ஓலைச்சுவடிகளை நூல்களாகப் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள்

தமிழ் மொழியில் இன்று கிடைக்கக்கூடிய இலக்கிய, இலக்கண, மருத்துவ, கலை நூல்கள் அனைத்தும் தமிழ் ஓலைச்சுவடிகளைத் தேடி எடுத்து அவற்றை பதிப்பித்த பதிப்பாசிரியர்களை, சுவடியியல் அறிஞர் முனைவர். மாதவனின் சுவடிப்பதிப்பியல் எனும் நூல் ஒரு பட்டியலை வழங்கியுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பதிப்பாசிரியர்கள் அச்சில் பதிப்பித்த நூல்களைப் பற்றி மட்டுமே இங்கே குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் இயற்றியளித்த தனி நூல்கள் வேறு பலவுமுள்ளன.

எண் பதிப்பாசிரியர் நூல்கள் / குறிப்புகள்
1 திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் 1812 ஆம் ஆண்டில் முதன்முதல் அச்சில் வந்த ‘திருக்குறள் மூலபாடம் – நாலடியார் மூலபாடம் எந்னும் நூலை ஆராய்ந்து பதிப்பித்தவர் இவர். இவரைப் பற்றிய வேறு செய்திகள் அறியக்கூடவில்லை.



இதே ஆண்டில் அறிஞர் எல்லிஸ் (F.W.Ellis) அவர்கள் திருக்குறள் பதிப்பை (Tirukkural on virtue) ஆங்கில மொழிபெயர்ப்புடன் அச்சில் வெளியிட்டுள்ளார்.


2 அ. முத்துசாமிப்பிள்ளை 1816-ஆம் ஆண்டில் திரு.வால்தர் எல்லீஸ் துரையின் கட்டளைக்கிணங்க சென்னைக் கல்விச்சங்கத்துக்காக ஓலைச்சுவடிகளைச் சேகரித்து வருவதற்காகத் தென்னாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, முதன்முதலாகச் சுவடிகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டவர் இவர்.
பாண்டிச்சேரியில் பிறந்த இவர் தமிழ் இலக்கண இலக்கிய ஆராய்ச்சி மிக்கவர். வடமொழி, தெலுங்கு இவற்றுடன் ஆங்கிலம் இலத்தீன் மொழிகளிலும் தேர்ச்சி பெற்று, கிறித்தவ வேத விற்பன்னராகவும் திகழ்ந்தவர்.



1835 ஆம் ஆண்டில் திரு.தாண்டவராய முதலியாருடன் சேர்ந்து இலக்கணப் பஞ்சகங்களில்

நன்னூல் மூலமும்,
அகப்பொருள் மூலமும்
வெண்பா மாலையும்
அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். இவர் பிறந்த ஆண்டு விவரம் தெரியவில்லை.

3 புதுவை நயனப்ப முதலியார் (1779 – 1845)
சென்னை கோட்டைக் கல்லூரிக் கல்விச் சங்கத் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்த இவர் ஓய்வு நேரங்களில் ஓலைச்சுவடிகளைத் திரட்டி ஆராய்ந்து பதிப்பித்து வந்தவர்.

ஒருசொற் பலபொருட் தொகுதி உரைபாடம் (1835),
தஞ்சைவாணன் கோவை (1836),
நேமிநாதம் மூலபாடம் (1836),
நாலடியார் மூலமும் உரையும் (1844),
திவாகரநிகண்டு (9,10 ஆம் தொகுதி,
சூடாமணி நிகண்டு 11ஆம் பகுதி வரை (1839)
ஆகிய நூல்களை இவர் அச்சில் பதிப்பித்தவர். இவருடைய காலத்தில் ‘வில்லிபுத்தூரார் பாரதம்’ பதிப்பிக்க ஒருகுழு ஏற்படுத்தப்பெற்று அதன் தலைவராகவும் பதிப்பிக்கும் பொறுப்பேற்ற இவர் அதற்காகப் பல சுவடிகளையும் சேர்த்து வந்தனர். ஆயில்,அப்பதிப்புப் பணிக்கு முன்பே இவர் திடீரென இறந்தனர்.

4 முகவை இராமாநுசக் கவிராயர் இராமநாதபுர மாவட்டம் முகவை என்னும் ஊரினரான இவர் போர் வீரராக இருந்தவர். பின்னர் மாதவச் சிவஞான முனிவரின் மாணவரான திரு.சோமசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றவர். சென்னை சஞ்சீவிரான்பேட்டையில் சொந்தமாக அச்சுக்கூடம் வைத்திருந்தவர். களத்தூர் வேதகிரி முதலியார், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர் போன்றோரும் தாம்சன், கிளார்க்கு, ராஜஸ், துரு, போப், இரேனியூஸ் போன்ற ஐரோப்பியரும் இவரிடம் தமிழைப் பயின்றனர்.


திருக்குறள் – வெள்ளுரையும் புத்துரையும் (1840), (இவர் பதிப்பித்த திருக்குறளின் இரண்டாம் பாகம் 1852 இல் வெளி வந்தது. இது துரு ஐயரும் இவரும் சேர்ந்து பதிப்பித்ததாகும்.
ஆத்திசூடி (1840),
இனியவை நாற்பது – பழைய உரையுடன் (1845),
வெற்றி வேற்கை (1847)
கொன்றை வேந்தன் (1847)
நறுந்தொகை – காண்டிகையுரை,
நன்னூல் விருத்தியுரை (1847)
ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர் இவர். இவர் பிறந்த ஆண்டு விவரம் தெரியவில்லை.

5 களத்தூர் வேதகிரி முதலியார் (1795 – 1852) தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவராக இருந்த இவர் மதுரையிலும் புதுவையிலும் தமிழ்ப் புலவராகத் தொண்டாற்றியவர். சென்னையில் சொந்தமாக அச்சுக்கூடம் அமைத்து நூல்களை வெளியிட்டவர்.

பகவத் கீதை (1832),
சூடாமணி நிகண்டு – பதினோராம் பகுதி உரையுடன் (1843),
திருக்குறள் மூலமும் உரையும் (1849),
திருக்குறள் தெளிபொருள் விளக்கம் (1849),
யாப்பருங்கலக் காரிகை (1851),
நைடதம்
ஆகிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டவர்.


6 மழவை மகாலிங்கையர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தவர்.

தொல்காப்பியம் – (எழுத்ததிகாரம்)
நச்சினார்க்கினியம் (1847) முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டவர்.
திருத்தொண்டர் புராணம் (ஆனாயர் முடிய) (1845),
இலக்கணச் சுருக்கம் (1879)
போன்ற நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டார்.

