லோக்பால், லோக் ஆயுக்தா கொண்டுவர ஆட்சியாளர்கள் அச்சம் ஊழல் எதிர்ப்பு இயக்க கருத்தரங்கில் நீதியரசர் சந்துரு கருத்து

‘ஊழலுக்கு எதிரான லோக்பால், லோக் ஆயுக்தாவை கொண்டு வர ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள் என்றால், அந்த கோரிக்கை நியாயமானது’ என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நீதிபதி கே.சந்துரு பேசியதாவது:

நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்ற வேண்டுமா? ஊழல்வாதிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமா என்பது முக்கியம். ஊழலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்கிறார்கள். இது இன்று, நேற்றைய பிரச்சினையல்ல. மனிதன் தோன்றியபோதே ஊழல் தோன்றினாலும் இன்று அதன் விகிதாச்சாரம் அதிகம்.

நாம் சிலரை ஊழல்வாதிகள் என்று கூறும்போது, அதை மறுத்து எதிர்வினையாக சிலர் அவர்களுக்காக மண்சோறு உண்கிறார்கள். ஊழல்வாதிகளை பதவியில் அமர வைத்துவிட்டால் எளிதாக அவர்களை அகற்றிவிட முடியாது. ஊழல்வாதிகளுக்கு அரசியல் பதவிகள் என்பது கவசம் போன்றது. அவற்றையெல்லாம் தடுக்க வேண்டுமென்றால் நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. தலைவர்கள் மீது மக்கள் வைக்கும் கண்மூடித்தனமான மதிப்பீடுகள் பல நேரங்களில் தவறாகவே முடிகின்றன.

நான் நீதிபதியாக இருந்த காலகட்டத்தில் தமிழகத்தில், உள்ளாட்சிப் பணியில் கமிஷன் பெற வேண்டும் என்பதற்காக தீர்மானம் கொண்டுவந்த நகராட்சியும், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க எம்பிக்கள் பணம் பெற்றார்கள் என்ற பிரச்சினையில், ஊழலை நிரூபித்தாலும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றமே கூறிய சம்பவங்களும் இங்கு உண்டு.

அமெரிக்க நாடுகளில் 20 டாலருக்கு மேல் ஓர் அரசு ஊழியர் வெகுமதி பெற்றால், அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் நீதிபதிகளின் சொத்து பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையே பெரும் போராட்டமாக இருக்கிறது. ஒளிவுமறைவற்ற நிர்வாகம் இல்லாதபோது ஊழல் அதிகமாகும்.

இந்திய தண்டனைச் சட்டத்திலேயே லஞ்சத்தை தடுக்க சட்டம் இருக்கிறது. ஆனாலும் லஞ்சத்தை ஒழிக்க முடியவில்லை. அதற்காக ஊழல் தடுப்புச் சட்டம், அதிலும் திருத்தம் என பல கட்டங்களை கடந்தும் ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்க முடியவில்லை. ஊழல் என்பது சித்தாந்தத்தில் ஊறிவிட்ட ஒன்றாக உள்ள நிலையில், அதைத் தடுக்க நீதித்துறை முயல வேண்டும்.

சட்டங்களை மீறி ஊழல் நடக்கிறது என்றால் எளிமையான புகார் அமைப்பு தேவை. சேவை உரிமைச் சட்டத்தை வலியுறுத்த வேண்டும். பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்களை கொண்டு வர வேண்டும். ஊழலை ஒழிக்கும் இதுபோன்ற சட்டங்களை கொண்டுவர ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள் என்றால் அந்த கோரிக்கை உண்மையிலேயே நியாயமானது என்று அவர் பேசினார்.

‘நீட்’ இறுதி தீர்ப்பு அல்ல

பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘நீட் தேர்வு விவகாரத்தில் நாம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும். அதை எதிர்ப்பது நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும். சட்டப்படி சீராய்வு மனுவை தாக்கல் செய்யலாம். அதேசமயம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இறுதித் தீர்ப்பு அல்லவே’ என்றார்.

எழுதியவர் : (12-Feb-18, 4:16 pm)
பார்வை : 36

மேலே