உட்கார்ந்து கொள்ளுதடி உன் நினைவுகள் வந்து

சூரியப் பொட்டிட்ட
அதிகாலை வானத்தில்
அலைந்து திரிகின்ற
பறவைகளை பார்க்கும்போதும்...

அந்திமாலை நேரத்தில்
ஆற்றங்கரை ஓரத்தில்
நிலவுக்கும் எனக்குமான
நீண்ட உரையாடலின் போதும்....

ஒரு பள்ளத்தாக்கு
முழுக்க பூப்பூத்து
பக்கத்தில் நான்
நிற்க்கும் போதும்....

சாரல் மழையுடன் கூடிய
சன்னலோர பேருந்து
பயணத்தின் போதும்.....

இரண்டுவயது குழந்தையிடம்
சண்டையிட்டு நான்
தோற்க்கும் போதும்.....

அடைமழையில் நனைந்தபடியே
ஆற்றில் நான்
குளிக்கும் போதும்.....

தலையணையை
துணைவைத்து
தனிமையில் நான்
தூங்கும் போதும்.....

என் கவிதைக்கு
கிடைக்கும் முதல்
பாராட்டின் போதும்.....

எங்கிருந்தாலும் ஓடிவந்து
என்னருகில்
உட்கார்ந்து கொள்ளுதடி
உன் நினைவுகள்.....










எழுதியவர் : பெ வீரா (27-Mar-18, 8:52 pm)
சேர்த்தது : பெ வீரா
பார்வை : 352

மேலே