குருதிப்பால்

குருதிப்பால்

பச்சிலைகள்
பழுக்காமல்
சிறகுகளாக
சிறைக்குள்.

ஒற்றை விழியில்
ஓராயிரம்
கனவுகளாக
விரல் வழி
கசிகிறது
வருணாசிரமம்.

பாசி படர்ந்த
கொட்டடிகளில்
தனிமனித
சுதந்திரத்தை
தாராளமாய்
அடைத்து
வைத்திருக்கிறது
தாராளமயம்.

உலமயத்தால்
உருக்குலைந்தவனின்
வாரிசு
என்பதால்
மழலைப்பள்ளிகள் கூட
விடாமல்
விரட்டுகின்றன.

தனியார்மயத்தில்
அனுமதியில்லை
எளிய மனிதப்
பூங்காற்றுகளுக்கு.

விழிகளில்
தெரிகிறது
ஊழல் குதிரைகளின்
குளம்புகள்.

தலைக் கோதிட
தாய்
அருகில்
இல்லை.
தலைமீது
சுமந்துச் செல்ல
தந்தை
உயிரோடு
இல்லை.

மதுவால் மாண்டவர்களின்
புதுப் 'பட்டியல்'
இனத்தவன்
இவன்.

பள்ளிகளில்
அடைப்பட்ட
தன்னிளம்
தோழர்களை
எண்ணி
தேம்பும்
தோழன்.

கேட்டு வைத்தவன்
இவன்.
'தேசம்
ஜொலிக்கிறது.
தனிநபர் வருமானம்
எட்டை எட்டிவிடும்.
புதுவரிக்கொள்கையால்
தேசம்
வரிக்குதிரை
வேகத்தில்
விரைகிறது'
எனும்
வார்த்தை ஜாலங்கள்
கேட்காத
இவன்
கேட்டு வைத்தவன்.

புதுப்புது
தொழில் நுட்பப்
புரட்சி
நடந்தென்ன
பயன்?
இவனுக்கொரு
சட்டையைக்கூட
செய்து கொடுக்க
முடியாமல்
வக்கற்று வாயடைத்துக் கொண்டன
அத்தனையும்.

காத்திருக்கிறது
சமூகம்
இவன்
மீது
சிலுவை சுமத்திடவும்
பட்டை சார்த்திடவும்
பிறை தொழச் செய்திடவும்.

என்னென்னவோ
பெயர்கள்
சூட்டிட
முனைந்தாலும்
'வறுமைதாசன்'
என்பதே
பொருத்தம்.

என்னவர்களே!
ஒன்று மட்டும்
உறுதி.
அடைக்கப்பட்டவை தான்
ஒருநாள்
வைரமாய் ஜொலிக்கும்.

அடைக்கப்பட்டவர்கள்
எழுந்தால்
செஞ்சூரியன்கள்
பூமியில்
பூக்கும்.
பூமித்தாய்க்கு
குருதிப்பால்
சுரக்கும்.

- சாமி எழிலன்

14 03 2018

எழுதியவர் : சாமி எழிலன் (14-Mar-18, 5:24 am)
சேர்த்தது : Saami Ezhilan
பார்வை : 64

மேலே