கல்லறைக் காவியங்கள் 1992

தாய்
*******
சுகம் சுகம் இந்தக்
கல்லறை மஞ்சத்தில்
உயிர் உறங்கும் - எனில்,
கருவறை எரிகிறதே
பிள்ளைகளே பிள்ளைகளே !

கவிஞன்
************
கால நதி
என்னைத்தான் அடித்துச்சென்றது
என் கவிதைகளோ
கரையேறிவிட்டன

வெறியன்
**************
இங்கே ...

வெறியன்
தலை வைத்துத் தூங்குகிறான்
வெறி
தலை விரித்து ஆடுகிறது

மணப்பெண்
*************

இவள் கூந்தலில்
பூச்சூடும் நேரம்
மரணத்தின் கூந்தலில்
மாலையாக விழுந்தாள்

கொடுத்து வைத்தவள்...!
இவள் வாழ்க்கை
துயரங்களின் கரையில்
ஒதுங்கவில்லை
கனவுகளின் ஊஞ்சலிலே
கண்ணயர்ந்துவிட்டது.

துணை நடிகை
*********************
என் திறமைக்கு இப்போதுதான்
அங்கீகாரம் கிடைத்திருக்கிறது
இங்கு
நான்தான் கதாநாயகி

இலட்சியவாதி
***************
இவன்
புதைக்கப் படவில்லை
விதைக்கப் பட்டிருக்கிறான்

இவன் சிந்திய
ரத்தத்தின் மேல்
இன்று புல் முளைக்கலாம்
நாளை பூக்கள் மலரும்

காதலர்கள்
*************

இது
கல்லறையல்ல
கிளிக் கூடு...!

இவை
வானம் துரத்திய
வண்ணக் கிளிகள்..

இவைகளின் வானத்தைத்
திருடியவர்களே
ஏன்
வளையங்களோடு வருகிறீர்கள்>

ஏழை
*********
எனக்கென்று எழுதிவைக்க
ஓர் அற்புத வாசகமுண்டு
ஆனால்
கல்லறைதான் இல்லை

ஞானி
*********
மரணம் உயிருள்ளது
எப்போதும் உங்களுடனேயே இருப்பது.
நான் மரணத்திலிருந்து
விடுபட்டுவிட்டேன்
*
*
கவித்தாசபாபதி

(ஒரு வித்தகனும் ஆயிரம் வீணைகளும் நூலிலிருந்து ..1992)

(இக்கவிதை குறித்து கவியரசு நா. காமராசன் அணிந்துரையின் ஒரு பகுதி...
"கல்லறைகளைப் பற்றிய சித்தரிப்பு ஏற்கனவே சிலரால் கையாளப் பட்ட உத்திதான்.. எனினும் நெஞ்சத்தைக் கிள்ளும் வசந்த வரிகள் அவற்றில் பதிக்கப் பெற்றுள்ளன" )

எழுதியவர் : கவித்தாசபாபதி (26-Feb-18, 8:15 pm)
பார்வை : 129

மேலே