7 தாண்டவராய முதலியார் சென்னை வில்லிவாக்கத்தில் பிறந்தவர். கல்விச் சங்கத்துத் தலைமைப் புலவராக இருந்தவர். தெலுங்கு, கன்னடம், இந்துஸ்தானி, மராட்டி,சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய பிற மொழிகளிலும் வல்லவர்.


வீரமாமுனிவரின் சதுர் அகராதி (1824),
சேந்தன் திவாகரம் (1835),
சூடாமணி நிகண்டு (1856)
ஆகிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டவர்.

8 திருத்தணிகை க.விசாகப் பெருமாளையர் திருத்தணிகை கந்தப்பையர் என்னும் வீரசைவரின் மூத்த மகனாகப் பிறந்த (1798) இவர் சென்னை மாகாணக் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தவர். சென்னையில் சொந்தமாக கல்வி விளக்க அச்சகம் ஒன்றை வைத்திருந்தவர். 1828 ஆம்ஆண்டிலேயே பதிப்பாசிரியராக விளங்கியவர்.

இலக்கணச் சுருக்க வினாவிடை (1828),
நன்னூல் – காண்டிகையுரை (1840),
திருக்கோவையார் (உரையுடன்) (1897)
போன்ற நூல்களைப் பதிப்பித்தவர்.

9 திருத்தணிகை க.சரவணப் பெருமாளையர் திருத்தணிகை க.விசாகப் பெருமாளையரின் தம்பியாக 1799 இல் பிறந்த இவரும் பயன்படத்தக்க பல தமிழ் நூல்களைவெளியிட்டவராவார்.

திருக்குறள் பரிமேலழகர் உரை (1830),
(இப்பதிப்பே திருக்குறளின் மூலமும் உரையும் கூடிய முதற்பதிப்பு ஆகும்).

அருணகிரியந்தாதி (1830),
பழமலையந்தாதி (1832),
திருக்கருவைப் பதிற்றந்தாதி மூலபாடம் (1835),
கந்தரலங்காரம் (1836), நல்வழியுரை,
நறுந்தொகையுரை,
நன்னெறியுரை,
நான்மணி மாலையுரை,
பிரபுலிங்கவுரை,
வாக்குண்டாம் உரை (1841),
கொன்றைவேந்தன் உரை,
திருவள்ளுவமாலையுரை,
நைடதவுரை (1842),
வெங்கைக் கோவையுரை,
நாலடியார்,
திருவிளையாடற்புராணம் (1850),
திருவாசகம் (1857)
ஆகிய நூல்களை அச்சிற் பதிப்பித்து வெளியிட்டவர்.

திருத்தணிகை க.விசாகப் பெருமாளையர், திருத்தணிகை க.சரவணப் பெருமாளையர் இவ்விருவரும் நீண்டகாலம் வாழ்ந்திருந்து பல நூல்களை இயற்றியும் அச்சிட்டும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10 திருவேங்கடாசல முதலியார்
சென்னைக் கல்விச்சங்கத் தமிழ்ப்புலவராக இருந்த இவர் சரஸ்வதி அச்சுக்கூடம் ஒன்றையும் நடத்தி வந்தவர்.


திருவேங்கடத்தந்தாதி,
திருவரங்கக் கலம்பகம்,
திருமாலிருஞ்சோலைமலை அழகரந்தாதி,
திருவரங்கத்தந்தாதி, நூற்றெட்டுத்
திருப்பதியந்தாதி (1830)
போன்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார்.



கம்பராமாயணத்தைக் காண்டம் காண்டமாக முதன்முதலில் வெளியிட்டவர்

இவரேயாவர்.

ஆரணிய காண்டம் (1844),
பாலகாண்டம் (1848),
இராமநாடகம் (1850),
பிரகலாதன் விலாசம் (1860),
ஸ்ரீகிருஷ்ணபகவான் தூது,
அரிச்சந்திர புராணம் – மூலமும் உரையும் (1869)
போன்ற அரிய நூல்களையும் இவர் பதிப்பித்துள்ளார்.


11 சந்திரசேகர கவிராச பண்டிதர் ( - 1883) சோழ நாட்டின் தில்லையம்பூரில் பிறந்தவர். சித்தூர் உயர் நிலைப் பள்ளியிலும், கும்பகோணம் கல்லூரியிலும் தமிழாசிரியராக இருந்தவர்.


தனிப்பாடல்கள் திரட்டு,
பாலபோத இலக்கணம்,
நன்னூற் காண்டிகையுரை,
ஐந்திலக்கண விடை,
நன்னூல் விரித்தியுரை,
யாப்பருங்காலக் காரிகையுரை,
வெண்பாப் பாட்டியல் உரை செய்யுட் கோவை,
பழமொழித் திரட்டு,
பரதநூல்,
தண்டியலங்கார உரை
போன்ற நூல்களைப் பதிப்பித்தவர்.

12 திரிசிரபுரம் வி.கோவிந்த பிள்ளை ( - 1890)
திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடன் பயின்றவர் இவர். மலைக்கோட்டை மௌனசாமி மடத்து வேலாயுத முனிவரிடத்தில் தமிழ் பயின்ற இவர் சிறந்த வைணவராகத் திகழ்ந்து உரையாசிரியராகவும் விளங்கியவர்.

கம்பராமாயணம்
முழுவதையும் இவர் அச்சிற் பதிப்பித்து வெளியிட்டுச் சிறப்புற்றவர்.

13 கொட்டையூர் த.சிவக்கொழுந்து தேசிகர் தஞ்சை சரபோஜி மன்னரின் (1798 – 1832) அவைப் புலவராக இருந்து பல நூல்களை இயற்றியவர் இவர். திருத்தணிகை விசாகப் பெருமாளையரும் இவரும் சேர்ந்து, முதன்முதலாகத்

திருவாசகத்தை
ஏட்டுச் சுவடியிலிருந்துபெயர்த்தெழுதி 1857 இல் அச்சில் பதிப்பித்து வெளியிட்டனர். இதுவே முதன்முதல் அச்சிடப்பட்ட திருவாசகமாகும்.

14 காஞ்சிபுரம் மகாவித்துவான் சி.எஸ். சபாபதி முதலியார்
காஞ்சி பச்சையப்பன் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த இவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கும் ஆசிரியராக இருந்தார். சைவத் திருமுறைகளை முதன்முதலில் அச்சிற் பதித்தவர் இவரே.

திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி (1837),
பரமராசிய மாலை (1836),
திருஞானசம்பந்த சுவாமிகள் திருமுறை (1864),
தேவாரத் திருப்பதிகத் திருமுறை (1866),
சுந்தரமூர்த்தி பதிகம்,
திருநாவுக்கரசர் பதிகம் (1867),
பெரியபுராணம் (1870)
ஆகிய பதிப்புகளை இவர் வழங்கியுள்ளார். ஆறுமுக நாவலர் 1884 இல் பதிப்பித்த பெரியபுராணப் பதிப்பில் 4286 பாடல்களே உள. ஆயின், இதற்கு முன் இவர் பதிப்பித்த (1870) பெரியபுராணத்தில் 4299 பாடல்கள் உள்ளன.

