மொகஞ்சதாரோ

யார் அவள்?
என்னையே உற்றுப்பார்க்கிறவள்..!

ஆண்மகனாய் இருந்தும்
தலை கவிழ்த்துக்கொண்டேன்.

லேசாக தைரியத்தை
வரவழைத்துக்கொண்டு,
மெல்ல தலை தூக்கினேன்...!

ஒரு திண்டின் மேல் நிற்கிறாள்.
இரண்டு பாதமும், பதித்து
திண்ணமாய் நின்று கொண்டிருந்தாள்!

வாழைப்பூ விரல்கள,
கச்சிதமான பல பல நகங்கள்.
விரல் இடுக்கில் என்னை இழுத்து
விழுங்கிக் கொண்டிருந்தது.

கூட்டமாய் திரியும்
பட்டாம்பூச்சிகள் கணுக்காலை,
வளைத்து தொங்கிக் கொண்டிருந்தது
வழு வழு கொலுசுகள்.

அசையாமலிருந்தும்
கிண்கிணி மணி காதினுள்
சதா ஒலித்தபடியே இருந்தது..

பாதம் சுற்றிலும்
வருடி எடுத்த வரி வரி
வளைவுகள்.
ஒவ்வொரு வரியும் என்
வாலிபத்தை வம்பிழுத்துக் கொண்டிருந்தது!

என் புருவத்தை வருடிக்கொண்டே,
கழுத்தை நிமிர்த்தினால்,
இடுப்பில் அணிந்திருக்கும்,
கச்சை கட்டிய பாவாடை,
இறுக்கி பிடித்தும் பிடிக்காமலும்,
தொடை அழகை துதி பாடியது.

உயிரை உருக்கும் பேரழகு,
இப்படியும் ஒரு பெண் இருப்பாளோ?

அடக்க முடியாத ஆவலில்,
சடக்கென்று கண்சிமிட்டி,
இடுப்பை பார்த்துவிட்டேன்?

காய்ந்து போன செம்பருத்தி
சருகுகளான துணியால் போர்த்தி இருந்தது,
இடுப்பழகை மறைக்கவே இல்லை.

பேச்சு மூச்சு,
சட்டென்று நின்று, ஓடியது.

திடீர் அச்சம் பூண்டு,
தலை முழுதும் நிமிர்த்தி பார்த்தேன்.

அந்த மாயா மோகினி,
இன்னும் என்னையே பார்த்துக்
கொண்டிருக்கிறாள்.

ஆடாத தேகம்,
அசையாத கூரான கண்கள்,
மூச்சு விடுவது தெரியாத எடுப்பான மூக்கு,
குவிந்திருந்த இதழ்கள்,
என்னை வாவென்று அழைத்தது.

வாஞ்சையோடு அருகில்
மெல்ல மெல்ல செல்கிறேன்,
யாரேனும் பார்க்கிறார்களா?

இல்லையென உறுதி செய்து,
மிக அருகில் சென்றேன்...

வெட்கத்தாலோ என்னவோ,
என்னை பார்ப்பதை தவிர்த்துவிட்டாள்.

அவள் உடலை உரசும் தூரத்தில் நின்று,
என்னை பிடிக்கிறதா என்றேன்?

பங்குனி மாசக் காற்று,
பச பசவென அடிக்க,
அவள் ஆமென்றது போல்,
தலையிலுருந்த ரோசாப்பூ
தரையில் விழுந்தது.

ஆசை தலைக்கேறி,
இடது கைகை எடுத்து,
அவள் தோள்மீது கொஞ்சம்
சிரமப்பட்டு இட்டேன்,
சுரீரென்று ஏதோ
விரல்களை சுட்டது..!

ஐயோவென்று,
குதித்து விலகினேன்.

இவள் சிலையா?
கோவில் தூணில் வடித்திருக்கும்
சிலையா நீ?

சற்று ஊமையாகி, உரக்க யோசித்தேன்.
ஆம் கற்சிலை தான்!

இருந்தாலும், இத்தனை மணித்துளிகள்,
நிஜத்தில் வாழ்ந்த அனுபவத்தை தந்த,
அந்த சிலையிடம்,
மனம் விட்டு பேச முடிவெடுத்தேன்.

பேச ஆரம்பித்தேன்,
பேசுகிறேன், பேசுகிறேன்...!
அத்தனையும் மறுப்பின்றி கேட்டுக்கொண்டாள்..!
அழகும் அக்கறையும் ஒருத்தியிடத்தில்
கண்டது பிரமிப்பை தந்தது.

வெகு நேரம் பேசினேன்,
உள்ளத்தில் உதித்த எண்ணங்களை,
ஒளிவு மறைவின்றி ஒப்பித்தேன்.

மனசு லேசானது...!

மாலை மங்கி,
இருள் கூட கூட,
பேச்சு குறைந்தது...!
பேரமைதி நிலவிற்று.

நிலாவும் எங்கள் இருவரை
உற்றுப் பார்த்தபடி இருந்தது,
ஏதோ மாதிரியாய் படவே...

கிளம்ப முடிவெடுத்தோம்.

சரி வா என்கிறேன்?
வர மாட்டேன் என்கிறாள்..
சத்தமாய் கூப்பிட கூச்சமாய்
இருக்கவே, அடித்தொண்டையில் வா வா என்றேன்.

விறைப்பாய் எங்கோ பார்த்தபடி நிற்கிறாள்....

நானோ அந்த அந்தி சாயும் வேலையில்
நிர்கதியாய் நிராயுதபாணியாய்,
கண்ணில் நீர் வழிய சிலையாய்
உருமாறி நிற்கிறேன்.............!

எழுதியவர் : கணேஷ்குமார் பாலு (27-Mar-18, 11:10 pm)
பார்வை : 684

மேலே