கனவுகளும் கலைப்புகளும் -----------மகாத்மாக்களும் உருப்படிகளும்

கனவுகளும் கலைப்புகளும்
கனவுகள் இரண்டு வகை. நம்மையறியாமல் நாம் தூங்கும்போது வருபவை; நாமாகவே விரும்பி காண்பவை. எல்லாக் கனவுகளும் நிஜத்தில் நடந்துவிடுவதில்லை. இருந்தும் கனவுகள் நமக்கு பிடித்தமானவையாகவே இருக்கின்றன. கனவும் நிஜம்தான்; கலைப்பும் நிஜம்தான்.

ஜெயமோகனின் "ஏழாம் உலகம்" நாவலை முன் வைத்து.


எத்தனையோ முறை கோயிலுக்குச் சென்றிருக்கிறீர்கள் தானே? வழியில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு கோயிலுக்குள் செல்வதற்கு முன் ஒருமுறை கூட பிச்சையிட்டதில்லை அல்லவா? உள்ளே சென்று உங்கள் வேண்டுதல்களைச் சமர்ப்பித்துவிட்டு வெளியேறும்போது ஒரே ஒரு பிச்சைக்காரனிடம் பணத்தைக் கொடுத்து தங்களுக்குள் பிரித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு உடனே கிளம்பிவிடுவீர்கள்தானே? நாம் கவனிக்கத் தவறிய அந்த மனிதர்களின் உலகம் எப்படிப்பட்டது என்று யோசித்திருக்கிறீர்களா? கை கால் இல்லாதவர்கள், கூனர்கள், குருடர்கள், முன் கழுத்திலிருந்து நெஞ்சு வரை தொங்கும் கழலை கொண்டவர்கள், பெரிய விரைகளைக் கொண்டவர்கள், விகாரமான முக அமைப்பைக் கொண்ட பெண்கள், எந்த வடிவத்திலும் சேராத உடலமைப்பைக் கொண்ட குழந்தைகள்—இப்படி உடல் குறைகளோடு பிச்சை எடுக்கும் அந்த மனிதர்களின் உலகம் தான் எழுத்தாளர் ஜெயமோகனின் “ஏழாம் உலகம்”.

காற்றிலிருந்து கடல் வரை சந்தைப் படுத்தப்படாதவை என்று இங்கே எதுவும் இல்லை. காற்றையும் கடலையும் சந்தைப்படுத்துவதுதான் புதியதே தவிர மனித உயிரையும் உடலையும் சந்தைப்படுத்துவது அல்ல. சொல்லப்போனால் இவையிரண்டும் ஆதிப் பழையன.

குறைப்பிறவிகளைப் புணர வைத்து அவர்கள் மூலமாகப் பிறக்கும் குறைப்பிறவிகளை பிச்சை எடுக்க வைத்தும், விற்றும், வாங்கியும் பெரும் தொழில் செய்பவர் போத்திவேலு பண்டாரம். முத்தம்மை (குறைப்பிறவிகளுள் ஒரு பெண்) பண்டாரத்துக்கு அமுதசுரபி போன்றவள். அவளால்தான் பண்டாரத்தின் தொழில் செழிக்கிறது. மொத்தம் பதினெட்டு ‘உருப்படி’களைப் பெற்றுத்தந்தவள். ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட அவளால் வளர்க்க முடிந்ததில்லை. யாரிடமோ விற்றுவிடுவார் பண்டாரம். முத்தம்மையின் பதினெட்டாவது பிரசவத்தின்போது பண்டாரம்தான் அதிகம் பதற்றமடைகிறார். கடவுளை வேண்டிக்கொள்கிறார்—எப்படியாவது அதிக குறையோடு குழந்தை பிறக்கவேண்டும் என்று. அவர் எதிர்பார்த்தது போலவே பிறக்கிறது. பிறந்த சில நாட்களிலேயே அந்தக் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வெயிலில் போட்டு அவ்வப்போது அதில் தண்ணீர் தெளித்து வெயில் தாளாமல் துடித்து அழும் அந்தக் குழந்தையின் மீது விழும் இரக்கத்தை வைத்து பணம் பண்ணுகிறார். பூசணிக்காய் அளவு விரைகளைக் கொண்ட அகமதுவை விலை கொடுத்து வாங்கும்போது அவன் மூலம் நிறைய சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போடுகிறார் பண்டாரம். குறைப்பிறவிகளை திருவிழாவின் போது பிச்சைக்கு இன்னொரு கோயிலுக்குக் கொண்டுசெல்ல வண்டியில் பொருட்களை அள்ளிப்போடுவது போல ஒருவர் மேல் ஒருவரைத் தூக்கிப் போட்டுச் செல்கிறார்; காவல்துறை அதிகாரியின் காம வேட்கையைத் தணிக்க ஒரு பெண் உருப்படியை அனுப்புகிறார்; கோயில் அர்ச்சகர் போத்தி முத்தம்மையை ஒருமுறை நிர்வாணமாக பார்க்கவேண்டும் என்று சொல்லும்போது சரியென்கிறார்; தன் பெண்ணின் திருமணச் செலவுக்காக சில உருப்படிகளை விற்கிறார்; இப்படி குரூரத்தின் உருவமாகவே இருக்கும் பண்டாரம் ஒற்றைப் பரிமாண ஆள் அல்ல என்பதற்கும் சில காட்சிகள் இருக்கின்றன.

