வாலும் காலும்

அவன் அவசர அவசரமாகக் கிளம்பினான் ஆபிசிலிருந்து..

ஒரு அரைமணி நேரம் காட்டுப்பாதையில் பைக்கில் போனால் தான்.. மெயின் பஸ் ஸ்டான்டு போக முடியும். அங்கிருந்து ஒரு மணி நேரம் பஸ் பயணம் வீட்டிற்கு.. அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கு சென்றால் தான்
பஸ் கிடைக்கும்...

இரண்டு மூன்று கிராமங்கள், பலப்பல மயானங்கள், வயல்வெளி, தென்னந்தோப்பு, மண் ரோடு, உடைந்த ஜல்லி ரோடு, நல்ல ரோடு என பாதை மாறி மாறி வரும்..

பத்து நிமிடம் சென்றிருப்பான்.. வண்டிற்கு முன்னாலுள்ள லைட்டின்
கீழ் ஒரு வித்தியாசமான அசைவு கண்ணில் பட்டது... அந்த நேரம் பார்த்து ஒரு போன்கால்..

சட்டென வண்டியை நிறுத்தினான்.. செல்லை அட்டண்ட் செய்து பேச
ஆரம்பித்தபடி அதை கவனித்தான்..

ஒரு நீண்ட வால்.. பேசியவாறே இடைவெளியில் என்னவென்று பார்க்க முயன்றான்.. ம்கூம்... ஒன்றுமே யூகிக்க முடியவில்லை..

செல்போன் பேச்சு முடிந்தது... சுற்றும் முற்றும் பார்த்தான்.. ஒரு
காக்கா குருவி கூட இல்லை.. பயத்துடன் என்ன செய்யலாம் என யோசித்தான்.. பஸ்ஸுக்கான நேரமும் ஆகிக்கொண்டிருந்தது.

பக்கத்தில் தேடி ஒரு கல்லை எடுத்தான்.. குறிபார்த்து அந்த வால் மீது எறிந்தான்.. எப்போதும் போல குறி தப்பியது.. பிறகு இரண்டாவது கல்.. பின் மூன்றாவது.. சரியாக நாலாவது கல்.. அந்த வால் மீது பட்டது.. அது டக்கென
உள்ளே சென்று விட்டது..

ஒன்றுமே புரியவில்லை... யோசித்தான் சிறிது நேரம்... பின் பயத்துடன் வண்டியை ஸ்டார்ட் செய்தான்... சிறிது பின்னால் தள்ளி உட்கார்ந்து ஓட்ட
ஆரம்பித்தான்... ஓட்டியவாறே முன்பக்கம் கவனித்துக் கொண்டே வந்தான்..

வேண்டுமென்றே மேடு, பள்ளம் பார்த்து ஜம்ப் செய்து கொண்டே வண்டியை விரட்டினான்..

வால் மட்டும் மீண்டும் வெளியே தெரிய ஆரம்பித்ததேயொளிய.. என்னவென்று புரியாமலேயே முக்கால்வாசி தூரம் வந்துவிட்டான்..

இப்பொது லேசாக.. இரண்டு கால்களும் தெரிய ஆரம்பித்தன... அப்பாடா.. கால் இருக்குனா அப்ப வேற ஏதோ தான்... பெருமூச்சு விட்டான்...

பின் வேகமெடுத்த வண்டியை, வேக வேகமாக பார்க்கிங்கில் விட்டு விட்டு,
ஓடிச்சென்று கிளம்ப தயாராக இருந்த பஸ்ஸில் ஏறி ஊருக்குச்
சென்றுவிட்டான்...

அடுத்த நாள் காலை வரை அவனது வண்டியை பார்க்கிங்கில் இருந்து
எடுக்கும் வரை அந்த நிகழ்ச்சியை மறந்திருந்தான்...

வண்டியில் சாவி போடும்போது தான் கவனித்தான்.. நேற்று மாலை அவனை பாடாய்ப்படுத்திய வாலும் காலும் ஒரு உருவமெடுத்து "ஓணானா"ய் உட்கார்ந்து
கொண்டு இருந்தது... அட..

அப்ப.. ராத்திரி பூராவும் வண்டியிலேயே இருந்திருக்கு... தண்ணி,
சாப்பாடு எதுவும் இல்லாம... ஒரு வேலை கிளம்பின இடத்துக்கே போக
காத்திருக்கோ... என நினைத்தவாறே.. ஒரு குச்சியை எடுத்து அதனை
அப்புறப்படுத்திவிட்டு.. விசில் அடித்தவாறே வண்டியில் கிளம்பினான்
ஆபிஸுக்கு...

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (24-Mar-18, 7:52 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 166

மேலே