வெட்டிகள்
===========
கல்லூரி முடித்து வேலையின்றி
ஊருக்குள் திரிந்தால்
வெட்டிப்பயல்.
கட்டிப்போன பெண்ணொருத்திக்
கணவனை விட்டுப் பிரிந்து
வந்தால் வாழாவெட்டி.
கொண்டு வராதததைக்
குத்திக்காட்டும் கிழமாமியார்கள்
கைகளில் கொட்டப்பாக்காய்
வெட்டப்படும் மருமகள் தலைக்குப்
பாக்குவெட்டி.
சுதந்திர கிளியின் சிறகுவெட்டி
சோசியக் கிளியாக்குவது சிலரது
வேலைவெட்டி,
ஊருக்குள் மலக்கூடம்
கட்டினாலும் திறந்து வைத்துப்
புகழ் தேடக் காத்திருக்கும்
பல நாடா வெட்டிகள்
வெட்டியா இருக்கக் கூடாதென
ஆட்டவெட்டி மாட்டவெட்டி
அதுவும் இல்லையென்றால்
அடுத்தவன் தலையை வெட்டி
பரப்பரப்பை உருவாக்கும் வெட்டிகள்
ஒன்றுமே இல்லாவிட்டால்
மனத்தளவில் எப்போதும்
எவருக்கேனும்
குழிவெட்டிக்கொண்டுதான்.
*
*மெய்யன் நடராஜ்