15 யாழ்ப்பாணம் கோப்பாய் அம்பலவாண பண்டிதர் (1814 – 1879)
நல்லை வெண்பா,
நீராவிக்கலிவெண்பா
போன்ற நூல்களை அச்சில் பதிப்பித்தவர் இவர்.

16 யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அம்பலவாண நாவலர் திருச்சுழியற் புராணம்,
நடன வாத்திய ரஞ்சனம்,
சண்முக சடாச்சரப் பதிகம்
போன்ற நூல்களைப் பதிப்பித்த இவர் இந்நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்.

17 யாழ்ப்பாணம் மன்னிப்பாய் அருணாசல சதாசிவம் பிள்ளை (1820 – 1896) கிறித்தவரான இவர் பல நூல்களை எழுதியவர்.

உரிச்சொல் நிகண்டு (1858-இல் )
(12 தொகுதி) அச்சில் பதிப்பித்து வெளியிட்டவர் இவர்.

18 தொண்டை மண்டலம் இராசநல்லூர் இராமச்சந்திர கவிராயர் சென்னைக் கல்விச்சங்கத்தின் தமிழ்ப் புலவராகவும் முத்தமிழ் வித்தகராகவும் விளங்கிய இவர் பல நாடக நூல்களை இயற்றியவர். 1824 ஆம் ஆண்டில் திரு.தாண்டவராய முதலியாருடன் இணைந்து முதன்முதலாக

சதுரகராதி
பதிப்புப் பணியைச் செய்தனர்.

19 மகாவித்துவான் சி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815 – 1876) பல தமிழ் வித்துவான்களுக்கும் மேலான மகாவித்துவானாக விளங்கிய தலைசிறந்த மகாகவி திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். தமக்கு வேண்டிய நூல்கள் அனைத்தையும் தம் கையாலேயே ஓலையில் ஒரே அளவில் மிக அழகாக எழுதிக் குவித்தவர் இவர். கம்பராமாயணம் முழுவதையும் தம் கையாலேயே மூன்றுமுறை எழுதிப் படியோலை பண்ணிய பெரியவர் இவர்.


22 தலபுராணங்களும், 6 பிற காப்பியங்களும், 51 பிரபந்தங்களும் கணக்கற்ற தனிப்பாடல்களும் என ஏராளமான இலக்கியங்களை இவற்றிய இவரைப் போன்ற தமிழறிஞர் இந்நூற்றாண்டில் எவருமில்லை. ஏராளமான இலக்கிய இலக்கண ஏட்டுச் சுவடிகளையும் அவர் திரட்டி வைத்திருந்தார். ஆயினும், அச்சில் பதிப்பதில் அவருக்கு அதிக நாட்டமில்லை.

செவ்வந்திப் புராணம் (1851),
காஞ்சிப்புராணம்,
திருவானைகாப்புராணம்,
கல்லாடம் (1868)
ஆகிய நூல்களை ஓலைச்சுவடியிலுள்ளவாறே அச்சில் பதிப்பித்தார். இவருக்குப் பின் வந்த இவருடைய மாணவர்களே இவருடைய நூல்களையும் பிற நூல்களையும் மிகுதியாகப்பதிப்பித்தனர்.

20 யாழ்ப்பாணம் நல்லூர் க.ஆறுமுக நாவலர் (1822 – 1879) சைவ சமயத் தொண்டால் சிறப்புற்று, தருமபுர ஆதீனத்தால் ‘நாவலர்’ என்ற பெயர் பெற்ற இவர் பதிப்புத்துறையிலும் பெரும் புகழ் பெற்றவர்.


சூடாமணி நிகண்டு உரை,
சௌந்தரியலகரி உரை (1849),
நன்னூல் விருத்தியுரை,
திருச்செந்தூர் நீரோட்டக யமக வந்தாதி,
திருமுருகாற்றுப்படை (1851),
ஞானக்கும்மி (1852),
திருவாசகம்,
திருக்கோவையார் (1860),
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்(1861),
தருக்க சங்கிரகம்,
அன்னபட்டீயம் (1861),
இலக்கணக்கொத்து,
இலக்கண விளக்கச் சூறாவளி,
தொல்காப்பிய சூத்திரவிருத்தி (1866),
கோயிற்புராணம் (1867),
சைவசமய நெறி (1868)
போன்ற நல்ல பதிப்புகளை உருவாக்கி வெளியிட்டவர் இவர். தமிழில் நல்ல திருத்தமான பதிப்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வன இவருடைய பதிப்புகளேயாம்.


தம் சைவசமய நூல்களோடு பிற சமய நூல்களான

வில்லிபுத்தூரார் பாரதம்,
சீவக சிந்தாமணியுரை,
சிலப்பதிகாரவுரை,
மணிமேகலையுரை,
வளையாபதியுரை
போன்றவற்றையும் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக 1862 இல் அவர் வெளியிட்ட திருக்கோவையார் நூலில் கூறியுள்ளார். இவ்வாறு அவர் பத்து நூல்களை அச்சிற் பதிப்பிக்கும் பொருட்டு எழுதி முடித்து வைத்திருந்தார் என்றும் அறிய முடிகிறது. ஆனால், அவை வெளிவரவில்லை. அவர் உடனடியாக வெளியிட்டிருந்தால் வளையாபதி நமக்குக் கிடைத்திருக்கும் என்பர்.


21 வடலூர் இராமலிங்க அடிகள் (1823 – 1874) சிதம்பரம் மருதூர் இராமையா பிள்ளையவர்களின் ஆறாவது மனைவிக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர் இராமலிங்கம் பிள்ளையவர்கள். இளமையிலேயே பற்றற்றவராக விளங்கி ஆன்மநேய ஒருமைப்பாடு என்னும் நெறியைப் பரப்பிய வள்ளல். சிறந்த நூலாசிரியராகவும், உரையாசிரியராகவும், இதழாசிரியராகவும், விரிவுரையாளராகவும், சித்த மருத்துவராகவும்,சீர்திருத்தவாதியாகவும், அருள்ஞானியாகவும் விளங்கிய இவர் சிறந்த பதிப்பாசிரியராகவும் திகழ்ந்த பேராளர்.


ஒழிவிலொடுக்கம் (1851),
தொண்டைமண்டல சதகம் (1857),
சின்மய தீபிகை (1857)
ஆகிய நூல்களை அச்சில் பதிப்பித்து வெளியிட்டவர் இவர்.

