மாயம் seithai
1

சுஜாதாவை பெண் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் சூர்யா கூறினான்.
சூர்யா- அம்மா நான் முடிவு பண்ணிட்டேன். சுஜாதா தான் எனக்கு மனைவியா வரணும்
செண்பகம்- அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு? நாங்க பேசி முடிவு செஞ்சுட்டு சொல்றோம்
ராமன்- ஆமாம் சூர்யா முதல்ல உன் அம்மாவுக்கு அந்த பொண்ண பிடிக்கணும்
சூர்யா- சுதா நீ என்ன சொல்ற?
சுதா- எனக்கு அண்ணியை ரொம்ப பிடிச்சுருக்கு அண்ணா
செண்பகம்- என்னது அண்ணியா? இங்க பாரு சுதா அவங்க வீட்டில் நகைநட்டு அதிகமா போடுவது போல தெரியல... அதனால கொஞ்சம் யோசிச்சுதான் முடிவு செய்யணும்
சூர்யா- நம்மகிட்ட இல்லாத பணமாமா? அவளோட குணத்தை பாருமா...
செண்பகம்- எனக்கு அதெல்லாம் தேவை இல்லை. ஏங்க... இப்போ இவன் கல்யாணத்திற்கு என்ன அவசரம்? நல்ல பொண்ணா அமையும் போது பார்த்துக்கலாம்
னு சொல்லிட்டு சென்றுவிட்டார்.
சூர்யா கோவத்துடன் வீட்டில் இருந்து வெளியே சென்றான்.
2

சுஜாதாவிற்க்கு இப்போதைக்கு திருமணத்தில் இஷ்டம் இல்லை. அவளது தாய் தகப்பனார் இறந்த பின்னர் அவளை வளர்த்தது அவளது சித்தப்பா, சித்திதான். நல்ல வரன் வந்ததுமே அவளது சித்தியின் கட்டாயத்தின் பேரில்தான் பெண் பார்க்கும் படலத்திற்கே சம்மதித்தாள். மாப்பிள்ளை வீட்டினர் சம்பந்தம் வேண்டாம் என கூறிய அதே நேரத்தில் சுஜாதாவின் அத்தை மகளுக்கு திருமணம் என நிச்சயம் ஆனது. அதனால் சித்தியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அவளது அத்தை மகள் லாவண்யாவின் வீட்டிற்கு சென்றாள்.
கொஞ்ச நாட்களாவது இந்த திருமண பேச்சு இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிதான் அங்கு சென்றாள்.
லாவண்யாவும் சுஜாதாவும் நெருங்கிய தோழிகளை போல இருப்பார்கள். அதனால் லாவண்யாவுடன் இருப்பது சுஜாதாக்கு மிகவும் பிடிக்கும். சுஜாதாக்கு,அத்தையின் வீடு அவளது வீடு போல இருக்கும். அவர்களின் பாசத்திற்காகவே அங்கு செல்வாள்.
3
சுஜாதா வந்து இரண்டு நாட்கள் நன்றாகத்தான் சென்றது. அப்போது ஒரு நாள்,
லாவண்யாவின் பெரியப்பா மகன் வினோத்தும், அத்தை மகள் பூஜாவும் வீட்டிற்கு வந்தனர்.

லாவண்யா சுஜாதாவிற்க்கு மட்டும் கேட்க்கும்படி கூறினாள்
"சுஜா, இது வினோத். எனக்கு அண்ணன். அது பூஜா என் அத்தை பொண்ணு. நம்ம வீட்டுல அடுத்த கல்யாணம் இவர்களுக்குத்தான். நீ இப்போதான முதல் முறையா பார்க்கிற? எதுக்கும் அந்த பூஜா கிட்ட கவனமா இரு. உன்னை எதிரியை பார்ப்பது போல பார்க்கிறாள்"
"எதுக்கு லாவி என்னை இப்படி முறைக்கிறாள்?"
"நீயும் வினோத்திற்கு முறை பொண்ணு தானே... அதனாலதான் இந்த முறைப்பு"
"என்னமோ... சரி வா நாம உன் அறைக்கு போகலாம்"
4
"உன்னை பெண் பார்க்க வந்தார்களே... அப்புறம் என்ன நடந்தது"
சுஜாதாவின் சிரித்த முகம் இப்போது மாறிவிட்டது
"ஏய் என்ன நடந்தது சுஜா?"
"ஒன்னும் இல்லை லாவி.. அதை விடுத்து வேறு ஏதாவது பேசலாம்"
"என்னதான் நடந்தது?உனக்கு மாப்பிள்ளையை பிடிக்கலையா? இல்லை மாப்பிள்ளைக்கு உன்னை பிடிக்கவில்லையோ"

