மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 19

மூர்ச்சையற்ற பொழுதுகள் - ௧௯

அவள் காலையில் வருவதாய் சொல்லி சென்ற வார்த்தைகள்,அவன் இரவின் நித்திரைகளை களைப்படைய செய்திருந்தது..அந்த ஒரு இரவுக்குள் ஆயிரம் இரவுகள் அடைக்கலம் ஆனது போலவும்,அனுமனின் வால் போல நீண்டுகொண்டேவும் சென்றது..
அவளின் முதல் அழைப்பில் முதல் காதலை வெளிப்படுத்த தவியாய் தவித்து இரவெல்லாம் புரண்டு புரண்டு படுத்து நேரத்தை கடத்தினான்..
பொழுது மெதுவாய் புலர்ந்து சேவலை உசுப்பி சப்தமிட வைத்திருந்தது..
அவளுக்கு முன் அவளுக்காக மட்டுமே காத்திருந்தான்..
பேருந்தும் தன் கடமையை இன்று மட்டுமே ஏனோ முன்னதாகவே வந்து செவ்வனே கடமையாற்றி இருந்தது.
அவள் பொய் சொல்ல மாட்டாள் என்ற நம்பிக்கை மட்டுமே இன்னும் அவனை பதற்றம் தீண்டி விடாமல் தடுத்திருந்தது.
எதற்க்கும் அடுத்த பேருந்தில் ஏறலாமா,ஒருவேளை அவள் தாமதமாய் வந்தால் என்ன செய்வது..
மனசு பேருந்தில் ஏற தடுமாறியது.ஆனால் அவள் தோழி பர்ஹானா பஸ்ஸில் ஏறி விட்டதால் கார்த்திக் கால்களும் மனசு சொல்லும் காரணங்களை தவிர்த்து விட்டு தானாகவே பேருந்தில் ஏறி கொண்டது...
படியில் நின்று வெளியே பார்த்தான். அவள் வருவதாய் தெரியவில்லை,சரியென்று உள்ளே சென்று பார்த்தான் ...அவள் வந்து இருந்தாள் என்பதை அவளின் உருவம் காட்டி கொடுத்தது..
அவள் தனியாய் பேருந்தின் மத்தியில் நின்றாள்.அருகில் இரட்டை இருக்கையில் ஒன்று காலியாய் இருந்ததால் அதை பிறர்க்கு முன் பாய்ந்து சென்று அபகரித்து கொண்டான் கார்த்திக் ..
இப்போது அவள் கார்த்திக்கின் இருக்கையின் நூலிடை இடைவெளியில் வந்து நின்றாள்..
அன்னார்ந்து பார்த்தான்.. பச்சை கலர் பாசி மாலை அவள் கழுத்தை அழகாய் கோர்த்து இருந்தது ..
முகத்தின் முழுவதும் லேசான பவுடர் சுவடுகளின் சுவடுகள் தெரிந்தது .,கூந்தலில் சிகப்பு ரோஜா இரண்டு,ஆளுக்கொரு ஜடையில் நின்று கார்த்திக்கை பார்த்து கண் சிமிட்டியது..
அவளுக்கும் அவனுக்குமான இடைவெளியை ஜாதி முல்லை பூக்களை கொண்டு இந்த சமூகமும் நெய்து இருந்தது..

