வேர்களைத் தேடி ஒரு பயணம்

வரலாற்றைத் தேடிப் பயணிப்பதில் ப்ரியா கிருஷ்ணனுக்கு ஆர்வம் அதிகம். பேராசிரியரும் தொல்லியல் ஆய்வறிஞருமான இவர், ‘தொல்லியல் வழியில் இலக்கியம் காட்டும் கடையெழு வள்ளல்கள்’ எனும் தலைப்பில் யுஜிசியில் முதுமுனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்துவருகிறார். தொல்லியல் சார்ந்த 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தேசிய, சர்வதேச இதழ்களில் எழுதியிருக்கிறார்.

நடுகல், நதிநீரைக் காப்பதற்குப் பழங்காலத்தில் பயன்பட்ட அடைவுத்தூண் எனத் தனது ஆய்வின் மூலமாக இவர் பலவற்றைக் கண்டறிந்திருக்கிறார். மக்களுக்குத் தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அகழாய்வு குறித்து, ‘தொன்மை அறிவோம்’ என்னும் தலைப்பில் யூடியூபில் பதிவிட்டுவருகிறார். நடுகற்கள் பற்றி ஒரு புத்தகத்தை எழுதும் முனைப்பில் இருக்கிறார்.

சங்க இலக்கியமும் தொல்லியலும்

“கல்லூரியில் சங்க இலக்கியம் குறித்துப் பாடம் எடுக்கும்போது அதில் வரும் தொல்லியல் குறித்த செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். தொல்லியல் துறை குறித்து அறிந்துகொள்வதற்காக கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கல்லூரியில் தொல்லியல் குறித்த ‘டிப்ளமா இன் எபிகிராபி’ படித்தேன். அது எனக்குத் தொல்லியல் குறித்த அடிப்படையான தெளிவையும் புரிதலையும் கொடுத்தது” என்று சொல்லும் ப்ரியா, ஏற்காடு சேர்வராயன் மலையில் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டபோது நடுகற்கள், ஈமச் சின்னங்கள் போன்ற புதிய கற்காலக் கருவிகளைக் கண்டெடுத்ததாகச் சொல்கிறார்.

“இப்படி நான் கண்டெடுத்தவை குறித்துத் தஞ்சாவூரில் இருந்து வெளிவரும் ‘ஆவணம்’ என்னும் தொல்லியல் இதழில் பதிவுசெய்தேன். கட்டுரையை எழுதுவதற்கு முன்னர் அந்தந்த இடங்கள் குறித்த தகவல்களை மூத்த தொல்லியல் அறிஞர்களான சாம்பலிங்கம், ராஜகோபால் போன்றவர்களிடம் காண்பித்து, அவற்றின் தொல்லியல் தன்மையை உறுதிசெய்துகொள்வேன்” என்கிறார். தொல்லியல் ஆய்வுக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ப்ரியா பயணித்திருக்கிறார்.



“அகழாய்வுக்கு மட்டுமே அனுமதி தேவை. மேல் பரப்பு ஆய்வுக்குத் தேவையில்லை” என்று சொல்லும் ப்ரியா, புதிய கற்கால கருவிகளைக் கண்டெடுக்கும்போது, அவற்றைத் தொல்லியல் துறைவசம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார்.

பாரம்பரியத்தைப் பாதுகாப்போம்

தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவம் மூலம் மாணவர்களுடன் இணைந்து தொல்லியல் பொருள்களைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். மக்களுக்குத் தொல்லியல் பொருட்களின் மேலிருக்கும் ஆர்வம் அளவுக்கு அதன் மீதான விழிப்புணர்வு இல்லை என்று சொல்லும் ப்ரியா,

‘ஹிஸ்டரி டுடே’, ‘ஜர்னல் ஆஃப் ஹிஸ்டரி’ ஆகிய இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ‘செப்பேடு’ வரலாற்றுக் காலாண்டு இதழின் நெறியாளர் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.

வா.ரவிக்குமார்

எழுதியவர் : (1-Apr-18, 4:58 am)
பார்வை : 37

மேலே