வள்ளுவன் கதை அழுக்காறு என ஒரு --------------------------------------ஸ்வாமிநாதன்

பொறாமை பற்றிய ஒரு சுவையான கதையைப் படியுங்கள்.



வள்ளுவன் பத்து குறட்பாக்களில் அவ்வியம் பற்றிப் பாடுகிறான். பொறாமை எனப்படும் தீய குணத்தினால் செல்வம் அழியும் என்கிறான். அழுக்காறு இல்லாதவனுக்கு அது ஒரு பெரிய வரம் என்கிறான்



இதோ சில வரிகள்:



அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்துவிடும் – குறள் 168



பொறாமை என்னும் கொடிய பாவி செல்வத்தை அழிக்கும்; தீய வழியில் செலுத்தும்.



இன்னும் கொஞ்சம் அழகாகச் சொல்கிறான்:

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (170)

பொறாமை உடையோர் உயர்ந்ததும் இல்லை;பொறமை இல்லாதோர் சிறுமை அடைந்ததும் இல்லை.



பத்து குறட்பாக்களில் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறான்.

‘’அவ்வியம் பேசேல்’’ என்று அவ்வையாரும் இயம்புவார்.



ஒரு ஊரில் ஒரு கணவன் மனைவி ஜோடி. கணவனுக்கு வேலை இல்லை. குடும்பம் வறுமையில் வாடியது. மனைவியின் நச்சரிப்பு தாங்கவில்லை. திரை கடலோடியும் திரவியம் தேடு என்கிறார்களே. நீங்கள் கடல் தாண்டிக் கூட செல்ல வேண்டாம்; அடுத்த ஊருக்காவது போய் வேலை தேடுங்கள் என்றாள்; அவனும் நச்சரிப்பு தாங்காமல் சரி என்றான்.


அவளுக்கு ஏக சந்தோஷம்; அறு சுவை உண்டி சமைத்தாள். பெரிய பித்தளை பாத்திரத்தில் (சம்புடம்) கட்டுச் சோறு கட்டிக் கொடுத்தாள். அவனும் வழி நடந்தான். மாலை நெருங்குகையில் களைப்பு மேலிடவே ஒரு மரத்தடியின் கீழ்ப் படுத்தான். அதற்கு முன் உணவு சம்படத்தை ஒரு மரக்கிளையில் கட்டித் தொங்கவிட்டான்.



களைப்பில் நன்றாகக் கண் அயர்ந்தான். இவனது அதிர்ஷ்டம் அந்தப் பக்கமாகப் பார்வதி பரமேஸ்வரன் பூமி வலம் வந்தார்கள்.



இவனுடைய உணவுப் பாத்திரத்தில் இருந்து புறப்பட்ட நறுமணம் ஈரேழு உலகங்களையும் வியாபித்து நின்றது.

பார்வதி: நாதா! வாசனை மூக்கைத் துளைக்கிறது; நாக்கில் ஜலம் ஊறுகிறது. அங்கே படுத்திருப்பவன் சாப்பாட்டைக் கொஞ்சம் ருசிப்போமே என்றாள்.

சிவனும் அப்படியே ஆகட்டும் என்றார். சுவைக்கப்போன இருவரும் முழு உணவையும் சாப்பிட்டு முடித்தனர். மரத்தடியில் தூங்கினவன் எழுந்தால் ஏமாறக்கூடாதென்பதற்காக பித்தளை சம்புடத்தை தங்கமாக மாற்றி நினைத்த போதெல்லாம் உணவளிக்கும் அக்ஷய பாத்திரமாகச் செய்து மரத்தின் கிளையில் தொங்க விட்டனர்.



அவன் தூங்கி எழுந்ததபோது பசி வயிற்றைக் கிள்ளியது. இலையை விரித்தான்,பாத்திரத்தைத் திறந்தான். ஒன்றுமில்லை. அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் பருக்கைகளாவது கிடைக்கட்டும் என்று அதை கவிழ்த்தான். என்ன அற்புதம்? அறு சுவை உணவு இலையில் விழுந்தது சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கிராமத்துக்கு ஓடினான். உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் அழைத்து தனது கதைகளை விஸ்தாரமாய்ச் சொல்லி சாப்பாடு போட்டான்.



அப்படிச் சாப்பிடவர்களில் அடுத்த வீட்டுக் காரியும் இருந்தாள்; அவளோ பொறாமையின் ஒட்டுமொத்த வடிவம்; அவளும் இரவோடு இரவாகத் திட்டம் போட்டாள். கணவனுக்கு தலையணை மந்திரோபதேசம் செய்து அவனை மறு நாளே அயலூருக்கு அனுப்பிவைத்தாள்; மந்திரோபதேசத்தின் முக்கிய அம்சம்—அடுத்த வீட்டுக்காரன் செய்தது போலவே எல்லாம் செய்யவேண்டும். இவனும் நடைவழிப் பயணத்தின் பாதியில் ஓய்வு எடுத்தான்; மரக்கிளையில் பித்தளைப் பாத்திர உணவைத் தொங்கவிட்டான். கண்ணயர்ந்து எழுந்தபோது சம்படம் மாறி இருந்தது. ஆயினும் இருட்டு நேரம் ஆதலால் அப்படியே வீட்டுக்கு ஓடி வந்த மனைவியிடம் கொடுத்தான்.



அவளோ அவசரக்காரி; ஆத்திரக்காரி; பாத்திரத்தில் என்ன இருக்கிறது, என்ன பாத்திரம் என்பதைப் பார்க்காமல் ஊரையே அழைத்தாள் விருந்துக்கு.



உண்மையில் நடந்தது என்ன வென்றால் அவன் உறங்கியபோது பார்வதி பரமேஸ்வரனுக்குப் பதிலாக ஒரு பிரம்ம ராக்ஷஸ் (பேய்) தம்பதியினர் அந்தப் பக்கம் வந்து அவனுடைய அறுசுவைச் சாப்பாடு எல்லாவற்றையூம் சாப்பிட்டுவிட்டு, அவனது தீய எண்ணத்தை உணர்ந்து அந்த பாத்திரத்தில் ஒரு மூக்கறுப்பு கருவியை வைத்துச் சென்றனர்.



ஊரே கூடியபோது மனைவி அதைத் திறக்கவே, அதனுள்ளே இருந்த பேய் அவளுடைய மூக்கையும் அருகில் சாப்பிட உட்கார்ந்த எல்லோருடைய மூக்கையும் அறுத்துத் தள்ளியது.

ஆக ‘அழுக்காறு என்னும் பாவி’, அந்த பொறாமைக்கார மனைவியையும் அவளுடன் சேர்ந்தோரையும் தண்டித்தது.

நீதி- அவ்வியம் பேசேல்



–சுபம்–

லண்டன் ஸ்வாமிநாதன்

எழுதியவர் : (2-Mar-18, 4:35 am)
பார்வை : 59

மேலே