22 பாளையங்கோட்டை எச்.ஏ.கிருஷ்ணபிள்ளாய் (1827 – 1900) ஹென்றி ஆல்பிரட்டு கிருஷ்ணபிள்ளை என அழைக்கப்பெறும் இவர்,

வேதப்பொருள் அம்மானை (1865),
பரதகண்ட புராதனம்,
காவிய தரும சங்கிரகம்
போன்ற நூல்களைப் பதிப்பித்தவராவார்.

23 சோடசாவதானம் வீ.சுப்பராய செட்டியார் பதினோராம் திருமுறை முழுவதையும்
பல ஏட்டுச் சுவடிகளை ஒப்புநோக்கி, முதன்முதலாகப் பதிப்பித்து 1869 இல் வெளியிட்டவர் இவரே. தம் ஆசிரியர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்

மாயூரப் புராணம்,
நாகைகாரோணப்புராணம்
ஆகியவற்றையும்,

காங்கேயன் உரிச்சொல் நிகண்டு,
திருப்போரூர் சந்நிதிமுறை
ஆகியவற்றையும் பதிப்பித்துள்ளார்.

சிலப்பதிகாரம் – புகார்க் காண்டத்தின் கானல்வரிக்குப் புதியதாய் உரை
எழுதி, 1872 இல் முதன்முதலாகப் பதிப்பித்தவர் இவர்.


24 கோமளபுரம் இராசகோபாலப்பிள்ளை சென்னை மாகாணக் கல்லூரியில் தமிழ்ப் புலவராக இருந்த இவர் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

திருவாய்மொழி (1859),
தொல்காப்பியம் சேனாவரையம் (1868),
திருநீலகண்ட நாயனார் விலாசம் (1875),
நளவெண்பா (1879),
வில்லிபுத்தூரர் பாரதம்,
நாலடியார் (1903)
போன்ற நூல்களை இவர் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

25 யாழ்ப்பாணம் உடுப்பிட்டி கு.கதிரைவேற் பிள்ளை (1829 – 1904) மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட தமிழ்ச் சொல் அகராதியைத் தயாரித்த இவர் காவல்துறை நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர்.

தர்க்க சூடாமணி - 1862 – இல்
என்னும் நூலை இவர் பதித்தார்.

26 புதுவை சவராயலு நாயகர் (1829 – 1911) தேம்பாவணி உபதேசிகர் என்று கிறித்தவ அன்பர்களால் அழைக்கப்பெறும் இவர்,

பேரின்ப சதகம்,
பேரின்ப அந்தாதி,
திருநவச்சதகம்,
தேவதோத்திர சங்கீத கீர்த்தனம்
ஆகிய நூல்களையும் அச்சில் பதிப்பித்து வெளியிட்டவராவார்.

27 பொன்னம்பல சுவாமிகள் (1832 – 1904) கோவலூர் சிதம்பர மடத்தை நிறுவிய இவர்,

பிரபோத சந்திரோதயம் என்னும் மெய்ஞ்ஞான விளக்கம் (1889),
பஞ்சதசி,
பாடுதுறை
போன்ற நூல்களைப் பதிப்பித்தவராவார்.

கைவல்லிய நவநீதம்,
வேதாந்த சூடாமணி,
பகவத்கீதை
போன்ற நூல்களுக்கும் உரை எழுதி பதிப்பித்துள்ளார்.

28 தொழுவூர் செ.வேலாயுத முதலியார் (1832 – 1889) சென்னை மாகணக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த இவர் வள்ளலாரிடம் பேரன்பு கொண்டவர். இராமலிங்க அடிகளின் பாடல்களைத் தொகுத்து,

திருவருட்பா
என்று பெயரிட்டு ஐந்து திருமுறைகளை 1880 இல் பதிப்பித்துள்ளார் இவர்.

29 காயல்பட்டினம் செய்குஅப்துல் காதிரு நயினார் லப்பை ஆலிம் ( - 1848)
சேனாப் புலவர் என்றும், புலவர் நாயகம் என்றும் அழைக்கப் பெறும் இவர் குணங்குடி மஸ்தானின் நண்பராவார். இவரே

சீறாப்புராணத்தை
முதன்முதலில் (1842) அச்சில் பதிப்பித்தவராவார்.

30 யாழ்ப்பாணம் புலோலியூர் நா.கதிரைவேற்பிள்ளை (1844 – 1907)
யாழ்ப்பாண அகராதி என்னும் தமிழ்ப் பேரகாதியைத் தொகுத்து அச்சிட்ட இவர் வடமொழி, தென்மொழி பயின்றவர்.



கூர்மபுராண,
சிவபுராண விரிவுரை,
பழநித்தல விரிவுரை
முதலிய உரை நூல்களையும்,

சைவ சந்திரிகை,
சைவ சித்தாந்தச் சுருக்கம்,
சிவாலய மகோற்சவ விளக்கம்,
கருவூர் மான்மியம்,
கதிர்காமக் கலம்பகம்
முதலிய நூல்களையும் அச்சில் பதிப்பித்துள்ளார்.

31 யாழ்ப்பாணம் வடகோவை சபாபதி நாவலர் (1843 – 1903) சென்னையில் சித்தாந்த வித்தியானுபாலன் யந்திரசாலையை நிறுவிய இவர், சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தமிழாசிரியராக இருந்தவர்.


சிதம்பரநாத புராணம் (1885),
திருச்சிற்றம்பல யமக அந்தாதி,
திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி,
மாவையந்தாதி, நல்லைச்
சுப்பிரமணியக் கடவுள் பதிகம்
முதலிய நூல்களை அச்சிற் பதிப்பித்துள்ளார்.

32 யாழ்ப்பாணம் சுண்ணாகம் குமாரசுவாமிப் புலவர் (1854 – 1922) நடமாடும் புத்தக சாலையாக விளங்கிய இவர் வடமொழியும் தென்மொழியும் அறிந்த பெரும்புலவர். பல நூல்களையும் இயற்றியுள்ளார். இவர் பதிப்பித்து வெளியிட்டுள்ள,

நகுலமலைக் குறவஞ்சி நாடகம் (1895),
பழமொழி விளக்கம்,
ஆசாரக்கோவை,
மறைசையந்தாதி,
நான்மணிக்கடிகை (1900),
திருவாதவூரர் புராணம்,
முத்தக பஞ்சவிஞ்சதி (1907),
சூடாமணி நிகண்டு,
உரிச்சொல் நிகண்டு,
சதாசாரக் கவித்திரட்டு,
ஞானக்கும்மி
போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன.

33 வல்லுவெட்டித்துறை வயித்தியலிங்கம் பிள்ளை (1852 – 1901)
1875 ஆம் ஆண்டில்

சூடாமணி நிகண்டு
பதிப்பித்தவர் இவர்.

