நீ மட்டும் போதும்

"சிவா என்னால வீட்டில உள்ளவங்க கிட்ட சொல்லி புரிய வைக்க முடியலடா. நாம சின்ன வயசில் இருந்து ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்னு என் வீட்டிலயும் சரி உன் வீட்டிலயும் சரி ரொம்ப நல்லாவே தெரியும். அப்பிடி இருந்தும் சாதி மதம் தான் பெருசுன்னு நம்மள சேர்த்து வைக்க மாட்டேங்கிறாங்க."

"அது தான் தெரிஞ்ச விசயமாச்சே. நான் நல்ல மூட்ல இருக்கேன். இதையெல்லாம் ஞாபகப்படுத்தி என் மூடை கெடுக்காத."

"எனக்கென்ன ஆசையா உன் மூடைக் கெடுக்கணும்னு. நானே நொந்து போயிருக்கேன். இதுல நீ வேற." சலிப்பாய் சொல்லிக் கொண்டே அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் தலையை மெல்ல வருடியவாறே "ஏன் இப்ப என்ன புதுசா?" என்று கேட்டான். அவனது அன்பான வருடல் இதத்தை கொடுத்தாலும் சொல்லப் போவது முக்கியமான விடயம் என்பதால் எழுந்து நகர்ந்தமர்ந்தாள்.

"எங்க வீட்டில இரண்டு நாளா ஒரு பையன் போட்டோவை காட்டி கல்யாணத்துக்கு ஓகே சொல்லுன்னு ஒரே ரோச்சர். பையன் நல்ல குடும்பமாம். நல்ல வேலைல இருக்கானாம். ஜாதகத்தில வேற பத்துப் பொருத்தமும் பொருந்தி இருக்காம். இந்த மாதிரி ஆயிரத்துல ஒரு ஜாதகம் தான் பொருந்துமாம். வீணா அடம்பிடிக்காம சரின்னு சொல்லுனு எல்லாரும் ஒரு வழி பண்ணீட்டாங்க என்னைய. அதான் நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். உனக்கு இதுல இஷ்டம் இல்லைன்னாலும் எனக்காக நீ ஏத்துக்கிட்டு தான் ஆகனும். பிளீஸ்டா எனக்கு வேற வழி தெரியல ஆ....

ஆரம்பத்தில் அவள் விலகி அமர்ந்த போது புதிராகப் பார்த்தவன் அவள் பேசப் பேச முஷ்டியை மடக்கி கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றான். அது முடியாமல் போகவே அவளை அறைந்து விட்டான். கண்களில் குளம் கட்ட அவனை விளங்காத பார்வை பார்த்தாள்.

"என்னடி அப்பாவி மாதிரி பாத்தா நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவன்னு நினைச்சியா. சீ நீயெல்லாம் ஒரு பொண்ணா? இத்தனை வருச காதல புதுசா ஒருத்தனை பாத்ததும் தூக்கிப் போட்டிட்டியேடி. நீ எல்லாம் என்ன பொறப்புடி." வெறுப்பில் வார்த்தைகளை கொட்டிக் கொண்டிருந்தவன் முன்னே கைப்பையிலிருந்து ஒரு கடதாசியை எடுத்து நீட்டினாள். ஆத்திரத்துடன் அதை வாங்கிப் படித்தவனுக்கு எதுவுமே புரியவில்லை.

"ஒரு வருசத்துக்கு வீடு வாடகைக்கு எடுத்திருக்கேன். அட்வான்ஸ் குடுத்ததுக்கான உறுதிப்பத்திரம் தான் இது. நான் வீட்டில சொல்லீட்டன் அந்தப் பையனை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு. அப்பிடின்னா அந்த வீட்டில இடம் இல்லீன்னாங்க. அதான் வெளிய வந்துட்டன். உங்களுக்கு இந்த கேவலமான பொறப்ப கல்யாணம் பண்ண பிடிக்கலன்னா உங்க வீட்டில பாக்குற பொண்ணை கட்டிக்கோங்க." கடைசி வாக்கியத்தை சொல்லும் போதே உடைந்து அழ ஆரம்பித்தாள்.

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதையே ஆராயாமல் அவசரப்பட்டு அவளை காயப்படுத்தியதில் தன்னையே நொந்து கொண்டவன் அவளது காதலின் ஆழத்தை உணர்ந்து கொண்டதில் திக்குமுக்காடிப் போனான். "கண்ணம்மா என்னை மன்னிச்சிருடி. நான் ஒரு மடையன். எப்பவும் யோசிக்கிறதே இல்ல. ஏதேதோ எல்லாம் பேசி உன்னை ரொம்பவே காயப்படுத்தீற்றன்ல." அவனது உண்மையான வருத்தம் அவன் வார்த்தைகளில் தெரிந்தது.

"என் கஸ்பன்ட் ஒரு மடையன். கோபத்தில கண்டதையும் பேசுவான். அதை எல்லாம் நான் கண்டுக்குறதில்ல." அவள் தான் வருந்துவது பிடிக்காமல் தன்னை சமாதானம் செய்ய முயல்கிறாள் என்பதை உணர்ந்தவன் தானும் அதே போலவே பேசினான்.
"கண்டுக்க மாட்டேன்னு சொன்னவங்க தான் இப்பிடி கண்ணெல்லாம் வீங்குற அளவுக்கு அழுவாங்களாமா?"
"இப்பிடி வலிக்குற மாதிரி அடிச்சா அழாம பின்ன" கன்னத்தை தடவியவாறே அவனை முறைத்தாள்.
கைத்தடம் பதிந்து சிவந்து போயிருந்த கன்னத்தை பார்க்கையில் தன் மேலேயே கோபம் வந்தது அவனுக்கு. மெல்ல அவளை அணைத்து முத்தத்தால் கன்னத்தில் ஒத்தடம் கொடுத்தான். இப் பிறவி முழுமைக்கும் இவ் அணைப்பு ஒன்றே போதும் என்பது போல அவன் நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள்.

எழுதியவர் : துளசி (2-Mar-18, 7:34 am)
Tanglish : nee mattum pothum
பார்வை : 692

மேலே