அச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 2

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்.......

டிசம்பர் 24 , 2011 .....

மாண்ட்ரியல், கனடா.

ரூ ராய் ஈ...... கிறிஸ்துமஸ் ஈவ் கோலாகலங்கள் எங்கும் பொங்கி வழிந்துகொண்டிருந்தன. பெரிய பெரிய கிறிஸ்துமஸ் மரங்களும், அனைத்து வீடுகளின் வாசலிலும் தொங்கும் மின்விளக்குகளுடன் கூடிய நட்சத்திரங்கள், அலங்கரிக்கப்பட்ட வீடுகள், மாண்ட்ரியல் கத்தோலிக் சர்ச் முன்னே அலங்கரிக்கப்பட்ட கல்வாரி மலையில் பிறக்கும் இயேசு கிறிஸ்து அலங்காரங்கள், தோரணங்கள், ஆங்காங்கே குளிர் நிலா சாண்டாக்ளாஸ்கள், வயோதிகர்கள், இளைய மக்கள் என பாகுபாடின்றி ஆடிக்கொண்டிருக்கும் மேடைகள், அனைவரின் கைகளிலும் மதுக்கோப்பைகள் என ஊரே கொண்டாடிக்கொண்டிருந்தது.

மாலை எட்டு மணி, அந்த -15 டிகிரி குளிரையும் பொருட்படுத்தாமல் வயது பாகுபாடின்றி கொண்டாடிக்கொண்டிருந்தனர் மாண்ட்ரியல் மக்கள்.

பென்னட்'ஸ் பாரடைஸ்.....கென்னடி பென்னட் மற்றும் அவரது குடும்பத்தினர் வாழும் மகிழ்ச்சியான வீடு. மரத்தினால் அழகூட்டப்பட்ட அந்த அழகிய வீடும் அதனை சுற்றி இருக்கும் பனி படர்ந்திருக்கும் தோட்டமும் பார்ப்பதற்கே அழகாக ஒரு சொர்க்கம் போலவே இருந்தது அவரது இல்லம்.

"ஜொஹான்....எங்கு இருக்கிறாய், கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கவேண்டிய தருவாயில் தனியாக ஓடி ஒளிந்துவிடுவாயா...." ஆக்னஸ் ஜொஹானிடம் கையில் வைன் கோப்பையை கொடுத்தபடியே கேட்டாள்.

"இல்லை இல்லை அம்மா, என் தோழன் மைக்கேல் தொலைபேசியில் அழைத்தான், அவனுடன் பேசிவிட்டு வாழ்த்துக்களை பரிமாறினேன். அது சரி, இந்த ஆஷ்லே ஏன் இன்னும் வரவில்லை, அவளுக்கு இன்னும் கிறிஸ்துமஸ் ஈவ் வரவில்லையா?" என்றபடியே கோப்பையை கையில் வாங்கினான் ஜொஹான்.

"இல்லை ஜொஹான், இப்போது தான் அஷ்லேவிடம் இருந்து அழைப்பு வந்தது, அவள் இப்போது தான் அவள் தோழி கரோலின் வீட்டில் இருந்து கிளம்பி இருக்கிறாள், ரூ மோண்ட்காமில் இருந்து இங்கே வர பொதுவாக இருபது நிமிடங்கள் ஆகும், ஆனால் இன்று பண்டிகை ஆதலால் ரூ ஷெர்ப்ரூக் ஈ சாலையில் அவென்யூ டு பார்க் லா போண்டேன் கொண்டாட்டங்கள் காரணமாக அதிகப்படியான சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் அவள் ரூ ஒண்டாரியோ சாலை வழியாக வந்து ரூ பெர்ரி சாலையை பிடித்து வருவதாக கூறினாள். எனது கணக்குப்படி அவள் இன்னும் முக்கால் மணி நேரத்தில் வரவேண்டும்." என்றார் கென்னடி.

"அப்பா, ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை, இவ்வளவு போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பது அவளுக்கு தெரியும், மேலும் இன்று எவ்வளவு சந்தோஷமாக இருக்கவேண்டிய நாள், இந்த நாளில் கூட நம்மை விட்டு அவள் தோழியோடு காலை முதல் இரவு வரை இருப்பது அவ்வளவு முக்கியமா?" என்று தங்கையை கடிந்துகொண்டான் ஜொஹான்.