கார்த்திக் அவளை பார்பதற்காகதான் வந்தான் என்பதை அவளும் உணர்ந்திருந்தாள்.ஏனெனில் அவனுக்கு அன்று பள்ளிக்கூடம் விடுமுறை என்று அவளுக்கும் தெரியும்...
பேருந்து நகர நகர ஒவ்வொரு நிறுத்தத்தில் ஆட்கள் ஏற கூட்டம் அதிகமானது..மாலதியின் அருகில் நின்ற வயதான பாட்டியை பார்த்ததும் தானாக எழுந்து ,அந்த பாட்டியை உட்கார சொன்னான்..பேருந்தின் நடுவில் நிற்க,இன்னும் சிலர் அவனருகில் அங்குமிங்கும் முண்டி கொண்டு நின்றனர்..
தீடிரென கூட்டத்தில் நின்ற ஒரு பெண் கார்த்திக் அருகில் நின்ற ஒருவரை செருப்பால் பளார் என்று ஒரு அறை விட்டது..கார்த்திக்கு வியர்த்து கொட்டியது ..
என்னடா பொம்பளைங்க பஸ்ஸில வந்துற கூடாதே உடனே இடுப்பை கிள்ள, கையை உரசனு வந்துருவிங்க ..உடனே போலீஸ் ஸ்டேஷன் ல நிறுத்துங்க .இவங்களைலாம் உள்ள உட்டு ஜட்டியோட லாடம் கட்டுனாத்தான் சரிப்பட்டு வருவாங்க என்று சொல்லி கொண்டேனா இன்னும் கன்னத்தில் படார் படார் என்று அடித்தது..பக்கத்துல நின்ற கார்த்திகை பார்த்து,நீயும் இவன் கூடத்தான் வந்த என்று சொல்லியவாறு அவனையும் கன்னத்தில் பளார் என்று ஒரு அடி விட்டாள் அந்த பெண்....

கார்த்திக்குக்கு ஒரு நொடியில் பொறி கலங்கியது ..அவனால் எதுவும் பேச முடியவில்லை கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது..அவன் நிமிர்ந்து பார்த்தான்..அவன் கண்கள் முழுவதும் அவமானமாய் நிறைந்து கண்ணீரோடு சேர்ந்து வழிந்தது..
மாலதியும் பர்ஹானாவும் கூட்டத்தை விலக்கி கொண்டு அந்த இடத்துக்கு வந்தனர்..
ஏன்மா உனக்கு யாரு உன்னை இடுச்சா வச்சான்னு கண்ணு தெரியாதா ..பள்ளிக்கூடம் படிக்கிற பையனை போய் அடிச்சு இருக்கியேம்மா ..அவன் எனக்கு தெரிஞ்ச பையன் ..வேற யாரோ பண்ணுனதுக்கு அவன் பக்கத்துல நின்னதால என்ன பண்ணுவான் என பர்ஹானா அந்த பெண்ணை சப்தம் போட்டு அங்கிருந்து நகர சொன்னாள்....
கார்த்திக்குக்கு அவர்கள் இருவரையும் நிமிர்ந்து பார்க்கவே ரொம்ப அவமானமாய் இருந்தது..அதுவும் தான் விரும்பும் பெண் அருகில் இருக்கும் போது,இன்னொரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டான் என பழி விழுவதும்,அடி வாங்கியதும் அவனை அவர்களின் முகம் பார்க்க விடாமல் தடுத்தது...
கண்ணீரை துடைக்க துடைக்க பீறிட்டு வெளியேறி கொண்டிருந்தது..
அப்படியே அருகில் இருந்த சீட்டில் தலை புதைத்து உட்கார்ந்து விட்டான்...

கடையநல்லூர் பேருந்து நிறுத்தம் வந்தது எல்லோரும் இறங்கி கொண்டிருந்தனர். மெதுவாய் தலை தூக்கி பார்த்தான்..மாலதி அழுது கொண்டிருந்தாள்..
அவளை மெதுவாக தோளோடு பிடித்து பர்ஹானா இறக்கி கொண்டிருந்தாள்..
அவளிடம் சென்று நான் எப்படி சொல்ல என தெரியாமல் கார்த்திக் மட்டும் தனியாய் நின்றான்.அவனையே எல்லோரும் பார்ப்பது போல இருந்தது ,அவர்களின் பார்வை எதோ அருவருப்பை பார்ப்பது போல் தெரிந்தது..
அவர்கள் திரும்பும் வரை இன்றைய பொழுது முழுவதும் எப்படி கழிப்பேனோ..இல்லை உடனே ஊருக்கு போய் விடுவோம்.இங்கு நின்றால் இதே மாதிரி விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கலாம் என அவனின் மனசு சொல்லியது....

