Mamiyar kavithaikal

மகனுக்கு மனைவியாய்
மணமுடித்து அழைத்துவந்தேன்
மருமகளே உன்னைத்தான்
மகளாக நான்நினைத்தேன் !

தழையத்தழைய பின்னலிட்டு
தலைநிறைய வைப்பாயென
சந்தையிலே பூவாங்கி
சரமாயதை நான்தொடுத்தேன் !

சிகைவிரித்த சிங்காரியாய்
சிலுப்பிக்கொண்டு நீநின்றாய்
சினத்தால் முகஞ்சிவந்தாலும்
சிறுநகையால் நான்மறைத்தேன் !

ஜரிகைபோட்ட பட்டுச்சேலை
ஜம்பமாய் இருக்குமென்றேன்
ஜீன்ஸ்பேண்ட் டீஷர்ட்டே
ஜம்முன்னு இருக்குமென்றாய் !

பொங்கல்வடை சாம்பாரே
பொருத்தமான டிபனென்றேன்
பிரெட்டோஸ்ட்டும் ஆம்லெட்டும்
பிரமாதமான டேஸ்ட்டென்றாய் !

மண்சட்டியில் சமைத்தால்
மணத்தோடு ருசிக்குமென்றேன்
குக்கரில் செய்தாலும்
குறையாது சுவையென்றாய் !

ஏட்டிக்குப் போட்டியாய்
என்றுமே நடந்திட்டால்
நமக்குள்ளும் விரிசல்வரும்
நல்லதில்லை இருவருக்கும் !

ஆதலினால் மருமகளே
ஆசைமகனை அழைத்துக்கொண்டு
மனம்போல்தனிக் குடித்தனம்போ
மாமியாரை ஆளைவிடு !

எழுதியவர் : (23-Mar-18, 3:45 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 4276

மேலே