"ஜொஹான், நீ ஒரு விஷயத்தை புரிந்துகொள், நட்பு என்பது அனைத்து சொந்தங்களையும் கடந்தது, உனக்கே தெரியும், ஆஷ்லே கரோலின் மிகவும் நெருக்கமான தோழிகள், இன்று நேற்று நட்பு அல்ல, பதிமூன்று வருட நட்பு. அவர்கள் நட்பை பார்த்து எனக்கே சில நேரங்களில் பொறாமை ஏற்படும், நட்பை ஒருபோதும் குறை கூறாதே." அறிவுரையால் மகனை நனைத்தார் கென்னடி.

"சரி, அப்பா, எனக்கு புரிகிறது, நான் நட்பை பற்றி சொல்லவில்லை, ஆனால் இப்படி நெரிசலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறாள் என் தங்கை என்று ஆதங்கப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் அவ்வளவுதான்" என்று தன்பக்க நியாயத்தை கூறினான் ஜொஹான்.

"சரி ஜொஹான், உன் தங்கைக்கு உனது பரிசு என்ன?" என்று கேட்ட தாய் ஆக்னேஸிடம் "அது சொல்ல முடியாது, ஆனால் அது அவளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும்" என்றான் ஜொஹான்.

"அப்படியா, சந்தோஷம் ஜொஹான், எங்கே உனது அருமை காதலி மெர்சி, வான்கூவரில் தான் இருக்கிறாளா இல்லை எப்போதும்போல உலகின் சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க போய்விட்டாளா," என்று மகன் ஜொஹானிடம் கேட்டாள் ஆக்னஸ்.

"இல்லை இல்லை, இங்கு தான் இருக்கிறாள், எனக்கு தெரிந்தவரை அவள் இப்போது வான்கூவரில் இல்லை, கிரகாம் ஐலாண்டில் நைகூன் ப்ரொவின்ஷியல் பார்க்கில் கேம்பிங் சென்றிருக்கிறாள்." என்று பதில் கூறிக்கொண்டிருக்கும்போதே மெர்சியிடம் இருந்து அழைப்பு வந்தது ஜொஹானின் கைபேசிக்கு.

"யாரு ஜொஹான், மெர்சி தானே...." என்றாள் ஆக்னஸ்.

"ஆமாம், அம்மா, தவறாக நினைக்கவில்லை என்றால் நான் சற்று தனிமையில் அவளோடு பேசிவிட்டு வரட்டுமா, கண்டிப்பாக பத்து நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்ள மாட்டேன்" என்றபடி மெல்ல தனது அறையை நோக்கி நடந்தான் ஜொஹான்.

சிரித்துக்கொண்டனர் கென்னடியும் ஆக்னேசும்.

இரண்டு நிமிடங்கள் கழிந்திருக்கும், கென்னடி கைபேசி ஒலித்தது.

"சொல் ஆஷ்லே, எங்கே இருக்கிறாய், இன்னும் எவ்வளவு நேரம் ஆகும், எனது கணிப்புப்படி நீ
வீட்டை அடைந்திருக்க வேண்டுமே" என்றார் கென்னடி.

"ஆமாம் அப்பா, நான் அவென்யூ லாவல் தாண்டிவிட்டேன், இன்னும் இரண்டு மூன்று நிமிடங்களில் வந்துவிடுவேன்." என்றாள் ஆஷ்லே.

"நல்லது மகளே, உனக்காகத்தான் காத்திருக்கிறோம்" என்றார் கென்னடி.