அகப்பொருள் விளக்கம்,
சிவராத்திரி புராணம்,
நாற்கவிராச நம்பியகப்பொருள் விளக்கவுரை (1878)
ஆகிய நூல்களுக்கு உரையெழுதிப் பதிப்பித்தவர்.

கந்த புராணம் (1886),
கல்வளையந்தாதி,
கந்தரலங்காரம் (1888)
போன்ற நூல்களையும் இவர் பதிப்பித்துள்ளார்.

34 அச்சுவேலி தம்பி முத்துப்பிள்ளைப் புலவர் (1857 – 1921) திருச்செல்வர் அம்மானை,
உரிச்சொல் நிகண்டு,
செகராச சேகரம்,
பரராச சேகரம்,
பால வைத்தியம்,
நயன வைத்தியம்
போன்ற பல நூல்களை பதிப்பித்தவர் இவர்.

35 திரிகோணமலை த.கனகசுந்தரம் பிள்ளை (1852 – 1901) சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதித் தொகுப்பில் சிலகாலம் இருந்த இவர்,

ஈழமண்டலத் திருப்புகழ்,
தேவாரம்,(1901)
சிவஞானமாபாடியம்,
திருமந்திரம்,
அகப்பொருள் விளக்கவுரை,
இராமாவதாரப் பாலகாண்டம்
போன்ற நூல்களைப் பதிப்பித்தவராவார்.

36 எதிர்கோட்டை அ.நாராயணையங்கார் (1861-1947) சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளாக மதுரைத் தமிழ்ச் சங்கத்துக் கல்லூரியின்பேராசிரியராகவும் செந்தமிழ் இதழின் ஆசிரியராகவும் இருந்த இவர் பதிப்புப்பணியில் குறிப்பிடத்தக்கவர்.

மாறனலங்காரத்தை
இவர் பதிப்பித்தவராவார். பல நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார்.


37 பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் (1862 – 1899) சிறந்த தமிழார்வலராகவும் கல்வெட்டு ஆராய்ச்சியாளருமாகிய இவர் பல நூல்களை இயற்றி வெளியிட்டவர். எட்டுத்தொகையுள் குறுந்தொகை, நற்றிணை மூலமும் உரையும்,அகநானூறுபோன்றவற்றை உரையுடன் பதிப்பிக்க வேண்டுமென்று பெருமுயற்சி செய்தவர். ஆயினும்

நற்றிணை
ஒன்று மட்டுமே 1899 இல் இவரால் பதிப்பிக்கப்பட்டது.

38 காஞ்சி நாகலிங்க முனிவர் (1865 – 1950) சிறந்த தமிழ்ப் புலவராகிய இவர்,

காஞ்சிப்புராணம்,
தாயுமானவர் பாடல்,
பன்னிரு திருமுறை,
தமிழகராதி
போன்றவற்றை மிகவும் செப்பமான முறையில் பதிப்பித்து வெளியிட்டவராவார்.

39 சோழவந்தான் அரசஞ் சண்முகனார் (1868 – 1915) இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கணப் புலவராக விளங்கிய இவர் நூலாசிரியராகவும் உரையாசிரியராகவும் பதிப்பாசிரியராகவும் நூல்களை வெளியிட்டவர்.

தொல்காப்பியப் பாயிர விருத்தியுரை,
இன்னிசை விருந்து,
திருக்குறள் சண்முகவிருத்தி,
மாலைமாற்றுமாலை
போன்ற நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.

40 மகாவித்துவான் இரா.இராகவையங்கார் (1870 – 1946) 1903 இல் தொடங்கப்பட்ட செந்தமிழ் மாத இதழுக்கு முதல் ஆசிரியராக விளங்கிய இவர், பழைய ஏட்டுச் சுவடிகளைத் தேடித் தொகுத்தவராவார்.


தொல்காப்பியச் செய்யுளியலுக்கு நச்சினார்க்கினியருரையை முதன்முதலில் (1917) கண்டு, அச்சிட்டு பதிப்பித்துக் கொடுத்தவர் இவரே. மேலும்
,

நேமிநாதம்,
பன்னிருபாட்டியல்,
ஐந்திணை ஐம்பது,
நான்மணிக்கடிகை,
திணைமாலை நூற்றைம்பது,
திருநூற்றந்தாதி,
முத்தொள்ளாயிரம்,
அகநானூறு மூலமும் உரையும் (1904)
போன்ற நூல்களையும் இவர் பதிப்பித்தளித்துள்ளார்.

41 திரு வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் (1870 – 1903) பரிதிமாற்கலைஞர் எனத் தம் பெயரையே மாற்றியமைத்துக் கொண்ட பெருமையுடைய தமிழறிஞர் இவர்.

திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத் தமிழ் (1896),
கலிங்கத்துப்பரணி,
இலக்கணச்சுருக்கம் (1898),
நளவெண்பா (1899),
மதுரை மாலை, பஞ்சதந்திரம்,
உத்தரகோசமங்கை
மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901),
கலைமயில் கலாபம்,
நீதிநெறிவிளக்கம்
போன்ற நூல்களை இவர் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

42 திரு மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை (1886 – 1947) பல நூல்களையும் எழுதியுள்ள இவர்,

ஔவைகுறள் மூலம் (1899),
செய்யுட்கோவை,
விவேக விளக்கம்
போன்ற நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டவர்.

43 வேதாந்தி கோ.வடிவேலு செட்டியார் (1863 – 1935) தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்தவரான இவர் பல நூல்களை எழுதி வெளியிட்டவர்.

நாநாசீவவாதக் கட்டளை,
சிவப்பிரகாசப் பெருந்திரட்டு,
குறுந்திரட்டு,
திருக்குறள் பரிமேலழகர் உரை,
வேதாந்த பரிபாஷை,
நவநீத சாரம்,
திருக்குறள் மணக்குடவர் உரையுடன்,
கைவல்ய நவநீதம்,
ஸ்ரீபகவத்கீதை,
தர்க்கபரிபாஷை,
கந்தர் அநுபூதி,
உபநிடதம்,
கந்தர் கலிவெண்பா,
மெய்ஞ்ஞானபோதம்,
வியாசபோதினி,
பரமார்த்த போத வசனம்,
தர்மவாசகம்,
விவேக சூடாமணி
போன்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

44 திருமணம் தி.செல்வக்கோசவராய முதலியார் (1864 – 1921) முதன்முதலில் எம்.ஏ வகுப்பில் தமிழ் எடுத்துப் படித்தவரும் தமிழ்ப் பேராசிரியர் பணியில் உயர்ந்த ஊதியம் பெற்றவரும் ஆகிய இவர் தமிழிலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் நன்கு பயிற்சி பெற்றவர். பல நூல்களை இயற்றி வெளியிட்டவர்.


