சொந்த ஊர்

சொந்த ஊர்- க(வி)தை

நீண்ட காலத்திற்குப் பின்
செல்ல நேர்ந்தது சொந்த ஊருக்கு..
பால்ய நினைவுகளோடு பயணித்தேன்...

ஊர் பேருந்தில் தெரிந்த முகமெதுவும் தென்படுகிறதா என்றுபார்த்தேன்
எல்லோருக்கும் எலக்ட்ரானிக் காதுகள்
நல்ல வேளையாக ஓட்டுநர் காதில்
ஓட்டை தெரிந்தது

ஊரில் அம்மாவும் அப்பாவும்   
தாழ்தளத்தில் உறங்கிவிட்டனர்
சகோதரனோ மும்பை மாநகர ரயிலில்
காலையும்  மாலையும்
மூச்சுப்பயிற்சியில்
சகோதரியோ அந்நிய தேசத்தில்
அடுக்குமாடியின் முப்பத்திஆறாவது உப்பரிகையில்
உப்பிட்டுக் கொண்டிருக்கிறாள்...
பழைய நண்பர்களும் ஊரிலில்லை

ஊர் எல்லையில் பச்சை நிழல்குடைகள்
பலஇருந்த இடம்            
புகைப்பழக்கம் உடைய பூதாகர கட்டிடமாகியிருந்தது
கோயில் ஒன்றைத் தவிர
படித்த பள்ளி குடியிருந்த வீடு
பழகிய தெருக்கள் என எல்லாம்
முற்றிலும் மாறியிருந்தது

சொந்த ஊரில் அன்னியனாக
சொந்த ஊரே அன்னியமாக
அடையாளம் காணப்படாமல்
அலைந்தபடி வந்த வேலையை முடித்துவிட்டு
பார்வை மங்கிப்போயிருந்த
முதியவர் ஒருவரை
பாசமாய் பார்த்துப் புன்னகைத்துவிட்டுத் திரும்பினேன்.

நிலாரவி.

எழுதியவர் : நிலாரவி (24-Feb-18, 7:52 am)
Tanglish : sontha oor
பார்வை : 620

மேலே