அவளின் நாட்குறிப்பிலிருந்து

"அவளின் நாட்குறிப்பிலிருந்து ""

ஒவ்வொரு முறையும் என் தொலைத்தொடர்பை நீ நிராகரிக்கையில்,
துண்டிக்கப்படுவது அலைபேசி தொடர்பு மட்டுமல்ல....
உன்னையே சதா உருப்போட்டுக் கொண்டிருக்கும் பேதையிவளின் எதிர்பார்ப்பும் தான் ....

எல்லைகளைத் தாண்டாமல்,
எதார்த்தங்களை மீறாமல்,
எண்ணியவற்றை நடத்திட எத்தனிக்கையில்,
எள்ளி நகையாடும் உனது வார்த்தைகளில் எனது ஐம்புலன்களும் செயலிழந்துதான் போயின...

தொட்டாச்சிணுங்கி நான் என்று
தெரிந்திருந்த பின்னும்,
என்னைச் சீண்டி உள்ளுக்குள் சந்தோஷப் படும்
உன் புரிதலில்
மெய்யாகவே ரணப்படுகின்றது என் மனம்

துளித்துளியாய் சந்தோஷங்களை என் மேல் தூவிடும் நீ..
அடுத்த நொடியில்
அவசரகதியில் அனைத்தையும் மீட்டுக் கொள்கின்றாய் உன் வார்த்தையின் கூர்மையில் ...

பேரலையில் சிக்கிய ஆளில்லா படகாய் என் வாழ்வு ...
பாறையில் மோதுண்டு சின்னாபின்னமாகிடுமோ என்ற ஐயத்தில் என் மனது ...

என்றாவது ஒரு நாள் எனக்கும் மரணம் வரலாம் ....
அது
அறியாமல் நீ,,,
இல்லாத என்னை
எல்லாவிடமும் தேடுகையில்...
மனம் பரிதாபப்பட்டாலும்,
அருவமாய் இருந்து ரசித்திடும்
என் ஆத்மா.

குரூர ஆசைதான் இது ..
குளிரவைக்கட்டுமே
இன்றையக் கோபத்தினை ..

**********************************

பெ.மகேஸ்வரி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (31-Mar-18, 8:14 pm)
பார்வை : 103

சிறந்த கவிதைகள்

மேலே