ராமப்பனும் குய்யனும் (குறைப்பிறவிகள்) சில சமயம் அவரை வம்பளக்கும்போது அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. தன்னுடைய இரண்டாவது பெண் மூத்தவளின் நகைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு லாரன்ஸுடன் ஓடிப்போனதையும் அவர் இயல்பாகவே எடுத்துக்கொள்கிறார். மற்றவர்களிடமும் அது குறித்து பேசத் தயங்குவதில்லை. தன்னுடைய பெண் கேட்ட வளையளை வாங்க மறந்த பண்டாரம் அவள் எழுவதற்குள் இரவிலேயே ஆசாரி வீட்டுக்குச் சென்று கொஞ்சம் அதிகமாகவே பணம் கொடுத்து வாங்கி வருகிறார். அதே சமயம், தான் பிற உயிர்களை வைத்துத்தான் பணம் செய்கிறோம் என்பதை அவர் ஒரு கணம் கூட உணர்ந்ததே இல்லை. அவர்கள் மீது அவருக்குத் துளியும் இரக்கம் இல்லை. ஒரே ஓர் இடத்தில் மட்டும் கொஞ்சம் மாறுபடுகிறார். தன்னுடைய பெண்ணின் திருமணத்தில் சாப்பாடு மீதம் இருந்தால் தன்னிடம் இருக்கும் உருப்படிகளுக்குக் கொடுக்கலாம் என்று சொல்கிறார். ஆனால் அதற்குள் மாப்பிள்ளையின் நண்பர்கள் நிறைய பேர் வந்துவிடுகிறார்கள்.

ஆனால், இதே போத்திவேலு பண்டாரம் உருப்படி வாங்குவதற்காக ஓர் இடத்துக்குச் செல்கிறார். அங்கு குறையில்லாமல் இருக்கும் குழந்தைகளை உருமாற்றுகிறார்கள். கண்களை குருடாக்கியும் கை, கால்களை முறித்தும், முகங்களை சிதைத்தும் உருமாற்றும் அந்தக் காட்சியைப் பார்க்கும் பண்டாரம் அலறியடித்து அங்கிருந்து ஓடிவிடுகிறார். புணர வைத்து உருப்படிகளைப் பெற வைப்பதில் அவருக்கு குற்ற உணர்ச்சி இல்லை; பிறந்து வளரும் குழந்தைகளை உருமாற்றுவது ஏனோ கலக்கத்தை உண்டுபண்ணுகிறது.

குறைப்பிறவிகளும் பண்டாரத்தை எதிரியாய்ப் பார்ப்பதில்லை. தன்னுடைய முதலாளியாக நினைத்து “மோலாளி, மோலாளி” என்று தான் அழைக்கிறார்கள். அவருடைய பெண்ணின் திருமணத்துக்குத் தன்னை அழைக்கவில்லை என்று அகமது வருத்தப்படுவதும் அதனால்தான். பெண்கள் கதாபாத்திரங்களான ஏக்கியம்மை, முத்தமை, எருக்கு மூவரில் முத்தம்மை ஆழமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டாள். எந்த நம்பிக்கையில் அவள் தன் உயிரை மாய்த்துக்கொள்ளாமல் வாழ்கிறாள்? அவளுக்கு இருத்தலுக்கான ஏதோ ஒன்று காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு பிரசவத்தின்போதும் வாழ்தலுக்கான நம்பிக்கையும் அவளிடம் பிறக்கிறது. ஆனால், நாவலின் இறுதியில் ஒற்றை விரல் கொண்ட தன் மகனுடனேயே உறவு வைத்துக்கொள்ள நேரும்போது “ஐயோ. ஒத்த வெரலு வேணாம், ஒத்த வெரலு” என்ற அவளின் ஓலம் அதன் பிறகும் அவளை உயிரோடு வைத்திருக்குமா என்பது கேள்விக்குறிதான். குருடனான தொரப்பன் தன் குழந்தையை ஒரே ஒரு முறையாவது தொட்டுப் பார்க்க வேண்டும் என்று ஏங்குவது தந்தைமையின் சான்று. தாய்மையும் தந்தைமையும் அவற்றின் உச்ச நிலைகளில் சித்தரிக்கப்படுகின்றன. ரத்தமும் சதையுமான படைப்பு என்பார்களே? அது இந்த நாவலுக்கு முற்றிலும் பொருந்தும்.

