நம்பிக்கை

நம்பிக்கை

அப்பாவின் கசையடி வார்த்தைகளால் விரக்தியின் உச்சத்தோடு வெறிக்க வெறிக்க மயான அமைதியில் கிடந்த

ரயில்வே கேட்டில் நின்றவாறு தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற குருட்டு சிந்தனையில் நின்றவனின் மீது

யாரோ மோத...

"சாரி பிரதர்" அழைப்பு குரல் கேட்டு திரும்ப டிப்டாப்பாக டிரஸ் செய்து கூலிங்கிளாஸ் அணிந்த அந்த நபர் மீண்டும்

அழைக்க சுயநினைவுக்கு வந்த குமார்

"சொல்லுங்க" என்றான்

"பிரதர்! எங்க ஜெப வீடு எங்க இருக்கு" கேட்க பல முறை அங்கு ஜெபம் செய்வதும், பாடல்கள் பாடும் சப்தமும்

கேட்டவன் குமார்

"என்கூட வாங்க பக்கத்துலதான் இருக்கு" மவுனமாய் அழைத்து சென்றவனிடத்தில்...

"பிரதர்! உங்க பேரு என்ன?"

"குமார்" என்றான்

"என்ன பண்றீங்க?"

"இப்போதைக்கு வேலையில்லை தேடிட்டு இருக்கேன்" மென்று விழுங்கியவனை...

"கவலைப்படாதீங்க கண்டிப்பா சீக்கிரம் வேலை கிடைக்கும்"

"உங்க பேரு?"

"சார்லஸ்"

"சொந்த ஊரு சென்னையா?"

"தெரியாது குமார்"

"என்ன சொல்றீங்க? சொந்த ஊரு தெரியாதா?"

"ஆமாம். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல் "லிட்டில் பிளவர் ஹோம்" நடத்தற பாதர் ஜேம்ஸ்தான் என்னை

வளர்த்து படிக்க வெச்சு ஆளாக்கினார். எனக்கு அம்மா அப்பா எல்லாமே அவர்தான் " மெல்ல சார்லஸ் சொன்னதை

கேட்டு மவுனமாய் வந்தவனை நினைவுக்கு கொண்டு வந்தான் சார்லஸ்.

"குமார்! உங்களபத்தி சொல்லுங்க?"

"என்னை பத்தி சொல்ல பெருசா ஒண்ணுமில்ல. அம்மா, அப்பா, நான் மொத்த மூணுபேருதான்" சொல்லி

முடிப்பதற்குள்...

"இனி என்னையும் உங்களோட சேத்திக்கங்க" என்று கூறி கலகலவென்று சிரித்தான் சார்லஸ்.

சார்லஸ் கையில் வைத்திருந்த கிடாரை பார்த்த குமார்

"என்ன கிடரெல்லாம் வெச்சிருக்கீங்க?"

"குமார்! நான் மியூசிக்ல டிகிரி முடிச்சுருக்கேன்"

"அப்படினா சினிமா பக்கம் போயிருக்கலாமே" என்றவுடன் கலகலவென்று சிரித்தவாறு...

"குமார்! கடவுளுக்காக நான் கத்துக்கிட்டேன்"

"சார்லஸ்! நான் ஒண்ணு கேப்பேன். தப்பா நினைக்கக்கூடாது"

"கேளுங்க"

"இந்த வாழ்க்கை உங்களுக்கு பிடிச்சிருக்கா?"

"என்ன இப்படி கேக்கறீங்க? இது எவ்வளவு அற்புதமான வாழ்க்கை. ஒவ்வொரு நொடியும் ஆண்டவர் நமக்காக

கொடுத்தது. அத வீணாக்கிவிடாமல் வாழணும்" சொன்ன வார்த்தை ஒவ்வொன்றிலும் சார்லஸ் முகம் நம்பிக்கையில்

மிளிர்ந்தது. தொடர்ந்து பேசியவாறு இருவரும் செல்ல அவர்கள் போக வேண்டிய இடம் வந்தது.

"சார்லஸ்! இதுதான் ஜெப வீடு"

"ரொம்ப தேங்க்ஸ் குமார்" தன்னுடைய மொபைல் எண்ணை கொடுத்தவன்...

"கண்டிப்பா கூப்பிடுங்க குமார்" என்று கூறியவனை பார்த்து...

"நீங்க சார்லஸ்தானே?"

"ஆமா. நீங்க?"

"நான் சைமன். பாதர் ஜேம்ஸ் நீங்க வரப்போறதா போன்ல சொன்னார். வாங்க மாடியிலதான் ஹால் இருக்கு" என்று

கூற குமாரை அறிமுகப்படுத்த அவனுக்கு நன்றியை சொல்லிவிட்டு மெல்ல சார்லெசின் கைகளை பிடித்தவாறு...

"சார்லஸ்! இந்த இடத்துல படி இருக்கு பாத்து கால் எடுத்து வெச்சு வாங்க" என்று சைமன் சொல்ல கண் தெரியாத

சார்லஸ் செல்வதை பார்த்த குமாருக்கு தன்னுடைய முட்டாள்தனமான விரக்தி அந்த தண்டவாளத்தில் துண்டு

துண்டாகி போனதை உணர்ந்தான்.


கோவை புதியவன்

எழுதியவர் : கோவை புதியவன் (13-Mar-18, 7:46 pm)
Tanglish : nambikkai
பார்வை : 242

மேலே