அதே சமயம்,

ஜொஹான் - மெர்சி உரையாடல்,

"ஜொஹான், எனக்கு தெரியும், இந்த பொன்னான தருணத்தில் எனது இல்லாமையை நீ கடினமாக எண்ணுவாய் என்று, என்ன செய்வது, பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் என்னால் இங்கிருந்து திட்டமிட்டபடி கிளம்ப முடியவில்லை, கண்டிப்பாக எனது திட்டப்படி நான் நேற்று முன்தினம் வான்கூவர் அடைந்திருந்தால் இன்று எந்த முறையிலாவது அங்கே மாண்ட்ரியல் வந்து சேர்ந்திருப்பேன். ஆனால் என்ன செய்வது, இயற்கை கூட நம் காதலில் விளையாடுகிறது. எனக்கே என்ன சிரிப்பு என்றால் உன்னை முத்தமிடவேண்டிய இந்த இனிய நேரத்தில் எனது ஆராய்ச்சி புத்தகத்தை புரட்டிக்கொண்டிருக்கிறேன், என்னை நொந்து கொள்வதா இல்லை நாம் துரதிஷ்டசாலி என்று முடிவு செய்துகொள்வதா, விடு, வருத்தப்படாதே, புத்தாண்டிற்கு வந்துவிடுவேன்" என்றாள் மெர்சி.

"நீ என் அருகில் இல்லாதது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது உயிரே, ஆனால் என்ன செய்வது, உன்னை முத்தமிடவேண்டிய இந்த நேரத்தில் தனிமையில் தவிக்கிறேன், ஒரே ஆறுதல் நான் இப்போது என் வீட்டில் இருப்பது தான், உன்னை புத்தாண்டில் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்" என்றான் ஜொஹான்.

"கண்டிப்பாக ஜொஹான், புத்தாண்டில் நான் உன்னை மாண்ட்ரியலில் சந்திக்கிறேன், முத்தங்கள்....." என்றாள் மெர்சி.

"முத்தங்கள் மெர்சி, உன்னை மிகவும் எதிர்பார்க்கிறேன். மனதில் உன்னை வைத்திருப்பதால் எனது எடை இரட்டிப்பாவதாய் உணர்கிறேன்" என்று காதலை வெளிப்படுத்தினான் ஜொஹான்.

"ஜொஹான், உனது காதலின் ஆழத்தை நான் உணர்கிறேன், ஆனால் நீ எதற்காக இப்படி மிகை படுத்தி கூறவேண்டும்? நீ மிகவும் புத்திசாலி தான், எந்த நேரத்தில் எந்த வார்த்தைகளை உபயோகித்தால் எதிரே பேசுபவர் பெருமிதம் அடைவார், மகிழ்ச்சி அடைவார், ஈர்க்கப்படுவார் என்பது உனக்கு நன்றாக தெரியும், இது கூட உனக்கு தெரியவில்லை என்றால் நீ உளவியலும் மனவள இயலும் படித்து என்ன பிரயோஜனம்?" சிரித்தபடியே கேட்டாள் மெர்சி.

"அப்படி இல்லை மெர்சி. உன்னிடம் நான் வார்த்தை ஜாலங்கள் காட்டி என்ன செய்யப்போகிறேன், நீ வேண்டும் என்னோடு இருப்பாய் என்பது எனக்கு தெரியும், நமது குடும்பத்தாருக்கும் தெரியும், விரைவில் நாம் மணம் முடிக்க ஆவன செய்யவேண்டும் இல்லையா, அதைப்பற்றி நாம் மேலும் பேசுவோம், நான் முடிந்தவரை புத்தாண்டிற்கு முன்னதாகவே வான்கூவர் வந்துவிட முயற்சிக்கிறேன், உன்னையும் உடன் அழைத்துக்கொண்டு அங்கிருந்து மாண்ட்ரியல் வந்துவிடலாம்" திட்டங்கள் பற்றி கூறினான் ஜொஹான்.

"அதுவும் சரி தான், அப்படியே செய்யலாம், அது சரி, உனது தங்கை ஆஷ்லே பணியில் சேர்ந்துவிட்டதாக கூறினாயே, எப்படி இருக்கிறது வேலை அவளுக்கு, RCMP வேலை என்பது சாதாரண வேலை இல்லை, மிகக்கடினமான ஒரு வேலை தான், எந்நேரமும் பணி நிமித்தமாக தமது சொந்த விருப்பு வெறுப்புக்களை கூட ஒதுக்கி வைக்க நேரிடும், சின்ன பெண் வேறு அவள், என்ன செய்வது, அவளாக தேர்வு செய்த பணி தான் என்றாலும் எனக்கு சற்று வருத்தம் தான்" என்றாள் மெர்சி.

