கொஞ்சி விளையாடும் கோபம்

நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::04-03-18

நன்றி:: கூகிள் இமேஜ்.


=============================
கொஞ்சி விளையாடும் கோபம்..!
=============================


மனதில் நினைவிலாத கனவுகள் நூறாயிரமதில்
..........மங்காத கனவாக மனதில் நீங்காததொன்றாம்.!
எனதருமைக் காதலியைக் காண்ப தென்னாள்
..........என்புருகிப் போனேன்! எண்ணூறு இரவாயின.!
உனதருமைக் கொஞ்சலால்..காரிகை உன்மேல்
..........உன்மத்தம் பிடிக்கும்.! நடுநிசியில் நீவருவாய்.!
எனத்துடித்தே எழுவேன்! இன்புறு மென்மேல்
..........எங்கேயுன்? கொஞ்சி விளையாடும் கோபம்.!



மஞ்சள்பூசி மதிமயக்கு முன்முக வசீகரத்தால்
..........முழுமதியும் வெட்கி வெளிச்சம் தரமறுக்கும்.!
மஞ்சத்தில் கிடக்கும் கடிமலரும் வாடிவிடும்
..........மனமாறும் நிலையில் மறுபடிநீ ஏமாற்றாதே.!
வஞ்சி வருவாளென! வருந்தியயென் விழிகள்
..........வஞ்சியாமல் அவள் விழியை எதிர்நோக்கும்.!
நெஞ்சம் கனக்கிறது! ஏலா இருளில் உந்தன்
.......கொஞ்சி விளையாடும் கோபமதை லேசாக்கும்.!



சேவலும் குயிலும்கூட கூக்குரலில் கூவியது
..........காவலனும் தாழிட்ட கதவைத் தட்டுகின்றான்.!
ஆவலில்லை! அவசரத்தில் எழும் மனமில்லை
..........அவளின்று கனவில் வடிவெடுத்து வரவில்லை.!
பாவமில்லை! பரிதாபமில்லை!...பஞ்சணை கூட
..........‘பூவுலகப் பெண்டிரே இப்படித்தான்’ வினவியது.!
சாவகாசமாய் எழுந்தேன்! சாதகமில்லை..அவள்
..........கொஞ்சி விளையாடும் கோபத்தை ரசிப்பதற்கு.!

===============================================

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (31-Mar-18, 8:42 pm)
பார்வை : 90

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே