தருமபுரியில் அதிர்ச்சி சுகாதார நிலையம் பூட்டிக்கிடந்ததால் மைதானத்தில் குழந்தை பெற்ற பெண் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த உறவினர்கள்
தருமபுரி மாவட்டத்தில் கம்பைநல்லூர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அதிகாலையில் பூட்டிக் கிடந்ததால் பிரசவத்துக்கு வந்த பெண்ணுக்கு வாசலிலேயே குழந்தை பிறந்தது. செல்போன் டார்ச் வெளிச்சத்தில் உறவுப் பெண்கள் பிரசவம் பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (29). கூலித்தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி தீபா (23). இவர்களுக்கு, ஏற்கெனவே ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தீபா மீண்டும் தாய்மையடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான தீபாவுக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டது.
பிரசவ வலி அதிகாமானதை அடுத்து தீபாவை உறவினர்கள் அருகிலுள்ள கம்பைநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டியிருந்தது. மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் இல்லாததால் இரவில் பூட்டிவிட்டுச் சென்றுவிடுவதாக தெரியவந்தது.
அருகில் வேறு எங்கும் சுகாதார நிலையங்களோ மருத்துவமனையோ இல்லாத நிலையில் தீபாவிற்கு பிரசவ வலி அதிகமானது. அலறித்துடித்த அவரை எங்கு அழைத்துச் செல்வது என்று தெரியாமல் உறவினர்கள் கையை பிசைந்துகொண்டு நின்றனர்.
வலி அதிகமானதால், ஆரம்ப சுகாதார வளாக வாசலிலேயே உறவுப் பெண்கள் ஒன்று கூடிப் பிரசவம் பார்க்க முடிவெடுத்தனர். இருள் சூழ்ந்த இடத்தில் விளக்கு வெளிச்சம் கூட இல்லாத நிலையில் உறவினர் ஒருவரின் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்தனர்.
அப்போது தீபாவுக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தாலும் நஞ்சுக்கொடியை அறுக்க யாருக்கும் தெரியாததாலும் வேறு வழி இல்லாததாலும் 108 ஆம்புலன்ஸ் மூலம், தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நஞ்சுக்கொடி அகற்றப்பட்டு தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
பிரசவத்துக்காக வந்த பெண் சுகாதார நிலைய வாசலில் குழந்தை பெற்ற தகவல் காட்டுத்தீயாய் சுற்றுப்பகுதிகளில் பரவியதில் இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் தீபாவின் உறவினர்கள் நேற்று காலை சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். அதை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
பொதுமக்கள் போராட்டம் நடத்துவதை கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த, மொரப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் ஜீவானந்தம், காரிமங்கலம் தாசில்தார் ரேவதி, மற்றும் காவல்துறையினர் பொதுமக்கள் சமாதானப்படுத்தினர்.
கம்பைநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, கூடுதல் மருத்துவர்களை நியமனம் செய்வதுடன், இரவு நேரத்தில் சுகாதார நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து முற்றுகை கைவிடப்பட்டது