"இல்லை மெர்சி, எனது தந்தையை போலவே அவளும் கனடா காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பது அவளது ஆசை, குழந்தை பருவம் முதலே தன்னை அதற்காக தயார் படுத்திக்கொண்டாள். அவளது உடற்பயிற்சி முறைகள், அவள் தன்னை தானே தயார் செய்துகொண்ட விதம் அனைத்துமே அவளது தீவிர ஆசையை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது. நீ அவளை நேரில் பார்த்தால் உனக்கு புரியும்" என்றான் ஜொஹான்.

"அவளது புகைப்படத்தை பார்க்கும்போதே தெரிகிறது அவளது ஈடுபாடு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி எல்லாம் புலப்படுகிறதே, ஒரு சராசரி பெண்ணை போல இல்லாமல் தன்னைத்தானே வேறுபடுத்திக்கொண்ட விதம், அவளது பார்வையின் தீக்ஷண்யம்...கண்டிப்பாக அவள் சாதிப்பாள், கனடா காவல்துறையில் அவள் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பாள். சாம் ஸ்டெயிலே போல புகழின் உச்சிக்கு செல்வாள்." வாழ்த்துக்களை வாரி இரைத்தாள் மெர்சி.

"இப்போது நீயும் நன்றாக பேச கற்றுக்கொண்டுவிட்டாய் மெர்சி. சரி, அது இருக்கட்டும், நீ அலெக்சிடம் பேசினாயா, அவன் எப்படி இருக்கிறான், இப்போது கூட மைக்கேல் அழைத்தான், அவனிடமும் கேட்டேன், இந்த அலெக்ஸ் எங்கு என்ன செய்து கொண்டிருக்கிறான் என்றே தெரியவில்லை. சென்றவாரம் தனது தங்கைக்கு கேன்சர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது என்று மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக கூறினான். அதனால் தனது சொந்த ஊரான வெஸ்ட்மின்ஸ்டர் சென்றுவிட்டதாக சொன்னான். அதன்பிறகு எந்த தகவலும் இல்லை, கைபேசியும் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்று அறிவித்தவண்ணமே உள்ளது" என்றான் ஜொஹான்.

"எனக்கும் தெரியவில்லை, நான் வான்கூவர் வந்து சேர்ந்தவுடன் அவனை உடனடியாக சந்திக்கிறேன், சரி, எனக்கு உறக்கம் வருகிறது, நான் இணைப்பை துண்டிக்கிறேன்" என்றபடி கைபேசி இணைப்பை துண்டித்தாள் மெர்சி.

"அப்பா, அம்மா, தாமதத்திற்கு மன்னிக்கவும், வழியில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டேன், அது மட்டும் இல்லை, இன்று உங்களுக்கே தெரியும், கரோலினின் பிறந்த நாள், எங்கள் இருவரின் மற்றொரு தோழி ஜென்னியின் நினைவு நாள் இல்லையா, அதனால் தான் இந்த தாமதம்." என்றபடி வீட்டினுள் நுழைந்தாள் ஆஷ்லே.

"ஆமாம் ஆஷ்லே, நினைவு இருக்கிறது, பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம், ஆனால் இன்னும் மனதில் நேற்று நடந்தது போலவே இருக்கிறது. அப்படி ஒரு கோர விபத்து. என் வாழ்வில் அப்படி ஒரு கோரமான விபத்தை நான் சில முறைகள் மட்டுமே கண்டிருக்கிறேன்." வியப்பிலும் பதற்றத்தில் கூறினார் கென்னடி.

"ஆமாம் அப்பா, அப்படி ஒரு கோரமான விபத்து. மாண்ட்ரியலில் ஏற்பட்ட கோர விபத்துகளில் ஒன்றாக இன்னும் எண்ணப்படும் விபத்து இல்லையா அப்பா?" என்றாள் ஆஷ்லே.

