விண்டர் ஒலிம்பிக்கில் ரொபாட்டுகள்
23-2-2018 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு கடைசிக்) கட்டுரை
2018 விண்டர் ஒலிம்பிக்கில் ரொபாட்டுகள்!
Robots in 2018 Winter Olympics
ச.நாகராஜன்
“மற்ற எல்லா போட்டிகளும் தனிப்பட்ட நபர்களின் சாதனை. ஆனால் ஒலிம்பிக் விளையாட்டுக்களோவெனில் அனைவருக்கும் உரியவை”. – ஸ்காட் ஹாமில்டன்
2018 விண்டர் ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவில் பிப்ரவரி 8ஆம் தேதி ஆரம்பித்து 25ஆம் தேதி முடிவடைகிறது. இந்தப் போட்டிகள் தென் கொரியாவின் தலைநகரான சியோலுக்குக் கிழக்கே 80 மைல் தொலைவில் உள்ள பியாங்சாங் என்னும் இடத்தில் நடைபெறுகிறது. 35000 பேர்கள் வசதியாகப் பார்க்கக் கூடிய ஸ்டேடியம் இங்கு உள்ளது. அத்துடன் எந்தப் போட்டி நடக்கும் இடமும் 30 நிமிடத்தில் டிரைவ் செய்து போகும் அளவுள்ள தூரத்திலேயே உள்ளது. 3894 விளையாட்டு வீரர்கள் தங்கும் வீடுகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 2900 பேர் தங்க வசதியாக அருகிலேயே இன்னொரு தங்குமிடமும் உருவாக்கப்பட்டுள்ளது. 1924ஆம் ஆண்டு பிரான்ஸில் தான் முதல் விண்டர் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பல்வேறு நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டி வருகின்றன.இந்த இடைவிடா போட்டியில் இப்போது விண்டர் ஒலிம்பிக் நடத்துவதில் வெற்றி பெற்றுள்ளது!
தென்கொரியாவில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் 1988இல் நடந்தது. இப்போது இரண்டாவது முறையாக ஒலிம்பிக் இங்கு நடைபெறுகிறது! 15 வகை விளையாட்டுகளில் 102 நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தப் போட்டிகளுக்காக 259 செட் மெடல்கள் விசேஷமாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்த மெடல்கள் தாம் கனமானவை. தங்க மெடல் 1.29 பவுண்ட்; வெள்ளி மெடல் 1.28 பவுண்ட்; வெங்கல மெடல் 1.09 பவுண்ட்.
மெடலின் முன் பக்கம் ஒலிம்பிக்கின் வளையங்கள் கொண்ட சின்னம் இருக்கும். பின் பக்கம் குறிப்பிட்ட விளையாட்டு, ஒவ்வொரு நிகழ்வின் பெயர் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும்!
சென்ற பத்தாண்டுகளில் நடந்த ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிக்கும் ஆகும் செலவு 890 கோடி டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. அதிகமாக ஆன செலவு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தான்! 1500 கோடி டாலர்கள் செலவாயிற்று! தென்கொரியாவில் நடக்கும் இப்போதைய ஒலிம்க் போட்டிகளுக்கு ஆகும் உத்தேச செலவு 1000 கோடி டாலர்கள்!
ஆனால் வருமானமும் உண்டு. நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உரிமைகள் உள்ளிட்டவை வருமானத்திற்கான வழிகள்!
தென்கொரியாவில் நடைபெறும் விண்டர் ஒலிம்பிக்கின் முக்கிய கதாநாயகன் ரொபாட் தான்!
ஏற்கனவே தென்கொரியாவில் விமானநிலையத்தைச் சுத்தம் செய்யும் பணியை ரொபாட்டுகள் தான் மேற்கொண்டுள்ளன! பல இடங்களில் அவைகளே ஆங்கிலத்தைப் பயிற்றுவிக்கின்றன. 2016இல் தென் கொரியாவில் இருந்த ரொபாட்டுகளின் எண்ணிக்கை 41000! இப்போதோ இன்னும் அதிகம்!
