அமெரிக்கா கொண்டாடும் பேயாட்டம் -------ஹாலோவீன் Halloween

பூசணிக்காய் மகத்துவம் அமெரிக்கா வந்த பின் தான் தெரிகிறது.

சென்னையில், வீடுகளில் திருஷ்டிப் பூசணிக்காய் கட்டித் தொங்க விடுவதைக் கேலியாகப் பார்த்த காலம் உண்டு.
"முப்பதாயிரம் ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத லாரியா, இத்துனூண்டு எலுமிச்சம் பழத்தில் ஓடப் போகுது-ன்னு"
விவேக் கேட்பாரே, அது போலத் தான் வைச்சிக்குங்களேன்.

பூசணிக்காய் சுத்திப் போடுதல், ஆயுத பூஜை பூசணிக்காய்...எல்லாம் பாத்து பாத்து அலுத்துப் போன எனக்கு, இங்கும் பூசணிக்காயா?
ஆமாம். எல்லா வீடுகளிலும் பூசணிக்காய் (பூசணிப்பழம்) கட்டி வைக்கிறார்கள். ஏன்? எதற்கு?

என்ன ஆச்சு இந்த அமெரிக்காவுக்கு-ன்னு கேட்கறீங்களா?
Oct 31 இரவு - பேய்களின் திருவிழா - பேரு ஹாலோவீன் (Halloween).

இன்னாது? பேய்க்கு எல்லாம் திருவிழாவா?...
வாங்க என்னன்னு பாக்கலாம்.

ஸ்காட்லாண்டு மற்றும் ஐரிஷ் மக்கள் கொண்டாடிய இந்த விழா, அவர்களுடன் அப்படியே புலம் பெயர்ந்து, அமெரிக்காவுக்குள்ளும் நுழைந்து விட்டது!
ஆன்மாக்களுக்கும் (All Souls), புனிதர்களுக்கும் (All Saints) கொண்டாடப்பட்ட விழா, இன்று பேய்களின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
All Hallows Eve என்பது Halloween என்றாகி விட்டது.

ஐரிஷ் நாட்டு கெல்ட் இன மக்கள், குளிர் காலம் ஆரம்பிக்கும் முன் ஆவிகள் எல்லாம், பூமிக்கு விஜயம் செய்வதாக நம்பினர்.
உணவுக்கும், இறைச்சிக்கும், உற்சாக பானத்துக்கும் மட்டும் இன்றி, தங்களுக்கு ஆள் எடுக்கவும் அவை பூமிக்கு வருமாம்.

ஆனால் பெரிய பெரிய தீ மூட்டிக் கொண்டாடினால், அவை பயந்து ஓடி விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.
மேலும் மக்கள் எல்லாரும் பேய்களின் உடை அணிந்து கொண்டு, பேய் வேடம் போட்டு, ஊருக்குள் உலாவினர்.


அவர்களைப் பாத்து, 'அட நாம அட்ரெஸ் மாறி நம்ம ஆளுங்க இருக்கும் இடத்துக்கே வந்து விட்டோம் போல; சரி மனிதர்கள் இருக்கும் இடத்துக்குச் செல்லலாம்', என்று பேய்கள் போய்விடும் என்று நம்பினர்.

அறுவடைக் காலம் நெருங்குவதால், சல்லீசாக கொட்டிக் கிடக்கும் பூசணிப் பழங்கள்; அவற்றைத் தோண்டி, ஓட்டை போட்டு, அதன் மேல் கண்டபடி வரைவார்கள்.
பின்னர் அதை ஒரு கூடை போல் ஆக்கி, அதற்குள் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு, ஊர் சுற்ற வேண்டியது தான்!
இப்படித் தீயவைகளை ஏமாற்ற, தீயவர் போல் நடிக்கும் ஒரு விழா உருவாகி விட்டது! :-))

அட்சய திருதியை அன்று அலைமகளை வணங்கி, நமக்கு இருக்கும் செல்வத்தில் சிறிது தானம் செய்ய வேண்டும் என்பது நியதி.
அதை அப்படியே உல்டாவாக்கி, இன்னும் கொஞ்சம் தங்கம் சேர்த்துக் கொள்வது நல்லது என்று நம்ம ஊர் வியாபார காந்தங்களும், மக்கள்ஸும் சேர்ந்து, (ஏ)மாற்றி விட்டார்கள் அல்லவா?