ஆசாரக்கோவை (1893),
அறநெறிச்சாரம் (1905),
முதுமொழிக்காஞ்சி (1919),
பழமொழி நானூறு
போன்ற நூல்களையும் ஏட்டிலிருந்து பதிப்பித்து வெளியிட்டவர் இவர்.

45 யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வை.தாமோதரம் பிள்ளை (1832 – 1901) சட்டம் படித்து, சிறந்த நீதிபதியாகத் திகழ்ந்த இவர் மிகுந்த தமிழ்ப்பற்று உடையவர். பதிப்புத்துறையில் 1854 ஆம் ஆண்டில் நுழைந்தவர். ஆறுமுக நாவலர் 1849-ஆம் ஆண்டில் பதிப்புத்துறையில் ஈடுபட்டதன் பின்னர் இவரும் நாவலருடன் இணைந்து இத்துறையில் செயல்பட்டார்.


வீரசோழியம் (1881),
தொல்காப்பியச் சொல்லதிகாரம்,
தொல்காப்பியப் பொருளதிகாரம்,
இறையனார் அகப்பொருள் (1883),
இலக்கண விளக்கம்,
கலித்தொகை
என்பனவற்றின் மூலங்களைப் பல ஏட்டுச்சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன்முதல் அச்சிற் பதிப்பித்து வெளியிட்டவர் இவரே.


நீதிநெறிவிளக்கம் (1854),
தொல்காப்பியச் சொல்லதிகாரம் – சேனாவரையர் உரையுடன் (1868),
தணிகைப்புராணம் (1883),
இறையனார் அகப்பொருள்,
தொல்காப்பியப் பொருளதிகாரம் – நச்சினார்க்கினியர், பேராசியர் உரையுடன் (1885),
கலித்தொகை (1887),
இலக்கண விளக்கம் (1889),
சூளாமணி (1889),
தொல்காப்பியம் – சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரையுடன் (1882)
இவர் பதிப்பித்துள்ளார்.

46 வடக்குப்பட்டு த.சுப்பிரமணியப்பிள்ளை (1846 – 1909) ‘திருப்புகழ்ப் பதிப்பாசிரியர்’ என்று அன்புடன் அழைக்கப்பெறும் இவர், மாவட்ட முன்சீப்பாகப் பணியாற்றியவர். 1871-ஆம் ஆண்டு முதல் திருப்புகழ் ஓலைச்சுவடிகளைத் திரட்டி, முதன்முதலாக அச்சில் பதிப்பிக்க முற்பட்டவர் இவரே.

திருப்புகழ் முதல் பாகம் (1891),
திருத்தணிகைத் திருப்புகழ் (1908),
நாமக்கல் செழுநீர் விநாயகர் நவரத்நமாலை (1898),
திருவுத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901),
நீடூர்த்தலபுராணம்
போன்ற பதிப்புகளையும் இவர் செய்தளித்தவராவார்.


47 காவேரிப்பாக்கம் ரா.நமச்சிவாய முதலியார் (1876 – 1931) சிறுவர் சிறுமியர்களுக்கு விளங்கும் வகையில் எளிய இனிய நடையில் பாடநூல்களை முதன்முதலில் பதிப்பித்து அளித்தவர் இவரே. இவர் எழுதிப் பதிப்பித்த தமிழ்க்கடல் வாசகம் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.


தொல்காப்பியம் பொருளதிகரம் – அகத்திணையியல், புறத்திணையியல் – இளம்பூரணர் உரையுடன் (1922),
தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் மூலம் (1922),
தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலம் (1924),
தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – இளம்பூரணர் உரையுடன் (1927) ஆகிய நூல்களை மிக நன்முறையில் பதிப்பித்து வெளியிட்டவர் இவர்.




தமிழ்க்கடல் அச்சகம் ஒன்றையும் இவர் சொந்தமாக நிறுவி நூல்களைப் பதிப்பித்து வந்தார்.

வாக்குண்டாம்,
நல்வழி,
நன்னெறி,
நீதிசாரம்,
ஆத்திசூடி,
கொன்றைவேந்தன்,
நீதிவெண்பா (1931),
இறையனார் களவியல் (1932),
தஞ்சைவாணன் கோவை (1943),
தணிகைப்புராணம்,
அறப்பளீசுரசதகம்,
வெற்றிவேற்கை,
உலகநீதி,
திருவாசகம்,
திருக்கோவையார்,
பத்துப்பாட்டு மூலம்,
குறுந்தொகை,
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்,
பட்டினத்துப்பிள்ளையார்
போன்ற நூல்களையும் இவர் பதிப்பித்துள்ளார்.

48 திரு வ.உ.சிதம்பரம் பிள்ளை (1872 – 1936) வழக்கறிஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், கட்டுரையாசிரியராகவும், நூலாசிரியராகவும், இதழாசிரியராகவும் திகழ்ந்த இவர்,

திருக்குறள் மணக்குடவர் உரை (1917),
தொல்காப்பியப் பொருளதிகாரம் – இளம்பூரணர் உரை (1928)
இன்னிலை
ஆகிய நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டவர்.

49 கயப்பாக்கம் ர.சதாசிவ செட்டியார் (1872 – 1929) அகத்தியர் தேவாரத் திரட்டு, சேக்கிழார் பிள்ளைத்தமிழ், திருக்கைலாய ஞானவுலா போன்ற நூல்களுக்குக் குறிப்புரையும் விரிவுரையும் எழுதி வெளியிட்ட இவர், மூவர்

தேவாரங்களைச்
சிறந்த முறையில் செப்பம் செய்து பதிப்பிக்கச் செய்தவராவார்.

50 காஞ்சிபுரம் ர.கோவிந்தராச முதலியார் (1874 – 1949) சிறந்த ஆசிரியராகத் திகழ்ந்த இவர் பல நூல்களை எழுதி வெளியிட்டவர். இவர்,

நன்னூல் இராமாநுஜ விருத்தியுரை,
யாப்பருங்கலக் காரிகை,
இறையனாரகப்பொருளுரை,
நேமிநாதம்,
தொல்காப்பிய முதல் சூத்திரவிருத்தி,
தொல்காப்பிய எழுத்ததிகாரம் – இளம்பூரணர் உரை
முதலிய இலக்கண நூல்களுக்குக் குறிப்புரை இயற்றிப் பதிப்பித்துள்ளார்.



இனியவை நாற்பது,
இன்னாநாற்பது,
கார்நாற்பது,
திரிகடுகம்,
ஏலாதி,
நான்மணிக்கடிகை,
பன்னிருபாட்டியல்,
அரங்கசாமிப் பாட்டியல்,
அரிசமயதீபம்,
நளவெண்பா
முதலிய நூல்களுக்கும் இவர் உரை எழுதி பதிப்பித்தவராவார்.

