பிரிதலில் ஒரு புரிதல் 2

பிரிதலில் ஒரு புரிதல் 2

பிரிதலில் ஒரு புரிதல்
பாகம் 2

எப்பொழுதும் அதிகாலையிலேயே எழுந்திடும் மகள் இன்று இன்னும் எழுந்திருக்கவில்லையே என்ற ஆச்சர்யம் கலந்த கவலையுடன் மகளை எழுப்பச் சென்றாள் லாவண்யாவின் தாய். மகளை உற்று நோக்குகையில், கண்ணீர் வடிந்து காய்ந்து போன தடயம் தெரிந்தது. கூடவே முகமும் சற்று வீங்கி இருப்பது போல் காட்சி அளித்தது. " என்னாயிற்று, மகள் அழுதிருக்காளே.. " மனம் பதறிப்போனது தாய், " லாவண்யா... லாக்கண்ணு எழுந்திருமா " என அவளைத் தொட்டு எழுப்புகையில் உடல் அனலாய் தகிப்பதை உணர்ந்தாள்.
அடிவயிற்றில் கலக்கமும், மனதினில் பதட்டமுமாய் மீண்டும் அவளை எழுப்பினாள். சிரமப்பட்டு கண்களை திறந்த லாவண்யா பதட்டத்துடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் தாயை வெறுமையுடன் நோக்கினாள். அவள் முகத்தில் சுரத்தேயில்லை. " என்னாச்சு, முகமெல்லாம் வீங்கி இருக்கு. உடம்பு இவ்வளவு காய்ச்சலா இருக்கு, ஏன் அழுதிருக்காய்?" சரமாரியாய் விழும் தாயின் கேள்விக்கு பதிலளிக்காமல், மெல்ல படுக்கையை விட்டு எழுந்தாள் லாவண்யா. உடம்பு தடுமாறியது. விரைந்து வந்து தாங்கிப் பிடித்த தாய், அவளைக் கைதாங்கலாகப் பிடித்து, குளியலறைக்கு அழைத்துச் சென்று முகம் கழுவி வாய் கொப்பளிக்க உதவி செய்தாள். பிறகு டவலை கொடுத்து முகம் துடைக்கச் செய்து, சமையலறைக்கு அழைத்து வந்து, சூடாக ஒரு கிண்ணத்தில் காப்பி கலக்கி குடிக்க வைத்தாள். கூடவே ஒரு தோசையையும் சாப்பிட வைத்து, இரண்டு காய்ச்சல் மருந்தை விழுங்கச் செய்தாள். மறுப்பேதும் சொல்லாமல் நல்ல பிள்ளையாக அம்மாவின் செயல்களுக்கு ஈடு கொடுத்தவள், உடம்பில் கொஞ்சம் தெம்பு வந்ததும் எழுந்து தோட்டத்தில் வந்து அமர்ந்தாள். கூடவே வந்த தாய், அவள் அருகில் அமர்ந்து, தோளை வருடியபடி " என்னம்மா நடந்தது, உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதாவது மன வருத்தமா,..? நீ இரண்டு நாட்களா முகம் சரியில்லாமல் இருந்தே.. நீயாக சொல்வாய் என்று காத்திருந்தேன். ஆனால் சொல்லல. இன்று காய்ச்சல் வரும் அளவிற்கு அழுதிருக்கின்றாய் என்றால், ஏதோ தாங்கமுடியாத ரணம் உன்னை வாட்டி எடுக்கின்றது என்று நன்கு புரிகின்றது. சொல்.. சொல்லம்மா.. அவர் ஏதாவது உன்னைத் திட்டினாரா?" அம்மாவின் அன்பான அரவணைப்பும், அமைதியாக கேட்ட விதமும், லாவண்யாவின் மனதில் அடங்கிக் கிடந்த வேதனைகளை விஷ்வரூபம் எடுக்கவைத்தது. "அம்மா " என்று கதறியவாறு தாயைக் கட்டிப் பிடித்து அழுதாள் லாவண்யா.

" அம்மா"..., சொல்ல ஆரம்பித்ததை தொடங்க முடியாமல் மீண்டும் அழ ஆரம்பித்தாள் லாவண்யா. " என்னம்மா இது.. அதான் நான் இருக்கேன் இல்ல, அழாமல் நடந்ததைச் சொல்" லாவண்யாவின் தாய் ஆதரவாக அவளை அணைத்தபடி பேசினார். " அம்மா, நான் விளையாட்டாக சொன்ன ஒரு வார்த்தை அவர் மனதை ரொம்பவே காயப்படுத்தி விட்டது போலும். அலைபேசியில் பேசும்போதே இவ்வளவு தூரம் என்னை ஏளனமாக பேசியபின் இனி நாம் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.. வைத்து விடு என்று அலைபேசியை நிறுத்திய அவர், பிறகு ... புரிந்து கொள்ளாமல் சேர்ந்திருப்பதை விட பிரிந்திருப்பதே நலம்" என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டார் அம்மா. கேவலுடன் சொன்ன லாவண்யாவை அதிர்ச்சியுடன் பார்த்தார் அவள் தாய். "என்ன காரியம் செய்தாயம்மா.. இன்னும் நான்கு மாதத்தில் திருமணத்தை வைத்துக் கொண்டு இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியை சொல்கிறாயே.. ஐயோ ..! நான் என்ன செய்வேன்..? உன் அப்பாவிடம் என்ன சொல்வேன்.? ஆலோசனைக் கேட்க உன் அக்கா கூட இப்போது அருகில் இல்லையே.? விளையாட்டு வினையாகும் என்று எத்தனை முறை கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் நானும் உன் அக்காவும் உனக்கு அறிவுரை சொல்லியிருக்கோம்.. கேட்டாயா..?" தாய் செய்வதறியாது புலம்புவதைக் கண்ணுற்ற லாவண்யாவுக்கு இன்னும் துக்கம் பீறிட்டுக் கொண்டு வந்தது.