"ஆமாம், அன்று அவள் உன்னையும் கரோலினையும் சந்திப்பதற்காக அவளுடைய ஊரில் இருந்து மாண்ட்ரியல் வந்துகொண்டிருந்தாள் அல்லவா, பாவம்...ஆனால் எனக்கிருக்கும் ஒரே ஆறுதல், அன்று அந்த விபத்து கிர்க்லேண்டில் நடந்தது. உங்கள் திட்டம் அன்று என்னவாய் இருந்தது என்று நீ சொல்லி கதறி அழுத அந்த காட்சி இன்னும் என் கண் முன்னே நிற்கிறது ஆஷ்லே" வியப்பில் ஆழ்ந்தவாறே கூறினார் கென்னடி.

"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று நான் அறிகிறேன் அப்பா, அன்று அவள் தனது ஊரான ஒட்டாவாவில் இருந்து மாண்ட்ரியல் வந்துகொண்டிருந்தாள். அன்று நான் பாய்ண்ட் கிளாரில் இருக்கும் பாய்ண்ட் க்ளார் பிளாசாவில் இருந்தேன், என்னை அவளது காரில் ஏற்றிக்கொண்டு கரோலின் வீட்டிற்கு வருவதாய் தான் எங்கள் திட்டம். அன்று கரோலின் பிறந்தநாள் வேறு. அதனால் அவளுக்கு இன்ப அதிர்ச்சி தரும் பரிசு பொருட்கள் வாங்க திட்டம் தீட்டி இருந்தோம், அதனால் இங்கே மாண்ட்ரியலில் வாங்கினால் கரோலினுக்கு எப்படியும் தெரிந்துவிடும் என்பதற்காக சொந்த விஷயமாக பாய்ண்ட் க்ளார் செல்வதாக கூறிவிட்டு நானும் ஜென்னியும் திட்டமிட்டு பாய்ண்ட் கிளாரில் போய் அவளுக்கான பரிசினை வாங்க இருந்தோம், அதனால் நான் பாய்ண்ட் க்ளார் வந்து சேர்த்துவிட்டு ஜென்னிக்காக காத்திருந்தேன், நீண்ட நேரமாகியும் அவள் வரவில்லை, அப்போது தான் கிர்க்லேண்டில் பவுல் செயின்ட் ஜீன் சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் ஒரு பெண் மட்டுமே காரை ஓட்டிவந்ததாகவும் கார் நிலை தடுமாறி பல முறை உருண்டு வெடித்து சிதறிவிட்டதாகவும் அந்த பெண்ணின் உடல் முழுதும் எரிந்து சிதைந்துவிட்டதாகவும் அந்த பக்கமாக வந்த வாகனங்கள் மூலம் தெரிந்துகொண்டு அங்கே சென்று பார்த்தேன், அங்கு நீங்களும் இருந்தீர்கள், நீங்கள் தான் அந்த விபத்தை பற்றி துப்பறிய வந்த காவலாளி இல்லையா அப்பா, ஒரு ஆறு கிலோமீட்டரில் காத்திருந்த என்னை பார்க்காமலேயே எங்கள் தோழி மரணித்துவிட்டாள். என்னைவிட கரோலின் தான் அவளோடு மிகவும் நெருக்கமாக இருந்தாள். பலமுறை அவளை நான் எச்சரித்திருக்கிறேன், நீ அவளோடு இவ்வளவு அந்நியோன்யம் காட்டாதே, அது என்று இருந்தாலும் உன்னை உணர்வுபூர்வமாக பாதிக்கும் என்று. அதுமட்டும் இல்லை, அவர்கள் இருவருக்கிடையேயான நட்பு எனக்கு ஒரு சாதாரண நெருங்கிய நட்பு போல தெரியவில்லை, ஒரு அசாதாரண உணர்வும் இந்த உலகத்தில் இப்படியும் முட்டாள் தனமாக கண்மூடித்தனமான நட்பு உறவு முறைகள் இருக்க முடியுமா? என்றெல்லாம் வியந்திருக்கிறேன், ஆனால் அவர்களுக்குள் அப்படி ஒரு புரிதல், ஒருவருக்கு ஒருவர் என்ன பிடிக்கும் பிடிக்காது, என்பதை தாண்டி பார்த்துக்கொள்ளாவிட்டாலும் இன்று என்ன நிற ஆடை போட்டிருப்பாள், உடல் நலம் எப்படி என்பது கூட மனதால் தெரிந்து கொள்ளும் அளவுக்கு ஒரு புரிதலில் நானே ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு இனிய நட்பை அன்று நாங்கள் இழந்துவிட்டோம், நான் கூட அந்த துயரத்தில் இருந்து சில நாட்களில் வெளியே வந்துவிட்டேன், ஆனால் இந்து வரையில் கரோலினால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை. பாவம் அவள்" என்றாள் ஆஷ்லே.

