அடக்கம் என்னும் அரும்பணி
இருக்கும்போது மட்டுமல்லாமல் இறந்த பிறகும் அல்லல்படுகிறவர்கள் நம் சமூகத்தில் உண்டு. அப்படி இறக்கிறவர்களின் உடலை உரிய மரியாதையுடன் எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்வதைத் தன் வாழ்வாகக் கொண்டிருக்கிறார் சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த கலைவாணி.
சாலையிலும் கோயில் படியிலும் பாலத்தின் அடியிலும் சாக்கடைக் கால்வாயிலும் நிழற்குடை ஓரத்திலும் அனாதையாக மரணத்தைத் தழுவுபவர்களைத் தான் நடத்திவரும் ‘லைஃப் டிரஸ்ட்’ அறக்கட்டளை மூலம் அடக்கம் செய்துவருகிறார் கலைவாணி.
மடியும் மனித நேயம்
“கரண்ட் கம்பியில் சிக்கி ஒரு காக்கா செத்துப்போனாகூட மற்ற காக்கைகள் கூட்டமா வந்து வட்டமிட்டுக் கத்தித் தங்களோட சோகத்தைத் தெரிவிக்கும். ஆனா, உறவுகளோடு மலர்ந்து, நண்பர்களோடு கலந்துரையாடி, மனைவி, மக்களோடு வாழ்ந்து, பிறகு ஒரு கட்டத்துல கைவிடப்படும் முதியோர்கள், அனாதைகளாகச் சாகும்போது பலர் கண்டுகொள்வதே இல்லை. என்ன ஏதுன்னு ஒரு நிமிஷம் நின்னுகூடப் பார்க்க முடியாத அளவுக்குதான் இன்னைக்கு மனித நேயம் இருக்கு” என்று வருத்தத்தோடு சொல்கிறார் கலைவாணி.
தான் பார்த்த ஒரு மரணம் ஏற்படுத்திய பாதிப்பு தன் வாழ்க்கைப் போக்கை மடைமாற்றிவிட்டதாக கலைவாணி சொல்கிறார். அதன் பிறகு அனாதைகளை நல்லடக்கம் செய்யும் சேவையை 2009 முதல் செய்யத் தொடங்கினார். இதுவரை ஆதரவற்ற இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை நல்லடக்கம் செய்துள்ளார்.
பாதிப்பு ஏற்படுத்திய மாற்றம்
சென்னையைச் சேர்ந்த பொன்னுசாமியும் (85) வள்ளியம்மாளும் (80) காதலித்து மணம் புரிந்தவர்கள். உற்றார், உறவினர் ஆகியோரின் எதிர்ப்புக் கிளம்ப ஊரைவிட்டு இடம்பெயர்ந்து சேலத்தில் குடியேறினார்கள். சமையல் வேலை செய்து வாழ்க்கை நடத்திவந்தனர். குழந்தை இவர்களுக்கு இல்லாத நிலையில், பொன்னுசாமி இறந்துவிட அடக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை. அது கலைவாணியை மிகவும் பாதித்துவிட்டது. அதனால் பொன்னுசாமியின் உடலுக்கு கலைவாணியே இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்திருக்கிறார். பிறகு வள்ளியம்மாளும் இறந்துவிட அவரையும் மாலை, மரியாதையோடு அடக்கம் செய்தார்.
ஆதரவுக் கரம் நீட்டுவோம்
இந்தச் சம்பவங்கள் நடந்த சில நாட்களில் வலிப்பு ஏற்பட்டு சாக்கடையில் ஒருவர் விழுந்து இறந்துள்ளார். அவரையும் வழக்கம் போல யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏற்கெனவே இருவரது இறுதிப் பயணத்துக்கு உதவிய கலைவாணி, சாக்கடையில் விழுந்தவரையும் அடக்கம் செய்தார். “வீட்டில் வளர்க்கும் விலங்குகள் இறந்தால்கூடக் குழிதோண்டிப் புதைக்கும் மனிதர்கள், தங்களோட கண் முன்னால யாராவது ஆதரவில்லாம இறந்து கிடந்தா கருணையோடு நடப்பதில்லை.
அவர்களை ஏதோ வேற்றுக் கிரகவாசியைப் போல பார்த்துவிட்டு ஓடுகிறார்கள். ஆனால், என்னால அந்த மாதிரி போக முடியறதில்லை. அதனால்தான் நானே இறந்தவரின் உடலுக்குப் புத்தாடை அணிவித்து மாலை மரியாதையுடன் அடக்கம் செய்யத் தொடங்கினேன்” என்கிறார்.
இந்தச் சேவையைத் தான் வசிக்கும் பகுதியோடு மட்டும் நிறுத்திவிடாமல், ஆதரவற்று இறப்பவர்களின் உடல்களை மாநகராட்சி, காவல் துறை அனுமதியுடன் பெற்று அடக்கம் செய்துவருகிறார். “இவ்ளோ பேரை சொந்தக் காசிலேயே அடக்கம் செய்ய எனக்கும் ஆசைதான். ஆனா அந்த அளவுக்கு வருமானம் இல்லையே. அதனால நன்கொடையாளர்கள் அளிக்கும் நிதி உதவியோட கடைகளில் நாங்கள் வைத்திருக்கும் 50 உண்டியல்களில் இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து இதைச் செய்துவருகிறேன்” என்கிறார் கலைவாணி.
முதியவர்களை உறவுகள் கைவிடாமல் அவர்களின் இறுதிக் காலங்களில் உடனிருந்து மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்பதே தன் விருப்பம் எனக் குறிப்பிடுகிறார். “நம்மைச் சுற்றி யாராவது ஆதரவு இல்லாம இருந்தா அவங்களைக் கனிவோடு கவனித்துக்கொள்ள வேண்டும். இப்ப ஒவ்வொரு மாதமும் 15 முதல் 20 ஆதரவற்றோரின் உடல்களை அடக்கம் செய்துவருகிறேன். இந்த நிலை மாறி ஒருவர்கூட ஆதரவற்று இறக்கும் நிலை இல்லாமல் போகிற நாளே சமூகத்தின் பொன் நாள்’’ என்று கனத்த மனதோடு சொல்கிறார் கலைவாணி.