மரியாதை ஊழியன்

ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவன் ஏழ்மை காரணமாக படிக்க வழியின்றி ஒரு செல்வந்தர் வீட்டில்
வேலைக்கு சேர்க்கப்பட்டான்,
அவன் பெற்றோர் நல்ல முறையில்
மரியாதை கற்று கொடுத்து வளர்த்திருந்தனர்;
வள்ளுவரை திருவள்ளுவர்,குறளை திருக்குறள், பெரியோரை திரு, திருமதி, புகழ் பெற்ற தலங்களை திரு சேர்த்து அழைப்பது போல எல்லோரையும், எவற்றையும் மரியாதை செலுத்தி மதிக்க கற்று கொடுத்தனர், அவனும் எதற்குமே திரு சேர்த்து பேசும் வழக்கம் கொண்டான்,
செல்வந்தர் வீட்டிலும் அவ்வாறே!
திரு வேலைக்காரி வந்தார், திரு தபால் காரர் வந்தார், திரு பக்கத்து வீட்டு காரர் வந்தார் என அனைத்திற்கும் திரு சேர்ப்பது மரியாதை என்று பழகி விட்டான்,
இது நாளடைவில் செல்வந்தருக்கு
எரிச்சல் ஊட்டியது, அவனை பார்த்து
இனி திரு என்ற சொல் உன் வாயில் வந்தால் சூடு வைப்பேன்; ஜாக்கிரதை என்று கூறி விட்டார்,
அவனும் திரு என்ற வார்த்தை சொல்வது தவிர்த்தான்.
இந்நிலையில் இரவில் ஒரு நாள்
செல்வந்தர் வீட்டில் கொள்ளையர்கள் நுழைந்து கொள்ளை அடித்து எடுத்து கொண்டு
கிளம்பினர், அப்போது இந்த வேலைக்கார சிறுவன் விழித்து கொண்டான்.உடனே சத்தம் போட்டு
கத்த ஆரம்பித்தான். ஐயா டர் டிக் கொண்டு ஓடுகிறார்கள்.......
இந்த பக்கம் ஒரு டன் டிக் கொண்டு ஓடுகிறான், அந்த பக்கம் ஒரு டன் டிக் கொண்டு ஓடுகிறான், பிடியுங்கள்
பிடியுங்கள் என்று கத்தினான்.
அவர்கள் எழுந்து வருவதற்குள் கொள்ளையர்கள் ஓடி விட்டனர்,
செல்வந்தர்ஓர்அறைவிட்டு,பைத்தியம் பிடித்த மாதிரி எதையாவது கத்தாதே போய் படு என்று அதட்டி விட்டு போய் படுத்து விட்டார்.
காலையில் எழுந்ததும் கொள்ளை போன விஷயம் தெரிந்து வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு
புலம்பி அழுதனர்.சிறுவன், நான் தான் கத்தினேனே உங்களுக்கு புரியவில்லை, நான் என்ன செய்வது
என்றான், புரியாமல் பார்த்தார்,
நீங்கள் அந்த ஒரு வார்த்தையை சொல்ல கூடாது என்று சொல்லி விட்டதால் நான்
(திரு)டர் (திரு) டிக் கொண்டு ஓடுகிறார்கள் என்று கத்தினேன்
என்றானே பார்க்கலாம், செல்வந்தர் மயங்கி விழுந்தார், நீங்கள்?????

எழுதியவர் : பாலமுருகன்பாபு (26-Feb-18, 8:39 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 300

மேலே