விளிம்பு நிலை மக்களின் வாழ்வை மிக நுட்பமாகவும் அதிகமாகவும் தமிழில் பதிவு செய்தவர்களில் ஜெயகாந்தன் முதன்மையானவர். ஜெயகாந்தனுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்த நாவல் அவருடைய உலகையும் தாண்டிச் செல்லக்கூடியது. ஜெயகாந்தன் உலகின் மனிதர்கள் ஓட்டுரிமை பெற்றவர்கள், ரேசன் அட்டை உள்ளவர்கள். ஆனால் சமூகத்தின் பாகுபாடுகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள். அடங்கியே பழக்கப்பட்ட அவர்கள் ஒரு கட்டத்தில் குரல் கொடுக்கவும் தொடங்கினர். அவர்களின் குரலாகத்தான் ஜெயகாந்தன் ஒலித்தார். ஜெயமோகன் காட்டும் ஏழாம் உலக மனிதர்களும் புறக்கணிக்கப்பட்டவர்கள்தான். ஆனால், இவர்களுக்கு ஓட்டுரிமையோ, ஆதார் அட்டையோ கிடையாது. சொல்லப்போனால் இவர்கள் மனிதர்களாகவே கருதப்படுவதில்லை. ஆடு, மாடு, கோழி போல இவர்களின் உடலும் ஒரு சந்தைப் பொருள். ஒருநாளும் இந்தச் சமூகத்தை நோக்கி குரல் எழுப்பியதில்லை இவர்கள்.

“ஏழாம் உலகம்” நாவலின் மூலமாகத்தான் ஜெயமோகன் எனக்கு அறிமுகம். தத்துவ விசாரங்கள் ததும்பும் “வெண்முரசு”, “வெள்ளையானை” போன்ற படைப்புகளையும் “ரப்பர்” போன்ற இயற்கை சார்ந்த படைப்புகளையும் எழுதியிருந்தாலும் நம்முடன் இங்கே வாழும் ஒரு பகுதி மக்களின் வாழ்வை சீழும் மலமுமாகப் பேசும் “ஏழாம் உலகம்” தான் என்னளவில் முக்கியமான படைப்பாகத் தோன்றுகிறது. ஒரு நல்ல படைப்பு எப்போதுமே எழுத்தாளனுக்கு வேலை வைக்காது. தத்துவத்தில் பெரிய ஈடுபாடு கொண்டிருந்தாலும், இந்த நாவலில் ஜெயமோகனின் குரல் சன்னித்திலும் சன்னமாக ஒலிக்கிறது. தன் தத்துவ தரிசனங்களை விளக்காமல் கதாபாத்திரங்களையே பேச வைத்திருக்கிறார். இப்படியும் சொல்லலாம்—கதாபாத்திரங்கள் ஆசிரியரை பேசவிடுவதேயில்லை. தத்துவங்கள் எல்லாம் பொய்த்துப் போகும் உலகம் இந்த ஏழாம் உலகம். (தத்துவம் பொய்த்துப் போவதும் ஒரு தத்துவம் என்று சொல்லிவிடாதீர்கள்.) சில நாவல்கள் மன எழுச்சியை உண்டாக்கும். சில நாவல்கள்தான் மன உளைச்சலை உண்டுபண்ணும். இந்த நாவல் தந்த மன உளைச்சல் பல நாள் தொடர்ந்தது.

