அம்மாவிற்காக ஒப்பாரி
பழுத்தப் பழம் அழகாயிருக்கும்
பயன்படாது யாருக்கும்!
மரத்தில் மூப்பு எட்டி
மரணத்தை தொட்டு நிற்கும்!
விவரம் தெரிந்த நாளில்
உதட்டு எச்சில் காய்ந்து
அம்மா என அழுகையில்…
அநாதையாய் உணர்ந்தேன்!
சொல்லி அழ யாருமில்லை
சொந்த பந்தங்களும் கூட இல்லை!
ஒருநாள்
ஒற்றைச் சடையில் அழகாய் இருந்தாய்…
ஓரக்கண்காட்டி – உன்னை
ஒருத்திக்கு மட்டுமே நானென,
உறவாட வந்தானே… தெரிந்த
ஊர்க்காரி சொன்னாளே!
கருவாய் வயிற்றில்
உருவாய் எனைக்கொடுத்து
ஊர்வம்பு பேசிடவும் ஏசிடவும்
ஓடினானே! என் அப்பன் ஓடினானே!!
மானம் காத்திட
மசக்கையை மறந்து
துரத்தி அடித்தனரே… உன் பெற்றோர்கள்
துரத்தி அடித்தனரே..!
தனியாய் வாழ்ந்து
தடைகள் பல கடந்-தாயே!
சாலையில் செல்லும்
சிலரைக் கைக்காட்டி…
அப்பா என்றழைத்த போது
கூனிக்குருகி நின்றாயே!
என் அம்மாவே - உன்
இதயத்தை முள்ளால் கீறி
ஏலம் விட்ட இச்சமூகமே
வெட்கப்படு! வெட்கப்படு!!
பெண்ணின் பிறப்பை
பண்பட்ட வாழ்வை
சிதைத்த சமூகமே!
ஒழிந்து போ…
ஒழிந்து போ…
பழுத்தப் பழம் அழகாயிருக்கும்
பயன்படாது யாருக்கும்!
மரத்தில் மூப்பு எட்டி
மரணத்தை தொட்டு நிற்கும்!
மனதைக் கெடுத்த என் அப்பனும்
மானம் வாங்கிய மக்களும்
மூச்சை அடக்கிய எமனும்
என் ஒப்பாரியை கேள்!
கல்வி கற்று
கருத்தாய் நின்று
பணிவாய் வளர்ந்தேனே…
பணியில் உயர்ந்து
பாசத்தோடு ஓடி வருகையில்
உன் இறப்பு செய்தியா
என் செவிகளில் கேட்க வேண்டும்!
என் ஒப்பாரி வானைச் சுட
என் ஒப்பாரி பூமியை பிளக்க
நானும் உன்னுடன் கலந்தேனே - அம்மா
நானும் உன்னுடன் கலந்தேனே!!!