பிரிதலில் ஒரு புரிதல் 1

" பிரிதலில் ஒரு புரிதல்"


"புரிந்து கொள்ளாது சேர்ந்திருப்பதை விட பிரிந்திருப்பதே நலம்,, உனக்கும் இப்போது அதுவே, தேவை. யாரும் யாருக்கும் உண்மையில்லை என்பதே, மறுக்க முடியாத நிதர்சனம், வணக்கம்" இதோடு 100 முறைக்கு மேல் இந்தக் குறுஞ்செய்தியைப் படித்து விட்டாள் லாவண்யா. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் விழிகளில் இருந்து உருண்டோடும் கண்ணீர்த்துளிகள் நிற்க இடமின்றி, அவளின் கழுத்தில் சங்கமமாகியது. "அவ்வளவு வெறுப்பு ஏற்பட்டு விட்டதா என்மேல் அவருக்கு" தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள் லாவண்யா. எழுத்துக்குச் சொந்தக்காரரை விழிகளில் சிறைபிடித்தாள். மூடிய விழிகளில் முழு உருவமும் காட்சியளிக்க , "இப்படி விலகும் அளவிற்கு நான் செய்த குற்றமென்ன ஜெயா" என்று இரண்டு வருடமாய் காதலித்து இப்போது திருமணதேதி வரை கொண்டு வந்த ஜெயராமனிடம் மானசீகமாக கேட்டாள்.

எப்போதும் எதையும் வெளிப்படையாக பேசுபவள் லாவண்யா. அதே வேளையில் பயங்கரமாக கிண்டலடிக்கவும் செய்வாள். எத்தனையோ தடவை அவளின் அளவிற்கு மீறிய கிண்டல் சம்பந்தப்பட்டவர்களின் தன்மானத்தை சீண்டும் அளவிற்கு இருப்பதாகவும், அதனால் அவர்கள் மனம் வேதனைப்பட்டு தன்னிடம் சொன்னதாகவும் அவள் சகோதரி அவளைக் கண்டித்திருக்கின்றாள், சமயத்தில் திட்டியும் இருக்கின்றாள். ஆனால் அப்போதெல்லாம் லாவண்யா " சின்ன விஷயத்துக்கெல்லாம் இப்படி மனம் சங்கடப் படுபவர்கள் பெரிதாக ஏதாவது பிரச்சனை வந்தால் எப்படி தாங்குவாங்க அக்கா" என தன் செயலை தற்காத்து பேசுவாள். அந்த பழக்கம் இன்றுவரை தொடர்ந்து, வருங்கால கணவரிடமும் அவள் விளையாட்டுத்தனத்தை சற்று அதிகமாகவே காட்டி விட்டாள்.

அவளைப் போல் வெளிப்படையாக பேசுபவன் இல்லை ஜெயராமன். எதையும் நன்றாக கேட்டுக்கொள்வான் மறுப்பு சொல்லாமல். அதன் காரியகாரணங்களை ஆணிவேர் வரை அலசி ஆராய்ந்த பிறகே முடிவெடுப்பான். அவனின் அந்த பொறுப்பான சிந்தனையில் அவளுக்கு அதீத பெருமை உண்டு. எல்லோரிடமும் மென்மையாக முடிவெடுக்கும் அவன் அவளிடம் மட்டுமே முரண் படுவான். இது பற்றி அவனே ஒருதடவை அவளிடம் சொல்லியிருக்கின்றான். " நான் கடிந்து பேசுவது என்றால், அது உன்னிடம் மட்டுமே லாவண்யா, என் எல்லா சுகங்களும் உன் மூலமே நிறைவேற்றப்படும் என்ற பட்சத்தில், என் கோபத்தினால் கிடைக்கும் திருப்தியும் உன் ஒருவளால் தான் கிடைக்கின்றது, அதனால் நானே படுங்கோபமாக உன்னை ஏசினாலும், நீ மட்டும் என்னைப் பிரிந்து போய்விடாதே, வெறுங்கூடாய் ஆகிவிடுவேன்" என்று அவன் சொன்னது இன்னமும் காதில் ரீங்காரித்துக் கொண்டிருந்தது. அந்த நம்பிக்கையில் தான் கோபம் குறைந்து வருவான் .. நிச்சயம் வருவான் என்று காத்திருந்தாள். நாட்கள் இரண்டாகி விட்டன. எந்த தகவலும் அவனிடமிருந்து வரவில்லை. துவண்டு போனாள் லாவண்யா.

"ஜெயாக்கண்ணா நான் பேசியது சும்மா விளையாட்டுக்கு என்று உங்களுக்கு தெரியும். உங்கள் ஒழுக்கத்தின் மீது உங்களை விட எனக்கு அதிகம் நம்பிக்கை இருக்கின்றது. இருப்பினும் நான் அப்படி பேசியிருக்க கூடாது தான். அதனால் நீங்கள் காயப்பட்டிருக்கின்றீர்கள் என்று நீங்கள் சொல்லும் வரை சத்தியமாக எனக்கு தெரியாது. எப்போதும் கலாய்ப்பது போல் பேசிவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்க ஜெயா. தயவு தயவு தயவு செய்து மன்னித்து விடுங்க. உங்கள் முன் நிற்கவோ பேசவோ ஏன் பழக கூட அருகதையற்றவள் நான். என் தவறுக்கான தண்டனையை நான் நிச்சயம் அனுபவிக்கனும். அனுபவிப்பேன் நீங்கள் இனி பேசமாட்டேன் என்று சொன்னபின். நீங்கள் சந்தோஷமாக இருங்க. உங்கள் நிம்மதியே எனக்கு நிம்மதி. உடல் நலத்தை பேணுங்கள்."
விறுவிறுவென்று குறுஞ்செய்தியை அலைபேசி வழி அவனுக்கு அனுப்பினாள். செய்தி அனுப்பியாகி விட்டது என்ற தகவல் வந்ததும் மனதில் ஒரு நிம்மதி உணர்வு தோன்ற, அலைபேசியில் சேமித்து வைத்திருந்த அவன் புகைப்படத்தை எடுத்து உற்று நோக்கினாள். மனம் வலித்தது. "நமக்குள் புரிதல் குறைவா? உங்களை நான் காயப் படுத்துவேனா,? அது என் கண்களை நானே குத்திக் கொள்வது போல் ஆகாதா? போதும் கோபம்.. இதற்கு மேல் தாங்கும் திடம் எனக்கில்லையே " என்று புலம்பிக் கொண்டிருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.

தொடரும் பாகம் 2இல்


பெ.மகேஸ்வரி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (23-Mar-18, 8:10 pm)
பார்வை : 230

மேலே