"அதெல்லாம் இல்லை. இரண்டு பேருக்குமே பிடித்துதான் இருந்தது. ஆனால் அவங்க அம்மாதான் வரதட்சணை அதிகமாக கேட்டார்கள்"
னு சொல்லிட்டு இருக்கும் போதே பூஜா, அவளது அண்ணன் சுமன், வினோத் மூவரும் அவர்களது அறைக்குள் வந்தனர்.
5
பூஜா- இது யாரு லாவி புதுசா இருக்கு
லாவண்யா- என் மாமா பொண்ணு சுஜாதா.
சுஜாதா- நீங்க பேசிட்டு இருங்க நான் வந்துவிடுகிறேன்
னு எழுந்தவளை, தடுத்து நிறுத்திய பூஜா
" எங்க ஓடுற? என் கூட பேச பயமா? இல்லை பணக்காரங்க இருக்குற இடத்தில் இருக்க கூச்சமா?"
லாவண்யா-வார்த்தையை அளந்து பேசு பூஜா
வினோத்- ஏன் பூஜா மேல கோவப்படுற?
பூஜா-நான் உண்மையை தானே சொன்னேன்
லாவண்யா- வாய மூடுரியா
னு கோவமாக கத்தவும்
வினோத்- வா பூஜா நாம வெளிய போகலாம்
என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்

சுமன்- அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்கிறேன் சுஜா.
சுஜாதா- பரவாயில்லை அண்ணா
னு சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
6
அன்று மாலை சுஜாதாவும் லாவண்யாவும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது பூஜாவும் வினோத்தும் அவர்கள் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தனர்.
பூஜா- சுஜா நீ ஊருக்கு போய்ட்டு கல்யாணத்துக்கு வந்தால் போதுமே... ஏன் இங்கேயே இருக்கிறாய்?
லாவண்யா- உன்னை போல பிரச்சனை செய்யாமல் அமைதியா இருக்குற சுஜாவை எதுக்கு வம்புக்கு இழுக்கிறாய்?
பூஜா- அது சரி... அன்னக்காவடிங்கன்னு சொல்றது சரியாதான் இருக்கிறது. சாப்பாட்டுக்கு வந்து உட்கார்ந்துவிடுகிறார்கள்... வக்கில்லாதவர்கள்.
என சுஜாவை பார்த்துக்கொண்டே கூறினாள்.

