சின்னஞ் சிரியாக் குழந்தைகள்

காலடி உயரம் கையிலடங்கும் தேகம்
நாங்கள் சிறு குழந்தைகள் என்பதற்கு
அடையாளமாய் இது பாேதுமென்று நம்பியதுண்டு.

சீறிய குண்டுகளுக்கு தப்பிக்க தவழ்ந்தது அனைத்தும் என் மழலையின் அடையாளமே -
பயத்தின் இயலாமையென்று சிரிக்கும் உங்களுக்கு எப்படி உணர்த்துவோம் நாங்கள் குழந்தைகளென்று.

வான் மனிதனைக் காட்டி சோறுண்ண மறுத்தபோது தெரியவில்லை அவன் உண்மையென்று
சோற்று மூட்டைகள் வரும் வான் நோக்கி விழிக்கிறோம் -
நம்புங்கள் பசி உணர்ந்தாலும் நாங்கள் பிள்ளைகளென்று.

அப்பாவின் குர்தாவை அணிந்து பெரியவனாக முற்பட்டது தவறுதான்
பாெம்மையை கட்டியணைத்து கந்தலணிந்து நிற்கிறோம் -
நம்புங்கள் இரத்த புழுதிப்பூச்சில் அழுகை மறந்தாலும் நாங்கள் சிறுவர்களென்று.

"துப்பாக்கி எடுத்தவனுக்கு துப்பாக்கியால் சாவு"
வாக்கியம் புரிந்திருந்தால் பொம்மை விமானத்தை
தொட்டேயிருக்க மாட்டோம் -
வெள்ளை பலூனில் கடைசி மூச்சடைத்து அனுப்புகிறாேம்
சுவாசத்தின் பால் நெடி முகர்ந்து நம்புங்கள் நாங்கள் குழந்தைகளென்று.

தீமையை அழித்த வீரன்
கெட்டொழிந்த மன்னன்
பிரிந்த காதல்
கடவுள் கதைகளினூடே எம்மண்
விசவாயு பருகி மூன்றரையடி சவப்பெட்டியிலடைந்த பட்டாம்பூச்சிகள் கதையையும் பாடும் -
ஒப்பனைக் கதைகளைத்தேடி ஓடும் பேனாக்கள் அன்று உணரட்டும் தானும் ஒரு ஆயுதமென்று.

நேர் பிடித்த துப்பாக்கி தலை குனியும்போதெல்லாம்
இவ்வுலகம் தலை குனியட்டும்.
மதப் பசிக்காக
சாதிப் பசிக்காக
எண்ணெய் பசிக்காக
பிள்ளைக்கறி உண்ணும் ஒவ்வொரு தலையும் குனியட்டும் -
வெளிர் கூர் பற்களை நறநறத்து நம்புங்கள் நீங்கள் மிருகங்களென்று.

எழுதியவர் : Hemalatha (13-Mar-18, 11:34 pm)
சேர்த்தது : Hemalatha
பார்வை : 4012

மேலே