மரண சாசனம்

எதிர்கால சிந்தையில்
நிகழ்கால மனிதர்கள்...
நவீன கல்லறைகள்!

*****

பழையன கழிதலும்
புதியன புகுதலும்...
விஞ்ஞான சங்கிற்குள்
இயற்கைக்கு ஊதும்
இறுதி அஞ்சலி!

*****

ஐந்தினூடே
ஒன்று கூட்டியது...
கணிதக்கோட்பாட்டில்
இறைவன் செய்த
மிகப்பெரும் பிழை!

*****

மூன்றாம் கரமாய்
மனிதன்
ஆயுதம் தயாரித்தது...
உயிர் வாழ
பூமி ஏற்ற இடமில்லையென
பிரபஞ்சத்திற்கு விடுத்த
பகிரங்க அறிவிப்பு!

*****

இரசாயன மாற்றத்தில்
ஆறறிவில் தோன்றும்
எண்ணங்கள்...
மனித விட்டில் பூச்சிகளாய்
திராவகக் குடுவையை சுற்றும்
ஐந்தறிவு அறியாமையின்
சோகங்கள்!

*****

பூமியின் தேகமெங்கும்
பதிந்தது,
இருகால் மிருகத்தின்
கால்தடங்கள்...
மரணத்தின் வாசலில்
வரிசையாய் நிற்கின்றன
ஏதுமறியா பலகால்
உயிரினங்கள்!

*****

புதுமை படைக்க
அறிவியல் எழுதும்
விதியெல்லாம்...
எதிர்கால மனிதனுக்காக
நிகழ்கால மனிதன் எழுதும்
மரண சாசனம்!!!!

எழுதியவர் : யாழ்வேந்தன் (9-Mar-18, 6:51 pm)
பார்வை : 1361

மேலே