வாழ்க்கைப் பணயம்
மொழியின் சாத்தியமும், என்
மூளையின் சாத்தியமும்
எவ்வளவோ?
அவ்வளவு முனைகிறேன்.
யாருக்கும் அசாத்தியமானதை
அடையத் துடிக்கும் – என்
ஆசையில் குறைவில்லை.
என் வாழ்க்கை வசதிகளைக்
காவு கொடுத்து – என்
வார்த்தை தவம்
கலைந்ததே இல்லை.
கயிற்றில் நடக்கும் வித்தைக்குக்
கவித்துவ
வித்தை என்ன
குறைந்ததா?
அதிகாலை வேளையில்
கோவணத்தோடு கலப்பை தூக்கி
பெரும்பசியோடு வீடு திரும்பி
பிறர்பசி போக்கும் உழவனுக்கும், எனக்கும்
என்ன வேறுபாடு?
என் வாழ்க்கைக் கயிறுசுற்றி
கவித்துவ அமுதம்
பொங்கி நுரைப்பது
களிபேருவகை.
சவால்களும், சவடால்களும்
என்னை உசுப்பேற்றி இருக்கின்றன.
கேலிகளும், கிண்டல்களும்
என்னைக் கிண்டி விட்டன.
சிலுவைப் பாடு போன்ற
வாழ்க்கைப் பாடுகளோடையே
வாழ்க்கைப் பாடுகளை
அரங்கேற்றம் செய்தேன்.
பிறர் பிறர் கள்ள மௌனங்களுக்கு
என் கவிதைகள்
வார்த்தைச் சவுக்குகள் ஆயின.
ஒவ்வொரு சொடுக்கிலும்
தடித்த தோல்களை
உரித்தெடுத்திருக்கிறேன்.
வழிநெடுகிலும்
சகதி, சேறு, சாக்கடைகளை
சந்தன வாசத்தோடு
பதிவு செய்திருக்கிறேன்.
என் வாழ்க்கைப பயணமல்ல..
இது..வாழ்க்கை பணயம்.