அவளுக்காகத்தானே வந்தோம்,அதுவும் அவள் என்னை பற்றி என்ன நினைச்சு இருப்பாள் .இப்போ அவள் திரும்பி வரும் போது நான் இல்லை என்றால் அவளை உதாசீனம் படுத்தியது போல ஆகிடுமே என மனதை மாற்றி கொண்டு வலியோடு,அடுத்த ஸ்டாப்பில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து சென்றான் கார்த்திக் ...
அவள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்..சொல்ல மறந்த காதலை சொல்லாமல் விட்ட குற்ற உணர்வும் குற்றுயிராய் குமுறி கொண்டிருந்தது..
நேரம் போக போக பசியும் அது பங்கிற்க்கு யுத்தம் செய்ய ஆரம்பித்தது..
சாப்பிட போன தருணத்தில் அவள் போய் விட்டால் என்ன செய்வது..
அதே இடத்தில் ஆறு மணி நேரமாய் காத்திருப்பது சுற்றிலும் இருப்பவர்களுக்கு தவறாய் பட வாய்ப்பிருப்பதால்,ஒரு மணிக்கு ஒருமுறை மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை நோக்கி விரைந்தான்...
ஒவ்வொரு பேருந்தும் வரும் போது ஆவலாய் ஏறி பார்த்து ஏமாற்றத்தில் கீழே இறங்கி ஓய்ந்திருந்தான்.நேரம் அதிகமாய் அவனை சோதித்து இருந்தது,.
திடீரென 12D பேருந்து உள்ளே வந்தது.வெள்ளை கலர் ரிப்பன் முதலில் கார்த்திக்கின் கண்களில் பட்டது.. பேருந்தின் முகப்பில் ஸ்கூல் யுனிபோர்ம் உடன் அமர்ந்து இருந்ததை பார்த்து துள்ளி குதித்து பேருந்தில் ஏறினான்..
அவளை பார்த்த கணப்பொழுதில் காதல் உணர்வுகள் கொப்பளிக்க அருகில் போனதும் திடுக்கிட்டான் ....
அவள் அருகில் நின்ற மற்றொருவரை பார்த்து...

அவனை இதற்கு முன்பு ஓரிரு முறை தான் செல்லும் பேருந்தில் பார்த்து இருக்கிறான்..ஆனால் அவளின் அருகில் வைத்து பார்ப்பது இதுவே முதல் தடவை ...
அவளுக்கு முன்பாய் அவனும், கார்த்திக் முன்பாய் அவளும்,இருவருக்கும் பின்பாய் பரிஹானாவும் பேருந்தில் நின்றார்கள் ...
கார்த்திக்குக்கு என்ன பேச என்று தெரியவில்லை ..காலையில் நடந்த சம்பவம் அவனை இன்னும் டிஸ்டர்ப் செய்தது..காதல் சொல்ல வந்த நாளில் இப்படி நடக்கும் என யாருதான் எதிர்பார்த்து இருப்பார்கள் ...
முன்னால் நின்ற அவன் தீடிரென திரும்பினான் ...

ஹாய் மாலதி நான் உங்களை ஒரு வருசமா பாலோ பண்ணுறேன் ..உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு ..ஐ மீன் நான் உங்களை லவ் பண்ணுறேன் ..உங்க பதிலை
"டபுளா இல்லை ட்ரிபுளானு சொல்லுங்க " என்று அவன் மாலதியிடம் ப்ரொபோஸ் பண்ணி கொண்டிருந்தான் கார்த்திக் எதிரிலேயே..
Double என்றால் NO,
Triple என்றால் YES என்றான் அவன் ....

மாலதி அவனை பார்த்து விட்டு மெதுவாக கார்த்திக்கை நோக்கி திரும்பினாள் ....
அவனும் அவர்கள் இருவரையும் நோக்கி திரும்பி பார்த்தான்...

எல்லோருக்கும் குப்பென வேர்த்து கொட்டியது .....
இதயத்துக்குள் லப் டப் ஓசை தப்.. தப்பு ..என ஒலிக்க ஆரமித்தது ....

தொடரும் ... ....

எழுதியவர் : சையது சேக் (22-Feb-18, 5:46 pm)
பார்வை : 150

மேலே