனுக்கு கிடைத்துவிடும் தூரத்தில் இருக்கிறது, இருந்தும் அவன் மனம்தான் ஒருநிலையோடு அவளுடைய காதலை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது...அவளிடம் முழு மனதோடு அடைக்கலமாகிக் கொள்ள முடியாது அவனுடனேயே அவன் முரண்பட்டுக் கொண்டிருக்கிறான்...

ஆரம்பத்தில் அரவிந்தன்தான் தன்னுள் காதலை விதைத்துச் சென்றவன் என்று அறியாமல் அவனை விட்டு விலகி நின்றாள் துளசி....இப்போது இவனோ துளசியின் முதலும் முடிவான காதல் அவன் என்று அறியாமல் விலகி நிற்கிறான்...இதைத்தான் காலம் போடும் கோலம் என்று சொல்வார்கள் போல...

அனைத்தையும் மாறி மாறி யோசித்து தலையைப் பிடித்துக் கொண்டிருந்தவன்,அதற்கு மேலும் வேலையில் கவனம் செலுத்த முடியாது..வேலைக்கு விடுப்பு சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்...எப்படியும் அந்த நேரத்திற்கு துளசி வீட்டில் இருக்க மாட்டாள் என்பதால் வீட்டிற்கே நேரடியாக காரைச் செலுத்தினான்..

விரைவாகவே வீட்டினை வந்தடைந்தவனுக்கு அவளில்லாத வீட்டிற்குள் ஏனோ செல்லவே பிடிக்கவில்லை...இந்த ஒருவாரமாக அவளை அவன் தவிர்த்து வந்தாலும் அவள் அவனருகே இருக்கிறாள் என்பதே அவனுக்குப் போதுமானதாக இருந்தது...இப்போது அவளில்லாத வெறுமை அவனை வெகுவாகவே தாக்க...ஊஞ்சலில் சிறிது நேரம் கண்மூடி அமர்ந்து கொண்டான்...

ஆனால் அந்த ஊஞ்சலின் வாசம் கூட அவனிற்கு அவளைத்தான் ஞாபகமூட்டிக் கொண்டிருந்தது...மீண்டும் அவனின் மனம் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளிற்கும் பின்னாலிருந்த காரணங்களை அலசிப் பார்க்க ஆரம்பித்தது...

அவர்களது திருமணத்தன்று அர்ஜீன் இடையில் சென்றது...அதன் பின் அவன் உடனடியாகவே அமெரிக்காவிற்கு கிளம்பிச் சென்றது..துளசி அவளது அப்பாவிற்காகத்தான் திருமணத்திற்குச் சம்மதித்தது...என்று அனைத்தையும் யோசித்து யோசித்து ஒவ்வொரு செயல்களுக்கும் தானாகவே ஒரு காரணத்தை எண்ணிக் கொண்டது அரவிந்தனின் மனம்...ஆனால் அனைத்தையும் சிந்தித்துப் பார்த்தவன்...அர்ஜீன் தான் மட்டுமே காதலித்ததாகத்தான் சொன்னான் என்பதை மட்டும் ஏனோ யோசிக்காமலேயே விட்டுவிட்டான்...

முன்னெல்லாம் அவனிற்குச் சிறிதாகத் தோன்றியவை,இப்போது பெரிதாகத் தோன்றி தலைவலியை உண்டு பண்ணிக் கொண்டிருந்தன..
குழப்பத்திலிருக்கும் மனம் பலதையும் மனதில் போட்டு மேலும் மேலும் குழப்பிக் கொண்டேதானிருக்கும்...அப்படியொரு நிலைக்குள்தான் அரவிந்தனும் வெளிவரும் வழி தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்...சிறிது நேரம் தூங்கி எழும்பலாமென்று அறைக்குள் நுழைந்தவன்,தலைவலியைத் தாங்க முடியாது தைலத்தைத் தேடத் தொடங்கினான்...

தலைவலித் தைலத்தை தேடியவனின் கண்களில் அன்று அவளிற்கே தெரியாமல் அவளின் வீட்டிலிருந்த எடுத்து வந்த அவளுடைய டயரி பட்டது...அன்று விருப்போடு அதை எடுத்து வைத்தவன்,இன்று வெறுப்பாக அதைப் பார்த்தான்...அதைத் தூக்கி எறியப் போனவன்...ஏதோ உள்ளுணர்வு தோன்றவும் அதை விரித்து ஒவ்வொரு பக்கங்களாய் படிக்க ஆரம்பித்தான்...

முதல் பக்கத்திலிருந்த அவளின் முதல் கவிதையே அவனிற்கு எதையோ தெரியப்படுத்த,முழுதையும் படித்து முடித்தவனுக்கு அனைத்துமே புரிந்து போனது...கலங்கிய கண்களோடேயே டயரியை மூடி வைத்தவனுக்கு..வாய்விட்டுக் கத்த வேண்டும் போல் இருந்தது...

இத்தனை நாட்களாய் அவனை வாட்டிக் கொண்டிருந்த கேள்விகள் அனைத்திற்குமே பதில் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் சுழன்று கொண்டிருந்தவன்,
"துளசி ஆரம்பத்திலிருந்தே என்னைத்தான் காதலித்திருக்கிறாளா...??..அவள் அன்றே என் மேல் காதல் கொண்டுவிட்டாளா..??..."என்று அதே கேள்விகளையே தனக்குள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தான்...

அப்போது அவனது மமனதில் வேறு எதுவுமே தோன்றவில்லை...துளசி மட்டுமேதான் அவன் மனதை நிறைத்துக் கொண்டிருந்தாள்..இது கனவா இல்லை நனவா என்றறிய தன்னையே ஓர் முறை கிள்ளிப்பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டவனிற்கு அப்போதே துளசியைப் பார்த்துவிட வேண்டும் போல் இருக்க...துள்ளிக் குதித்தவாறே படிகளில் இறங்கி கதவைத் திறந்து கொண்டவன்...வெளியே காரில் வந்திறங்கியவர்களைக் கண்டதும் திகைத்துப் போய் நின்றான்...


தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (12-Feb-18, 9:37 am)
பார்வை : 497

மேலே