அச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 4

கிறிஸ்துமஸ் முடிந்தது. அடுத்து அனைத்து இடங்களிலும் புத்தாண்டை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, டிசம்பர் 27 காலையில், "என்ன ஆஷ்லே, உனக்கு இந்த வேலை பிடித்திருக்கிறதா, நீண்ட பயிற்சி மற்றும் காத்திருப்புக்கு பிறகு நீ ஆசைப்பட்ட இந்த வேலை உனக்கு கிடைத்திருக்கிறது, நீ நன்றாக சாதிக்க வேண்டும், உனக்கு பணியில் என்ன சந்தேகம் இருந்தாலும், குற்றவாளிகளை கண்டுகொள்வதில் கஷ்டங்கள் இருந்தாலும் வெளிப்படையாக பேசு, நான் உதவி செய்கிறேன், அது சரி, உனது பயிற்சி காலங்கள் முடிந்ததும் உன்னை எந்த பிரிவுக்கு மாற்றுவதாக உள்ளார்கள்? உனக்கு எந்த பிரிவு விருப்பம்?" என்று தன் மகளிடம் கேட்டார் கென்னடி.

"எனக்கு குற்றவியல் மற்றும் தடயவியல் வல்லுநர் ஆகவேண்டும் என்பது தான் ஆசை அப்பா, புலனாய்வு மற்றும் துப்பறியும் பிரிவை விரும்புகிறேன், அது மட்டும் இல்லை, எனது பணியில் முழுமையாக பரபரப்பாக செயல்பட விரும்புகிறேன்." என்றாள் ஆஷ்லே.

"நல்லது, மிகவும் சுவாரஸ்யமான ஆனால் நெருக்கடி தரும் பிரிவு, சரி உனது ஆசைப்படி நீ பயிற்சி முடிந்து விருப்பப்பட்ட துறையிலேயே பணி நிரந்தரம் ஆக வாழ்த்துக்கள். ஆனால் பணி நிரந்தரம் ஆகும்போது உன்னை வேறு ஊருக்கு மாற்ற வாய்ப்பிருக்கிறது." என்றார் கென்னடி.

"தெரியும் அப்பா, நான் அனைத்திற்கும் தயாராக இருக்கிறேன். அது இருக்கட்டும், நீங்கள் என்று உங்கள் விடுமுறை முடிந்து பணியில் மீண்டும் சேரப்போகிறீர்கள், இன்னும் நான்கு ஆண்டு நீங்கள் பணி செய்யலாம் இல்லையா" என்றாள் ஆஷ்லே.

"ஆமாம், செய்யலாம், நான் அடுத்த மாதம் பதினைந்து பணியில் சேர்ந்துவிடுவேன்" என்றார் கென்னடி.

"நல்லது அப்பா, ஜொஹான் நாளை வான்கூவர் செல்கிறான் என்று நினைக்கிறேன், நானும் போகட்டுமா?" என்று கேட்டாள் ஆஷ்லே.

"இல்லை, அது சிறந்த யோசனை இல்லை, நீ நாளை மறுதினம் உன் விடுமுறை முடிந்து பணியில் சேரவேண்டும், நன்னடத்தை சோதனை மற்றும் ஆய்வு காலத்தில் விடுமுறை எடுப்பது உனது பணி நிரந்தரத்தை பாதிக்கும், அதனால் வேண்டாம்" என்று எடுத்துரைத்தார் கென்னடி.

"ஆமாம் அப்பா, அதுவும் சரி தான், நான் பயணத்தை வேறு நாளில் செய்துகொள்கிறேன், சரி, நான் கரோலினுடன் வெளியில் செல்ல தயாராகவேண்டும், அவள் இன்னும் சற்று நேரத்தில் இங்கு வந்துவிடுவதாக சொன்னாள். புதிய காரில் பயணிக்க உள்ளோம்" என்றபடி தயாராவதற்காக தனது அறையை நோக்கி சென்றாள் ஆஷ்லே.

"என்ன அப்பா, ஏதோ பயணத்தை பற்றி பேசிவிட்டு போகிறாள் ஆஷ்லே?" என்றபடி தனது அறையில் இருந்து வெளியே வந்தான் ஜொஹான்.

"அதுவா, உன்னோடு வான்கூவர் வருவதாக கேட்டாள், நான் தான் வேண்டாம் என்றேன்" என்றார் கென்னடி.

"ஏன் அப்பா, அவள் பாவம் ஏமாந்து விடுவாள் இல்லையா?" என்று தங்கைக்கு வக்காலத்து வாங்கினான் ஜொஹான்.

"அது இல்லை ஜொஹான், அவளுக்கு பணி நிரந்தரம் ஆகும் காலம், இந்த நேரத்தில் விடுப்பு எடுப்பது நல்லதல்ல, அதான், பணி நிரந்தரம் ஆனவுடன் நானே அனுப்பி வைக்கிறேன். " என்றார் கென்னடி.

"ஆமாம் அதுவும் சரி தான், அது இருக்கட்டும், நீங்கள் ஷெரிங்க்டன் பிரிவில் இருந்து மாண்ட்ரியல் பிரிவுக்கு மாற்றம் கேட்டிருந்தீர்களே அது என்ன ஆயிற்று?" என்று கேட்டான் ஜொஹான்.

