அமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’
ஜன்னல் இதழில் தொடராக வெளிவந்த ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ இதுவரை நூல்வடிவம் பெறவில்லை. இணையத்திலும் வெளியாகவில்லை. அருண்மொழி அவற்றைத் தொகுத்து மின்னூலாக ஆக்கியிருக்கிறாள். இணைப்பு கீழே
‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’
நூல் முன்னுரை
இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை.
நாம் அனைவருக்கும் குலதெய்வங்கள் உண்டு. கிராமியதெய்வங்கள், காவல்தேவதைகள் என நாம் நாட்டார்தெய்வங்களால் சூழப்பட்டு வாழ்கிறோம். அந்தத் தெய்வங்களுக்கும் இந்தியாவின் பிரம்மாண்டமான தொன்ம மரபுக்கும் என்ன உறவு,அவை எப்படி உருவாயின, அவற்றின் உணர்வுநிலைகள் என்ன என்று ஆராய்கின்றன இக்கதைகள். தென்தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் குலதெய்வத்தின் கதையை இதில் கண்டுகொள்ளக்கூடும்.
இந்நூலில் உள்ள நாட்டார் கதைகள் அ.கா.பெருமாள் அவர்களாலும், மறைந்த திரிவிக்ரமன் தம்பி அவர்களாலும் தொகுக்கப்பட்ட நூல்களில் இருந்தும் என் இளமையில் செவிவழியாக கேட்டறிந்த கதைகளில் இருந்தும் எடுக்கப்பட்டவை
இந்நூலை நான் நண்பர் கோணங்கிக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்
ஜெ