51 ஈக்காடு இரத்தினவேலு முதலியார் இந்நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இவர்,

திருவிளையாடல் புராணம்,
காசிகாண்டம்,
பார்க்கவ புராணம்
போன்ற நூல்களைப் பதிப்பித்தவராவார்.

52 பூவை கல்யாணசுந்தர முதலியார் (1854 – 1918) தமிழையும் சைவத்தையும் வளர்த்த பேரறிஞர் இவர். பல நூல்களை இயற்றி வெளியிட்டவர்.

திருவருட்பா,
திருவேற்காட்டுப் புராணம்,
சிவப்பிரகாசம் சித்தாந்த கட்டளை
முதலிய நூல்களையும் பதிப்பித்துள்ளார்.

53 மகாவித்துவான் மு.இராகவையங்கார் (1878 – 1960) மதுரைச் செந்தமிழ் இதழாசிரியராக இருந்த இவர் தனிப்பாடல்களையும் மேற்கோள் பாடல்களையும் தொகுத்துப் பெருந்தொகை எனும் நூலாகப் பதிப்பித்துள்ளார். இவ்வாறே

நரிவிருத்தம்,
சந்திரலோகம்,
திருக்கலம்பகம்,
சிதம்பர பாட்டியல்
விக்கிரமசோழனுலா
முதலியவற்றையும் இவர் பதிப்பித்துள்ளார்.

54 திட்டாணிவட்டம் வே.இராஜகோபாலையங்கார்
சிறந்த தமிழாசிரியராகவும், பாடநூலாசிரியராகவும், இதழாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் திகழ்ந்த இவர்

அகநானூறு (1923),
நாலடியார் – பதுமனார் உரை,
நான்மணிக்கடிகை – பழைய உரை
ஆகிய நூல்களைப் பதிப்பித்தவராவார்.

55 இ.வை.அனந்தராமையர் (1872 – 1931) கலித்தொகை மூலமும் உரையும் (1924),
ஐந்திணையெழுபது,
கைந்நிலை,
களவழி நாற்பது,
ஏம்பல் முத்தையாசாமிப் பிள்ளைத்தமிழ்
முதலான நூல்களை நன்முறையில் பதிப்பித்து வெளிவரச் செய்தவர் இவர்.

56 சே.கிருஷ்ணமாச்சாரியர் வை.மு.சடகோபராமாநுஜாச்சாரியாருடன் சேர்ந்து

கம்பராமாயணம்,
நாலடியார்,
திருக்குறள்,
அட்டபிரபந்தம்,
வில்லிபாரதம்
போன்ற பல நூல்களுக்கும் இவர் உரை எழுதிப் பதிப்பித்துள்ளார்.

57 அ.சக்கரவர்த்தி நயினார் (1880 – 1960) சிறந்த தத்துவப் பேராசிரியராகத் திகழ்ந்த இவர், மேருமந்திரபுராண உரை, நீலகேசி சமய திவாகர விருத்தியுரை, திருக்குறள்

கவிராய பண்டிதர் உரை ஆகியவற்றைப் பதிப்பித்தவராவார்.

58 திருவாரூர் வி.கல்யாணசுந்தரனார் (1883 – 1953) சிறந்த தமிழறிஞரான இவர் பதிப்புத்துறையிலும் குறிப்பிடத்தக்கவர். 1908 இல் உமாபதி குருப்பிரகாசம் அச்சகமும், 1920 இல் சாது அச்சகமும் நிறுவி நூல்களை அச்சிட்டு வழங்கியவர்.



பெரியபுராணத்துக்குக் குறிப்புரையும் வசனமும் எழுதிப்
(1907 – 1910) பதிப்பித்தார்.

திருமந்திரம் பட்டினத்துப் பிள்ளையார் பாடற்றிரட்டுக்குப்
பொழிப்புரையும் விருத்தியும் எழுதிப் பதிப்பித்தார். 1934 இல் புதிதாக ஒரு

பெரியபுராணப் பதிப்பையும்
வெளியிட்டார்.


59 நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் (1884 – 1944) இன்னா நாற்பது,
களவழிநாற்பது,
கார்நாற்பது,
ஆத்திச்சூடி,
கொன்றைவேந்தன்,
வெற்றிவேற்கை,
மூதுரை,
நல்வழி,
நன்னெறி,
அகத்தியர் தேவாரத் திரட்டு,
திருவிளையாடற்புராணம்
போன்ற நூல்களுக்கு இவர் உரை எழுதிப் பதிப்பித்துள்ளார்.


60 திருநெல்வேலி கா.சுப்பிரமணியபிள்ளை (1888 – 1945)
தொல்காப்பிய எழுத்ததிகாரம் – நச்சினார்க்கினியர் உரையுடன்,
ஆராய்ச்சி முறையில் பகுத்து, தமிழிலும் ஆங்கிலத்திலும் முகவுரை எழுதிப் பதிப்பித்தவர் இவர்.
61 டி.கே.சிதம்பரநாத முதலியார் (1882 – 1954) கம்பராமாயணத்தில் சில பாடல்களைப் புதுமையான முறையில் பதிப்பித்தவர் இவர்.

முத்தொள்ளாயிரத்தையும்
இவர் தெளிவான விளக்கத்துடன் பதிப்பித்துள்ளார்.

62 இராவ்பகதூர் ச.பவானந்தம் பிள்ளை இவர் 1916இல்

தொல்காப்பியம்பொருளதிகாரம்
நச்சினார்க்கினியம்
பதிப்பித்துள்ளார்.

அகத்திணையியல்,புறத்திணையியல்
இவை ஒரு நூலாகவும்,

களவு, கற்பு, பொருள் இயல்கள்
தனி ஒரு நூலாகவும் பதிப்பித்துள்ளார்.

தொல். பொருள். பேராசிரியமும் (1917)
இவர் பதிப்பித்துள்ளார்.

63 கரந்தைக் கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை இவர்,

தொல்காப்பியம்சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை (1929)
பதிப்பித்துள்ளார்.

64 புன்னைலைக்கட்டுவன் சி.கணேசையர் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் (1937),
தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் (1938),
தொல்காப்பியம்பொருளதிகாரம் பேராசிரியம் (1943),
தொல்காப்பியம்பொருளதிகாரம் நச்சினார்க்கினியார். (1948)
போன்ற பல நூல்களைப் பதிப்பித்தவராவார்.

65 ஔவை சு.துரைசாமி பிள்ளை புறநானூறு – மூலமும் உரையும் (1947 – 1951)
ஐங்குறுநூறு (1957 – 58),
பதிற்றுப்பத்து மூலமும் உரையும் (1950),
நற்றிணை மூலமும் உரையும் (1966)
போன்ற பல பதிப்புகளைக் கண்ட உரைவேந்தர் இவர்.

