தயைசெய்து என்னை தனித்து விட்டு விடாதீர்கள்

பிரிவின் வலியால் வழிந்துகொண்டிருந்த
யாரோ ஒருவரின் கண்ணீரை தன் கரங்களால்
காற்றை இழுத்து துடைத்துக்கொண்டிருந்ததோர் மரம்

துன்பத்தின் வேதனைதனில் துடித்துக்கொண்டிருந்த
எவரோ ஒருவருக்கு போதனை செய்துக்கொண்டிருந்ததோர் மரம்

மழை நின்றபின்னும் தன் கரங்களில் மழைநீரை ஏந்தி
காற்றோடு கைகோர்த்து தன் மெய் சிலிர்த்து
பிறர் மேனி சிலிர்க்கச்செய்துக்கொண்டிருந்ததோர் மரம்

விபத்தொன்றில் விழுந்து மரித்தவருக்காக
மௌன அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்ததோர் மரம்

நெடுஞ்சாலைக்கும் வண்ணக்குடையாய்
வாழ்ந்துகொண்டிருந்ததோர் மரம்

மனிதம் மரணித்ததைக்கண்டு மழைநாளொன்றில்
மெளனமாக அழுதுகொண்டிருந்ததோர் மரம்

நம் ஆயுளை நீளச்செய்துகொண்டிருந்த
அப்புனிதர்களை இப்போது கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்

நம் ஆா்பாட்டங்களை, ஆரவாரங்களை, அவலத்தை, ஆணவத்தை இப்படி
அனைத்தையுமே அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்த
நெடுஞ்சாலை இப்போது கதறிக்கொண்டிருக்கிறது

"தயை செய்து என்னை தனித்து விட்டு விடாதீர்கள்!"

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (1-Apr-18, 3:43 pm)
பார்வை : 132

மேலே