"பரவாயில்லை ஆஷ்லே, எங்களுக்கு புரிகிறது, சரி வா, வருந்தாதே, காலம் அனைத்தையும் ஆற்றும் வல்லமை கொண்டது. நீ இப்போது பழையதை மறந்து நிகழ்காலத்துக்கு வா மகளே... நாமும் எல்லாரையும் போல குடும்பமாக கொண்டாட வேண்டாமா, மெர்ரி கிறிஸ்துமஸ் மகளே" என்றபடி கென்னடி தனது மகளை கட்டி அணைத்து கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்தார்.

"உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் தந்தையே, நான் உங்களிடம் ஒன்று சொன்னால் கோவிக்க மாடீர்களே, நான் என்ன சொன்னாலும் எனக்காக செய்யும் நீங்கள் நான் பலமுறை சொல்லியும் செய்யாத ஒரே விஷயம் இந்த புகை பழக்கத்தை விடுவது தான், உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது, அதனால் புகை பிடிக்க கூடாது என்று மருத்துவர் பலமுறை எச்சரித்தும் நீங்கள் அதை விடுவதாய் தெரியவில்லை அப்பா" என்றாள் ஆஷ்லே.

"இல்லை மகளே, ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தானே புகைக்கிறேன்" நியாயப்படுத்திக்கொண்டார் கென்னடி.

"விஷம் துளி சாப்பிட்டால் என்ன கோப்பை பருகினால் என்ன, மரணம் சம்பவிக்கத்தானே போகிறது தந்தையே, நீங்கள் புகைத்து புகைத்து உங்களை நீங்களே அழித்துக்கொண்டிருக்கிறீர்கள் தந்தையே, உங்களுக்கு ஒன்று என்றால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது" கலங்கிவிட்டாள் ஆஷ்லே.

"கலங்காதே ஆஷ்லே, விரைவில் உன் தந்தை மாற்றிக்கொள்வார், அது இருக்கட்டும், இந்த மகிழ்ச்சியான வேளையில் கலங்காதே, நான் ஒன்று சொல்லவா....நீ இந்த வெள்ளை ஆடையில் ஒரு தேவதை போல இருக்கிறாய்" என்றால் ஆக்னஸ்.

"நன்றி அம்மா, உங்கள் மகளாயிற்றே, ஒரு தேவதையின் மகள் தேவதையாகத்தானே இருக்க முடியும்" என்றாள் ஆஷ்லே.

"ஏய், ஆஷ்லே, வா, எப்போது வந்தாய், மெர்ரி கிறிஸ்துமஸ், அழகாய் இருக்கிறாய் ஆஷ்லே" என்றபடி அறையில் இருந்து வெளியே வந்தான் ஜொஹான்.

கென்னடி குடும்பத்தாருக்கு மகிழ்ச்சியாக கழிந்தன கிறிஸ்துமஸ் ஈவ் இரவு பொழுதுகள்.

ஆனாலும் ஜொஹானுக்கு உள்ளூர தனது உயிர் நண்பன் அலெக்ஸ் என்ன செய்கிறான் என்ற கவலை மனதில் ஓடிக்கொண்டே இருந்ததால் அவனால் முழுதாக மகிழ்ச்சியாக கலந்துகொள்ள முடியாமல் தவித்துக்கொண்டிருந்தான். அவன் மனதில் பல குழப்பங்கள். "ஏன் அவனது கைபேசி தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறது? ஏதும் பிரச்னையில் மாட்டிக்கொண்டிருக்கிறானா?" ஜொஹானால் நிம்மதியாக இருக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தான்.

பகுதி 2 முடிந்தது.

திகில் தொடரும்.

எழுதியவர் : முபாரக் (15-Feb-18, 10:32 am)
சேர்த்தது : முபாரக்
பார்வை : 396

மேலே