எனக்கும் தெரியும்

எனக்கும் தெரியும்

சப்தம் நீங்கி வழிவிட்டது
நிசப்தம் ஓங்கி பலம் சேர்த்தது
விழிகள் இரண்டும் மூடிப் போனது
விரல்கள் எதையோ தேடிப் போனது

சிலமட்டும் காய்க்கும் மாமரப் பூக்களாய்
சிந்தையின் சிலதுளி செயலாய் ஆனது
திரௌபதி சேலையாய் ஆசைகள் நீண்டது
தீராத ஆசைகள் தீராமல் தீர்ந்தது

கற்பனை என்னும் வளம் விரிந்தது
கவிதை முதன்முதலாய் இன்று எழுதப்பட்டது
புத்திளம் பூவையை வர்ணனை செய்தான்
புதுக்கவி எழுதி கற்பனைகள் நெய்தான்

வார்த்தை வராது வசமிழந்து துடித்தான்
முணுமுணுக்கும் வார்த்தைகளில் முழுக்கவியும் வடித்தான்
உள்ளிருக்கும் எண்ணங்களை முழுகவியாய் வடித்தான்
பாதாதி கேசம் வரை பாஎழுதி உணர்ந்தான்

இதழ்கள் எதையோ அசைபோட்டது
இனிதாய் ஏதோ இசை கேட்டது
வேலையும் முடிந்தது விரல்களும் சோர்ந்தது
கவிதையும் முடிந்தது காகிதம் நிறைந்தது

கவிதை படிக்கும் உள்ளம் கொண்டோர்
கருப்பொருள் இரண்டினைப் புரிந்து கொள்வீர்
இரண்டும் புரிந்து ஏற்றுக் கொண்டால்
இரட்டுற மொழிதல் எனக்கும் தெரியும்

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (11-Mar-18, 2:04 am)
Tanglish : enakum theriyum
பார்வை : 66

மேலே