இது நம்மூருக்கு மட்டும் இல்லைங்க, எல்லா ஊருக்கும் பொது தான் போல இருக்கு!
அமெரிக்காவிலும் இதை அப்படியே மாற்றி, குழந்தைகள் உற்சாகமாக கொண்டாடும் விழாவாக மாற்றி விட்டன நிறுவனங்கள்.

இன்றைய ஹாலோவீன் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் ஒரே ரகம் தான்.
பேய், ஆவி, கிழவிகள், பூனை மீசை, தேவதை எனப் பலவாறாக குழந்தைகள் வேடமிட்டுக் கொள்வர்; இதற்கான உடைகளைப் பெற்றோர் வாங்கித் தர வேண்டும்.

வீடுகளையும் பேய் வீடு போல அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். (கெட்டுது போ...ன்னு யாரோ அங்க முணுமுணுக்கறாப் போல இருக்கே?:-)
ஒட்டடை, சிலந்தி வலை, பூசணி, பூனை முகம், ஆந்தை, ஒளி விளக்கு இப்படி பல வழி இருக்கு!

அப்புறம் என்ன, வேடமிட்ட குழந்தைகள் வீடு வீடாய்ப் போய் 'கோவிந்தா' போட வேண்டியது தான். பூசணி உண்டியல் குலுக்க வேண்டியது தான்!
ட்ரிக் ஆர் ட்ரீட் (Trick or Treat?? ) -
என்னை ட்ரீட் செய்கிறாயா இல்லை உன் மேல் ட்ரிக் பண்ணட்டுமா என்று சிறார்கள் கேட்க,
ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள் குழந்தைகளின் பூசணிப் பையில் நிறைய மிட்டாய்களைப் போட்டு ட்ரீட் செய்கிறார்கள்!





உணவு இல்லாத பண்டிகையா?
சோள மிட்டாய் (candy corn), பூசணிப் பிரட் (pumpkin bread), பூசணி அல்வாத் துண்டு (pumpkin pie)...இன்னும் நிறைய!

தண்ணித் தொட்டியில், காசுகளை ஆப்பிளுக்குள் புதைத்து, ஆப்பிள்களை மிதக்க விடும் விளையாட்டும் உண்டு. (Bobbling for Apples)
சிறார்கள் வாயாலேயே ஒடும் (மிதக்கும்) ஆப்பிளைப் பிடிக்கும் விளையாட்டு!
மின்னசோட்டாவில் உள்ள அனோகா நகரம் தான் ஹாலோவீன் கொண்டாட்டங்களின் தலைநகரம். (என்ன குமரன்... கொண்டாடப் போனீங்களா?)சேலம் (அட நம்மூரு...?) , (அட, இது வெட்டிப்பையல் பாலாஜிக்கு பக்கத்து ஊராச்சே), கீன் (நியு ஹாம்ப்ஷையர்), மற்றும் நியுயார்க் நகரங்களிலும் பெரும் கொண்டாட்டங்கள் உண்டு!

அட... டிவியைப் போட்டாக் கூட ஒரே பேய்ப் படமால்ல இருக்கு!
மொத்த ஊரையே இப்பிடி பேய் பிடிச்சு ஆட்டினா, என்ன பண்றது?
யாராச்சும் பேய் ஒட்டறவங்க இருக்கீங்களாப்பா? :-))

ஊரே பூசணி மஞ்சளில் மூழ்கியிருக்க, என்ன நாமளும் கோவிந்தா போடலாம் வாரீகளா?
"பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தனை", கண்களே காணுங்கள்-ன்னு அப்பர் சுவாமிகள் சொல்வார்; அது மாதிரி நம்ம சிவபெருமானுடைய பூத கணங்களின் விழா-ன்னு வேணும்னா நினைச்சிக்குனு ஒரு ரவுண்டு கொண்டாடிட்டாப் போச்சு! என்ன சொல்றீங்க?

சென்னைக்கு அடுத்த முறை போகும் போது அம்மாவிடம் சொல்லி பூசணிக்கா கூட்டும், பூசணிப் பழ அல்வாவும் செய்யச் சொல்லணும்! :-)

மறக்காம அமெரிக்கப் பூசணிக்காய் திருஷ்டி சுத்திப் போடச் சொல்லி
....ய்ப்பா யாருப்பா அது பூசணிக்காய நடுரோட்டுல போட்டு உடைக்கிறது...அதெல்லாம் இங்க allowed இல்ல சொல்லிட்டேன்...
Trick or Treat??.........
அன்பே வா......அருகிலே....!!!


வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

எழுதியவர் : (28-Mar-18, 3:16 am)
பார்வை : 55

மேலே