மௌனம்

சரியான தருணங்களில் சரியாக பயன்படுத்த
சரிகின்ற வாழ்வை சரியாக்கும் மௌனம்
புரியாமல் சிலபேர் குதிக்கின்ற போது
புரியவே வைத்திடும் பேசாத மௌனம்

பெருமழையும் புயலும் இடிக்கின்ற இடியும்
அருந்தமிழ் கவிஞருக்கு கவிகொடுக்கும் மௌனம்
விருந்தினர்கள் உவகை மழலைகளின் ஆட்டம்
மாற்றமேனும் தந்திடாது நோய்முதியோர் மௌனம்

பேரிரைச்சல் கொடுக்கும் மனஅமைதி கெடுக்கும்
கடிதத்தின் அடுத்தநாள் காதலியின் மௌனம்
கோபத்தை அள்ளித்தரும் திட்டும்படி சொல்லித்தரும்
ஆசிரியர் கேள்விக்கு மாணாக்கர் மௌனம்

பேருவகை அளிக்கும் பேரின்பம் தெளிக்கும்
தூக்கத்தில் சிரிக்கின்ற பிறந்தசிசு மௌனம்
காரிருளின் தருணம் காட்டுவழிப் பயணம்
பெரும்பயத்தை காட்டும் பறவைகளின் மௌனம்

சண்டைகளின் நடுவே சமாதானம் செய்வோரை
வேண்டாத சொல்தாக்க வந்துவிடும் மௌனம்
என்னபாவம் செய்தார் சிலருக்கு கடவுள்
வாய்தனையே அடைத்தான் பிறப்புமுதல் மௌனம்

எழுதியவர் : (18-Feb-18, 8:11 am)
Tanglish : mounam
பார்வை : 1769

மேலே