ஒலிம்பிக் விளையாட்டில் 85 ரொபாட்டுகள் தம் திறமைகளைக் காண்பிக்கும். ஒலிம்பிக் தொப்பிகளை அணிந்து 47 அங்குல ரொபாட்டான ஹ்யூபோ டிசம்பரில் ஒரு காரை ஓட்டிச் சென்று காண்பித்தது. ஒலிம்பிக் டார்ச்சைக் கொண்டு சென்று ஒரு சுவரை ஒரு குத்து குத்தித் தனது வலிமையை அது காண்பித்தது! இதை உருவாக்கியவர் பேராசிரியர் ஓ ஜுன் ஹோ. அவரிடம் இந்த டார்ச்சை ரொபாட் கொடுத்தது. இது இரும்பு மனிதன் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட அழிக்க முடியாத ரொபாட் என்பது குறிப்பிடத்தகுந்தது!
ஸ்கீயிங் போட்டியில் ரொபாட்டுகளும் கலந்து கொள்ளும் என்பது சுவையான் ஒரு செய்தி.
ரொபாட்டுகள் கொரிய மொழியில் பேசுவதோடு மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபடும் திறன் உடையவை. கொரிய மொழி, சீனம், ஆங்கிலம், ஜப்பானிய மொழி ஆகியவற்றில் இவை மொழிபெயர்ப்பு செய்யக் கூடியவை!
சூஹோரங் என்ற வெள்ளைப்புலியையே தென்கொரியா இந்த ஒலிம்பிக்கில் தனது அடையாளச் சின்னமாக அமைத்துள்ளது. சூஹோ என்றால் காப்பாற்றுதல் என்று பொருள்.ரங் என்றால் வெள்ளைப்புலி.
வெள்ளைப்புலி தான் தென்கொரியர்களுக்குப் பிடித்தமான பாதுகாக்கும் மிருகம்!. ரொபாட்டுகள் வெள்ளைப்புலி முகவணியைக் கொண்டு ஆடும், பேசும்.
சுத்தப்படுத்துதல் என்பது ரொபாட்டுகளுக்குக் கைவந்த கலை. பிரஷை கையில் எடுத்துக் கொண்டால் எந்த இடமும் சுத்தம் தான்! ஒரு மணி நேரத்தில் 900 சதுரமீட்டர் பரப்பைச் சுத்தம் செய்ய வல்லவை இவை! குப்பைகளை எடுக்கும்; குப்பைத் தொட்டியில் போடும் – யார் மீதும் மோதாமல்!
பெயிண்டிங் ரொபாட்டுகள் கலைவண்ணம் காணும் ரொபாட்டுகள். தேவையான டிசைனைச் சொன்னால் வரைந்து விடும். ஆயிரம் வண்ணங்களின் கலவை இவற்றிற்குத் தெரியும் என்பதோடு இவை 20 மீட்டர் உயரம் அளவு பணி செய்யும் திறமை படைத்தவை.6 of
இத்துடன் ரோபோ பிஷ் என்று ஒரு வகை ரொபாட்டுகள் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் நீருக்கு அடியில் நீந்தும். ஐந்து மீட்டர் ஆழம் வரை டைவ் அடிக்கும் இவை ஒரு அக்வேரியத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்போது வீரர்கள் கவலைப்படுவது மனிதனுக்கு மனிதன் போட்டி போடும் நிலையிலிருந்து மனிதன் – ரொபாட் என்ற ரீதியில் போட்டி போட வேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்பட்டு விடுமோ என்பது தான்!
அப்படிப்பட்ட ஒரு காலத்தில் வின்னர் யார்? நீங்களே எளிதில் ஊகிக்கலாம்.