"அது எனது ஹையர் அபிஷியல் மிஸ்டர் ஹாரிஸ் கையில் இருக்கிறது, அவர் கையெழுத்து போட்டால் முடிந்துவிடும்" என்றார் கென்னடி.

"சுத்தம், அது தானே உங்களுக்கு பிரச்சினையே, அவருக்கும் உங்களுக்கும் தான் பணியில் பனிப்போரே நடந்துகொண்டிருக்கிறது, அந்த இரட்டை கொலை வழக்கை நீங்கள் துப்பறிந்த போதே அவர் உங்கள்மேல் மிக கோவமாக இருந்தார்" என்றான் ஜொஹான்.

"ஆமாம், இப்போதும் அவர் தான் என் பணி உயர்வையும் தடுத்து வைத்திருக்கிறார், என் பணி இடமாற்றத்தையும் தடுத்து வைத்திருக்கிறார், சில சமயங்களில் அவருடைய செய்கைகள் என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சேர்த்துவிடும்" என்றார் கென்னடி.

"அப்பா, இன்னும் நான்கு வருடங்கள் தானே, நீங்கள் எந்த ஒரு பிரச்னையும் செய்யாமல் ஷெரிங்க்டன் பிரிவிலேயே இருங்கள். வெறும் ஐம்பது கிலோமீட்டர் தானே. தினமும் கூட சென்று வரலாம் இல்லையா?" என்றான் ஜொஹான்.

"நீ சொல்வது சரி தான் ஜொஹான், வயது என்ற ஒன்று இருக்கிறது இல்லையா, அதுமட்டும் இல்லை, நான் ஆக்னஸ் மற்றும் அஷ்லேவிடம் சொல்லவில்லை, உன்னிடம் சொல்கிறேன், உண்மையிலேயே என் உடல் எனக்கு ஒத்துழைக்கவில்லை, ஆஸ்துமா ஒருபக்கம், வயோதிகம் மறுபக்கம், சிலநேரங்களில் ரத்த அழுத்தம் வேறு, அதனால் தனிமையில் இருப்பது கடினம்" என்றார் கென்னடி.

"அப்படி என்றாள் நீங்கள் உங்கள் நிலைமையை எடுத்துச்சொல்லி உங்கள் மருத்துவ கோப்புகளை கொடுத்து வேண்டிக்கிட்டு பாருங்கள்" என்றான் ஜொஹான்.

"இம்முறை அதுதான் செய்வதாக உள்ளேன், பார்க்கலாம்" என்றபடி எழுந்து வெளியே சென்றார் கென்னடி.

"எங்கே அப்பா, புகை பிடிக்கவா?" என்றான் ஜொஹான்.

"கத்தாதே, உன் அம்மாவுக்கும் தங்கைக்கும் தெரிந்தால் அவ்வளவுதான்" என்றபடி வெளியே நடந்தார் கென்னடி.

ஜொஹானின் கைபேசி ஒலித்தது.

"ஹல்லோ மெர்சி, எப்படி இருக்கிறாய், எங்கே....வான்கூவர் வந்துவிட்டாயா?" என்றான் ஜொஹான்.

"ஜொஹான், நான் மைக்கேல், மெர்சி கார் ஒட்டுகிறாள், உன்னை அழைத்து தான் வான்கூவர் வந்துவிட்டதாக சொல்லச்சொன்னாள். இப்போது தான் அவளை விமான நிலையத்தில் இருந்து அழைத்துக்கொண்டு க்ளோவெர்டேல் 180 சாலைக்கு போய்க்கொண்டிருக்கிறேன், என்னுடன் நமது சகார்லெட் இருக்கிறாள்." என்றான் மைக்கேல்.

"ஓஹ், நல்லது, அவளுக்கு என் நல்வரவை சொல்லவும். மேலும் எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா என்று கேள்" என்றான் ஜொஹான்.

"என்ன உதவி, சொல், கேட்கிறேன்" என்றான் மைக்கேல்.

"வெறும் முப்பது கிலோமீட்டர் தானே, கொஞ்சம் சர்ரேவில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் சென்று அலெக்ஸை பார்த்து அவனுக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க முடியுமா?" என்றான் ஜொஹான்.

அதை அப்படியே மெர்சியிடம் கேட்டுவிட்டு மீண்டும் ஜொஹானிடம் பதில் சொன்னான் மைக்கேல்,"இல்லை ஜொஹான், இன்று வேண்டாமாம், நாளை நீ வந்தவுடன் அனைவரும் போகலாம் என்று சொல்கிறாள் மெர்சி" என்றான் மைக்கேல்.

"ஆமாம், அதுவும் சரி தான், சரி, நீங்கள் இல்லம் சேர்ந்ததும் என்னை கூப்பிடுங்கள்" என்றபடி கைபேசி இணைப்பை துண்டித்தான் ஜொஹான்.

"அலெக்ஸ் ஏன் இப்படி செய்கிறான், அவன் ஏதோ பெரிய சிக்கலில் இருக்கிறானா இல்லை ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கிறதா ஒன்றும் புரியவில்லையே......" ஆழ்ந்த நினைப்பில் தலையை சொறிந்தவாறே தாது அறைக்குள் சென்றான் ஜொஹான்.

திகில் தொடரும்.

பகுதி 4 முடிந்தது.

எழுதியவர் : முபாரக் (15-Feb-18, 5:50 pm)
சேர்த்தது : முபாரக்
பார்வை : 243

மேலே