" அம்மா, ஏற்கனவே நொந்து போயிருக்கும் என்னை மேலும் நோகடிக்கின்றீர்களே.. நான் தான் அவரிடம் மன்னிப்பு கேட்டு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டேனே.. அதற்கு பிறகு பலமுறை அழைத்தும் அலைபேசியை அடைத்து வைத்திருக்கின்றாரே, நான் என்ன செய்வேன் எனக் கதறி அழும் லாவண்யாவை பார்த்தவுடன் தான், அவளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய தாமே இப்படி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி இன்னும் சித்ரவதை செய்கிறோமோ என்ற எண்ணம் உதித்திட, ஓடி வந்து மகளை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். " போதும் போதும் லாவண்யா, அழாதே... ஜெயா ஒன்றும் மோசமான மனிதர் அல்ல. உன்னைவிட அனுசரித்துப் போகும் குணம் மாப்பிள்ளை தம்பியிடம் அதிகம் இருக்கின்றது. ஏதோ கோபத்தில் மற்றவர்களின் உணர்வுகளையும் வேதனைகளையும் நீ புரிந்து கொள்ளணும் என்பதற்காக அவர் அப்படி நடந்து கொண்டிருக்கலாம் ஒழிய, உன்னிடம் கோபம் கொண்டு பிரியும் அளவிற்கு அவர் கண்டிப்பாக நடந்து கொள்ளமாட்டார். நீ வேண்டுமென்றால் பார், இன்னும் இரண்டொரு நாட்களில் உன்னைத் தேடி வருவார். அப்படி வரவில்லையென்றால் உனக்காக அம்மா போய் அவரிடம் பேசுகிறேனம்மா.." நிதானமாக மகளின் கூந்தலை வருடியபடி இன்னும் தன் அணைப்பில் இருக்கும் மகளிடம் மென்மையாக கூறினாள் லாவண்யாவின் தாய்.

தாயின் அரவணைப்பும், ஆறுதல் மொழியும் தந்த நிம்மதியில் லாவண்யாவின் கேவல் மெல்ல அடங்கியது. அவளை மெல்ல அணைத்தபடியே உள்ளே அழைத்து வந்து கூடத்தில் நீண்ட கதிரில் படுக்க வைத்துவிட்டு, " மருந்து சாப்பிட்டிருக்க, அப்படியே கொஞ்ச நேரம் தூங்கு, காய்ச்சல் விட்டு விடும். கண்டதையும் நினைக்காமல் உறங்கு.. நான் மதிய சமையலை முடித்து வருகின்றேன். இன்று வேலைக்கு போக வேண்டாம்" என்று அன்புடன் சொல்லிவிட்டு லாவண்யாவின் தாய் சமையலறைக்குச் சென்றார். அம்மா சொன்னது போல் கலங்கும் மனதைச் சாந்தப்படுத்திக் கொண்டே லாவண்யா தூங்கிப்போனாள். சுமார் மூன்று மணி நேரம் களைப்போடு தூங்கிக்கொண்டிருக்கும் லாவண்யாவை அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்துச் செல்வார் லாவண்யாவின் தாய். மகள் மேல் அதீத அன்பு வைத்துள்ள பொறுப்புள்ள, என் தாய் போல் வருமா என்று அடிக்கடி லாவண்யா புகழ் பாடும் உன்னதமான தாய். இவளின் பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்ற சிந்தனையுடன் சமைத்துக் கொண்டிருந்த லாவண்யாவின் தாயை வாசலில் அழைப்பு மணியின் சத்தம் இசையாய் அழைத்தது. "யார் இந்த நேரத்தில்..?" என்ற கேள்விக்குறியுடன் வாசல் நோக்கிச் சென்றார். அழைப்பு மணி சத்தம் கேட்டு லாவண்யாவும் நித்திரை களைந்து எழுந்து உட்கார்ந்தாள்.

தொடரும் பாகம் 3இல்

பெ.மகேஸ்வரி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (24-Mar-18, 11:03 am)
பார்வை : 163

மேலே