நாவலின் ஒரே குறையாக நான் கருதுவது அறிவியலை பொருட்படுத்தாமல் இருந்ததுதான். இரண்டு குறைப்பிறவிகளுக்கு குறைப்பிறவிகளாகப் பிறக்கும் என்பது மரபியல் படி தவறான கொள்கையாகும். பத்தாம் வகுப்பு முடித்த பள்ளி மாணவன் கூட இதை எளிதாகச் சுட்டிக்காட்டிவிடுவான். ஜெயமோகன் இதில் கவனம் செலுத்தாதது ஏனோ? அது ஆச்சர்யமும் அல்ல. மனவெழுச்சியின் உத்வேகத்தில் எழுதும்போது அறிவியலை விட்டுவிட்டார். ஆனாலும், தமிழில் அதுவரை பேசாப் பொருளைப் பேசிய “ஏழாம் உலகம்” தமிழின் மிக முக்கியமான படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை.




“வண்மையில்லை ஓர் வறுமையின்மையால்” என்று கவிதைக்காக கம்பன் சொன்னாலும் உலகம் ஒரு காலத்திலும் அப்படி இருந்ததே இல்லை. வள்ளுவம் சொல்வது போல் ஆகூழும் போகூழும், செல்வமும் அதை தேய்க்கும் படையும், உறுபசியும் ஓவாப்பிணியும் சேர்ந்ததுதான் உலகம். எனவே, இங்கே புறக்கணிக்கப்படும் மனிதர்கள் இலக்கியங்களில் பதிவு செய்யப்படும்போது அந்தப் படைப்புகள் ஆவணமாகி காலாகாலத்துக்கும் கேள்விகளை எழுப்பிக்கொண்டு இருக்கின்றன.

நல்வினை, தீவினை என்று இருவினைகள் கிடையாது. வினை என்ற ஒன்றுதான் இருக்கிறது என்று சொல்வார்கள். அதேபோல் கடவுளும் சாத்தானும் வேறு வேறு அல்ல. கோயிலுக்கு உள்ளே இருப்பதுதான் வெளியேயும் இருக்கிறது; வெளியே இருப்பதுதான் உள்ளேயும் இருக்கிறது.

காந்தியும் காமராஜரும் கலாமும் மக்களுக்காகவே வாழ்ந்தனர். அவர்கள் போன்றோரின் வாழ்வை பயன்படுத்திக்கொண்டவர்கள் மற்றவர்களே. அதேபோல்தான், சுப்பம்மை, ஏக்கியம்மை, எருக்கு, ராமப்பன், தொரப்பன், அகமது என்று ஒவ்வொருவரின் பிறப்பும் வாழ்வும் (அங்கே வாழ்வதற்கு என்ன இருக்கிறது?) மற்றவர்களுக்காகவே இருந்து முடிந்தும் போகிறது. ஆனால், இவர்கள் மகாத்மாக்கள் அல்ல; மனித ஆத்மாக்கள் கூட அல்ல; நம்முடைய உன்னதமான உலக மொழியில் “உருப்படிகள்”.

உலக வாழ்க்கையிலிருந்தும் வாழ்வின் கவலைகளிலிருந்தும் தப்பித்துக்கொள்வதற்கு சிறந்த உபாயங்களில் ஒன்று வாசிப்பு என்று சொல்பவர்கள் பலர். ஆனால், மகத்தான படைப்புகள் ஒருபோதும் நம்மை வாழ்க்கையிலிருந்து தப்பித்துக்கொள்ள அனுமதிக்காது. மாறாக, இந்த உலகின் மீதும் மனிதர்கள் மீதும் உயிர்களின் மீதும் அதிக பற்றும் அக்கறையும் கொள்ள வைக்கும். கவலைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று வாசிக்கத் தொடங்கிய இந்த நாவல் மனதளவில் என்னை பெரிதும் உலுக்கியது.

அடிக்கடி இப்போது கிண்டி ரயில் நிலையம் செல்லும் போது, இதே போல் அங்கே அமர்ந்து பிச்சையெடுப்பவர்களின் குரல்களைக் கேட்கும்போதும் அவர்களைப் பார்க்கும்போதும் என்னையறியாமல் சில கணம் நின்றுவிடுகிறேன். காசு கொடுப்பதிலும் முழு சம்மதம் இல்லாமல் (அவர்களுக்குப் பயன்படாதே?) கொடுக்காமலும் நகர முடியாமல் ஏழாம் உலகம் என்னும் அந்தப் பாதாளத்துக்குள் விழுந்துவிடுகிறேன். மீண்டும் இலக்கியங்களே அதிலிருந்து என்னை மீட்டெடுக்கின்றன.

பி. கு: “நான்காவது கோணம்” இதழுக்காக ஜூன் 2017இல் எழுதிய கட்டுரை.

இடுகையிட்டது தீன தயாளன்

எழுதியவர் : (15-Feb-18, 5:28 pm)
பார்வை : 78

மேலே