வந்து விட்டது ரொபாட்டுகளின் காலம்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
ஸ்டீபன் மக்னிக்கும் (Stephen Macknik) சூஸனா மார்டினெஸ் காண்ட் (Susana Martinez – Conde) ஆகிய இருவரும் நியூரோ ஸயின்ஸில் பெரிய விஞ்ஞானிகள். 1997ஆம் ஆண்டு ஹார்வர்ட் மெடிகல் ஸ்கூலில் இருவரும் சந்தித்தனர். விஷுவல் கார்டெக்ஸ் (Visual Cortex) எனப்படும் கட்புலப் புறணியின் (perception) அகப்பார்வை பற்றி இருவரும் ஆராய்ந்து வந்தனர்.இருவரின் ஆராய்ச்சியும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இருவரையும் லண்டனில் உள்ள யுனிவர்ஸிடி காலேஜ் அழைத்தது.
இருவரும் நெருக்கமாகப் பழகினர். ஒருவேளை நாம் டேடிங் செய்கிறோமா என்றார் ஸ்டீபன். ‘டேடிங்கா! சந்தேகமாக இருக்கிறது; அப்படி ஒன்றும் இருக்காது’ என்றார் சூஸனா. ஆனால் தொடர்ந்த பழக்கத்தால் இருவரும் மணம் புரிய நிச்சயித்தனர்.
கண் இயக்கம் பற்றியும் மூளை எப்படி ஒளியின் பிரகாசத்தை உணர்கிறது என்பதைப் பற்றியும் அவர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வுகள் கண் பார்வை பற்றிய பல உண்மைகளை விளக்கியதால் அவர்கள் உலகப் புகழ் பெற்றுள்ளனர்.
நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவரின் அறிவியல் பார்வையிலும் அறிவிலும் அதிக ஆர்வமும் விருப்பமும் கொண்டுள்ளோம்.அநத உறவு எங்கள் இதய ஆழத்திலிருந்து எழுகின்ற ஒன்று.”என்கிறார் சூஸனா.
காதலுக்குக் கண்ணில்லை என்ற முதுமொழி ஒரு புறம் இருக்க கண் பார்வை ஆராய்ச்சியே காதலை உறுதி செய்து இருவரை இணைய வைத்த அதிசய சம்பவம் அறிவியலிலும் இப்படி உண்டு!
xxxx
4-3-2011 இதழில் தொடங்கிய அறிவியல் துளிகள் தொடர் இந்த இதழுடன் ஏழு ஆண்டுகளை முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தருணம் இது.
பாக்யா ஆசிரியரும் தமிழர்களின் இதயம் கவர்ந்த டைரக்டருமான திரு கே.பாக்யராஜ் அவர்களின் ஆக்க பூர்வமான சிந்தனையும் ஊக்கமுமே இதைச் சாத்தியமாக்கியுள்ளது. தொடர்ந்து தங்கள் ஆதரவை நல்கி வரும் வாசகர்களே அறிவியல் துளிகளின் பலம். அழகுற நாளுக்கு நாள் நிறைந்த உள்ளடக்கத்துடனும் கூடுதல் வடிவமைப்புப் பொலிவுடன் மிளிரும் பாக்யா நிச்சயமாக தமிழ் பத்திரிகைகளில் கமர்ஷியல் சிந்தனையின்றி அறிவு பூர்வமாகத் திகழும் வித்தியாசமான பத்திரிகை என்பதை அனைவரும் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தத் தருணத்தில் பாக்யா ஆசிரியருக்கும், பாக்யா இதழ் தயாரிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றும் பாக்யா குழுவினருக்கும், தொடர்ந்து உற்சாக ஆதரவை நல்கி வரும் வாசகப் பெருமக்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எட்டாம் ஆண்டில் இன்னும் பல சுவையான அறிவியல் செய்திகளைப் பார்ப்போம். நன்றி.வணக்கம்.
*****
Share