புறக்கணிக்கப்பட்ட முகங்கள்

‘பத்திரிகைகளின் ராணி’ என அழைக்கப்படும் ஐடா பி வெல்ஸ் (Ida B. Wells) அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக நடைபெற்றுவந்த அடக்குமுறைகளைத் தன் எழுத்தால் வெளியுலகுக்குக் கொண்டுவந்தவர்.

மிஷா பத்னானியும் ஜெசிகா பென்னெட்டும் இணைந்து பல்வேறு துறைகளில் முன்னோடிகளாக இருந்த பதினைந்து பெண்களைப் பற்றி ‘ஓவர்லுக்டு’ (Overlooked) என்ற தலைப்பில் நியூயார்க் இதழில் அஞ்சலிக் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர்.

“புகழ்பெற்ற ஒருவரின் மறைவு செய்தியைக்கூட ஊடகத்தின் வழியாக மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் பாலினப் பேதம் பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்ட பெண்களின் வாழ்க்கைக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதே இந்தத் தொகுப்பின் நோக்கம்” என்று ஒரே குரலில் சொல்கின்றனர்.

அந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருந் தவர்களில் சிலரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.



சீனாவின் ஜோன் ஆஃப் ஆர்க் என அழைக்கப்படும் கியு ஜின், சீனாவில் பெண்கள் மீதான அரசு அடக்குமுறைகளுக்கு எதிராகக் களத்தில் வாளேந்திப் போராடியவர். மன்னராட்சிக்கு எதிராகப் போராடியதற்காக 31 வயதில் பொது இடத்தில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.



தன்பால் ஈர்ப்பாளர்களின் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர் மார்ஷா பி ஜான்சன் (Marsha P. Johnson). பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த ஜான்சன் அதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னாளில் தன்பால் ஈர்ப்பாளர்களுக்காகவும் திருநங்கைகள் உரிமைக்காகவும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்தார்.



அமெரிக்கக் கவிஞர்களில் பிரபலமானவர் சில்வியா ப்ளாத் (Sylvia Plath). இரண்டாம் உலகபோர் முடிவடைந்த நிலையில் போர் குறித்த சில்வியாவின் கவிதைகள் அமெரிக்க மக்களை வெகுவாக ஈர்த்தன. முப்பது வயதிலேயே விரக்தியின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார் சில்வியா.




மேரி எவிங் அவுட்டர்பிரிட்ஜ் (Mary Ewing Outerbridge) அமெரிக்காவில் டென்னிஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தியவர். பெண்கள் டென்னிஸ் விளையாடுவது தவறான செயல் எனக் கூறப்பட்டுவந்த நிலையில் தைரியமாகப் பெண்களை டென்னிஸ் விளையாட ஊக்குவித்தவர்.




20-ம் நூற்றாண்டின் மத்தியில் ஒளிப்படக் கலைஞர்கள் அரசியல்வாதிகளையும் மாடல்களையும் படம் எடுப்பதில் பரபரப்பாக இருக்க, அமெரிக்காவைச் சேர்ந்த டயான் அர்பஸ் (Diane Arbus) தன் கேமராவை எளிய மக்களை நோக்கித் திருப்பினார். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கஸ் கலைஞர்கள், நோயாளிகள் எனப் பலதரப்பட்ட மக்களை டயான் புகைப்படம் எடுத்துள்ளார்.


- தொகுப்பு: அன்பு

எழுதியவர் : (1-Apr-18, 5:12 am)
பார்வை : 17

சிறந்த கட்டுரைகள்

மேலே