66 திருக்கண்ணபுரம் திருமாளிகைச் சௌரிப்பெருமாளரங்கனார் குறுந்தொகையை
முதன்முதலில் பதிப்பித்தவர் (1915) இவரேயாவார்.

67 ச.சோமசுந்தர தேசிகர் சோழமண்டல சதகம்,
மயிலை யமக அந்தாதி,
இலக்கண விளக்கம் – பொருளதிகாரம்
போன்ற நூல்களைப் பதிப்பித்தவர் இவர்.

68 மாங்காடு வடிவேலு முதலியார் சென்னை கிறித்தவக் கல்லூரித் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர்,

திருப்புகழ்,
ஔவைகுறள்,
நெஞ்சறி விளக்கம்,
மஸ்தான் சாகிபு பாடல்,
சாதக அலங்காரம்,
பட்டினத்தார் பாடல்,
பலதிரட்டுச் சாலம்,
திருவருட்பா,
வாதக் கோவை,
சிவவாக்கியர் பாடல்,
அகத்தியர் பரிபூரணம்
போன்ற நூல்களுக்கு உரை எழுதிப் பதிப்பித்துள்ளார்.

69 மகாவித்துவான் மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை (1896 – 1985) அண்மைக்காலத்தில் தம் சுய உழைப்பால் இரவு நேரப் பள்ளியில் படித்துயர்ந்து, ஆசிரியராகியவர் இவர். இவர் பரிசீலனை செய்து திருத்திப் பதிப்பித்த நூல்கள் பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :

இறையனார் அகப்பொருள் – களவியல்,
தொல்காப்பியம் –சொல்லதிகாரம் – நச்சினார்க்கினியர் உரை (1942),
வீரசோழியம், தஞ்சைவாணன் விளக்கக்கோவை – குறிப்புரை,
அட்டப்பிரபந்தம் –விளக்கக் குறிப்புரை,
சித்தர்ஞானக்கோவை,
யாப்பிலக்கணம்,
யாப்பருங்கல விருத்தியுரை,
யசோதர காவியம்
போன்ற நூல்களாகும்.

அண்மைக்காலத்தில் நூல்களைப் பிழையின்றிப் பதிப்பிப்பதில் மிகுந்த பெயர் பெற்றவர் இவர். தமிழ்ப் பதிப்பால் சிறப்பிடம் பெற்றோருள் குறிப்பிடத்தக்கவர்.


தமிழ் நூல்கள் சிறியவையாயினும் பெரியவையாயினும் பிழையின்றித் திருத்தமான முறையில் கண்கவர் வனப்புடன் வெளிவருதல் வேண்டும் என்பதையே தம் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு நூற்பதிப்புத் துறையில் பெரும் வெற்றி பெற்றவர் இவர்.



பள்ளிக்கூடப் பாடப்புத்தகம் முதல், அனைத்து நூல்களையும் பதிப்பிக்கும்பொழுது ஏற்படும் திருத்தம் முதலிய செய்யும் விதிமுறைகளைப்பலரும் அறிய வழிகாட்டியானவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

69 பேரா.மு.சண்முகம் பிள்ளை அண்மையில் வாழ்ந்திருந்து மறைந்த தமிழ்நூல் பதிப்பாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் இவர். சுமார் 125 நூற்பதிப்புகளையும், 10 ஆராய்ச்சி நூல்களையும், தமிழ் – தமிழ் அகரமுதலி, தமிழ்நூல் விவர அட்டவணை ஆகிய தொகுப்பு நூல்களையும், 185 ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கிய இவரைப் ‘பதிப்புச்செம்மல்’ என்றும் ‘பதிப்பு அரசர்’ என்றும் அறிஞருலகம் போற்றி வருகின்றது.


இவருடைய சுவடிப் பதிப்புகள் மட்டுமே 26 நூல்களாகும். இவை பெரும்பாலும் சுவடிகளிலிருந்து முதன்முறையாகப் பதிப்பிக்கப்

பெற்றவையாகும்.



அப்பாண்டை நாதர் உலா,
திருமேற்றிசை அந்தாதி,
நாககுமார காவியம், ஈனமுத்துப் பாண்டியன் கதை (1974),
அடிமதிக்குடி அய்யனார் பிள்ளைத் தமிழ் (1975),
மெய்ம்மொழிசரிதை (1977),
மேருமந்திரமாலை (1978),
கம்பராமாயண கொஸ்தூபம் (1979),
பாரதிதீபம் (1990),
திருவேங்கடநாதன் வண்டுவிடுதூது (1981),
கலியாண வாழ்த்து,
ஊஞ்சல்,
அல்லியரசாணிமாலை,
தருமதேவி பேரில் சோபனமாலை,
தஞ்சாவூர் வாழ்த்துகை (1981),
இராசராச சேதுபதி ஒருதுறைக்கோவை (1984),
ஆத்திசூடி உரை (1985), செழியதரையன் பிரபந்தங்கள்,
அந்தாலந் தீர்த்த செழியன் மஞ்சரி,
தாகந்தீர்த்த செழியன் கோவை,
திருவேங்கடசெழியன் நன்னெறி,
கங்காதரச்செழியன் பேரில்
திருவாணிவாது,
செழியதரையன் வண்ணம் (1986),
சீவேந்தர் சரிதம் (1985),
குறுந்தொகை (1985)
ஆகிய சுவடிப்பதிப்புகள் இவருடைய பதிப்புப்பணி மேன்மையைக் காட்டுவனவாம். சுவடிப் பயிற்சியிலும் பதிப்புப் பணியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவருடைய உழைப்பைப் பல பல்கலைக்கழகங்களும் பதிப்பு நிறுவனங்களும் ஏற்றுப் போற்றி வந்தன. பதிப்புலகில் பேரா.வையாபுரிப்பிள்ளை முதலாக மகாவித்துவான் மே.வீ.வேணுகோபால் பிள்ளை வரையிலுள்ள பல தமிழ் நூல் பதிப்பாசிரியர்களுடன் பழகிய வகையில் இவருடைய பதிப்புப் பணிகள் பதிப்பு வரலாற்றில் குறிக்கத்தக்கனவாம். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடிப்புலத் தலைவராகவும் ஓலைச்சுவடித் துறைத் தலைவராகவும் இருந்து நல்ல பல சுவடிப் பதிப்புகள் வெளிவரவும் துணைநின்ற பெரும் பேராசிரியர் இவராவார்.

எழுதியவர் : (18-Feb-18, 3:31 pm)
பார்வை : 501

சிறந்த கட்டுரைகள்

மேலே