சுஜா- நாங்க வக்கில்லாதவங்கதான். நீங்கதான் பெரிய பணக்காரர்களாச்சே... நீங்க எதுக்கு இப்போவே இங்க வந்து இருக்கணும்? இப்போலாம் பணம் இருந்தாலும்...
அவள் சொல்லி முடிக்கவில்லை அதற்குள் 'படீர்...' என சத்தம் கேட்க திரும்பிப்பார்த்தால் வினோத் அருகில் இருந்த நாற்காலியை தள்ளிவிட்டிருந்தான்
வினோத்- அளவுக்கு அதிகமா பேசற? இதுவே கடைசியா இருக்கட்டும்
னு சொல்லிவிட்டு பூஜாவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
வினோத் இப்படி பேசியது சுஜாவிற்கு சுருக்கென்று இருந்தது.
7
அன்றிலிருந்து தினமும் எத்தாவதொறு காரணத்திற்காக பூஜா சுஜாவை வம்பிலுப்பதும் அதற்கு சுஜா பதில் ஏதாவது பேசினால் வினோத் அவளை திட்டுவதும் தொடர்ந்துகொண்டே சென்றது.
அப்படித்தான் ஒரு நாள் வீட்டில், கடையில் இருந்து கொண்டு வரப்பட்ட புடவைகளை அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கும் போது,
சுஜா- லாவி இந்த புடவையை நான் எடுத்துக்கட்டுமா?
லாவண்யா- சூப்பரா இருக்கு உனக்கு. எடுத்துக்கோ
சுஜா அதை லாவண்யாவின் பெற்றோரிடம் காண்பித்துவிட்டு தனக்கென எடுத்துக்கொண்டாள்.
இதை கவனித்த பூஜா,
பூஜா- சுஜா கையில வச்சுருக்குற புடவைதான் எனக்கு வேணும் வினோத்
வினோத்- அதுவா
பூஜா- ஆமாம்
வினோத்- சரி இரு வரேன்
என்று கூறிவிட்டு சுஜாதா அருகில் சென்று அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் கூறினான்.
"விலையை பார்த்தியா?8900. உன் தகுதிக்கு இந்த புடவையை வாங்க முடியுமா? ஓசியில் கிடைத்தால் இப்படியா வாங்குறது? அசிங்கமா இல்லையா?"
என கேட்டுவிட சுஜாவிற்கு தூக்கிவாரி போட்டது. அவ்வளவு விலை கொடுத்து அவளால் அதை வாங்க முடியாது. அவள் விலையை பார்க்கவில்லை. பார்த்திருந்தாள் வாங்கி இருக்கவேமாட்டாள். ஆனால் அதை இப்படி முகத்தில் அடிப்பது போலவா சொல்ல வேண்டும்? என எண்ணிக்கொண்டே
"லாவி இந்த புடவை எனக்கு பிடிக்கவில்லை" என கூறிக்கொண்டே இருப்பதிலேயே விலை குறைந்த புடவையை எடுத்துக்கொண்டாள்.
லாவண்யாவிற்கு சுஜாதா ஏன் இப்படி செய்கிறாள் என புரியவில்லை.
8
அடுத்த நாள் அனைவரும் தாங்கள் எடுத்த புடவையை உடுத்தி இருந்த போது சுஜாதா மட்டும் மிகவும் எளிமையாக தெரிந்தாள். பூஜாவின் புடவையை அனைவரும் புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்க சுஜாதாவிற்க்கு அதை பார்த்த போது முகமே வாடிவிட்டது. இதை கவனித்த வினோத்தின் மனது என்றும் இல்லாத அதிசயமாக இன்று ஏனோ சுஜாவிற்காக இரக்கப்பட்டது.
அடுத்த நாளே மற்றுமொரு சம்பவம் நடந்தது. வீட்டில் அனைவரும் குடும்ப புகைப்படம் எடுக்க அதில் சுஜாதா இருக்க கூடாது என்பதற்காகவே பூஜா அவளுக்கு பல வேலைகளைக்கொடுத்தாள். இறுதியில் அவள் எண்ணியது போலவே சுஜாதா இல்லாத குடும்ப புகைப்படத்தை எடுத்தனர். இந்த விஷயத்தில் லாவண்யாவும் சுஜா மீது கோவப்பட்டாள்.
"பூஜா சொல்றத நீ எதுக்கு செய்யனும்? அறிவு இல்ல உனக்கு?" என்று சுஜாவைத்தான் திட்டினாள்.
9
இப்படியே சென்றுகொண்டு இருக்கும் போது ஒரு நாள் அனைவரும் லாவண்யாவின் தோட்டத்திற்கு சென்றிருந்தனர். அப்போது பேசிக்கொண்டு இருக்கும் போது
பூஜா- வினோத் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த சுஜாவை கொஞ்ச நாட்களுக்கு முன்னர் பெண் பார்க்க வந்தாங்கலாம். இவளோட முகத்தை பார்த்து விட்டு அந்த மாப்பிள்ளை பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடியே போய்ட்டானாம்...
னு சொல்லி சிரிக்கவும் சுஜாதாவிற்க்கு அவமானமாக இருந்தது.
லாவண்யா- தெரியாம பேசாத. வரதட்சணை காரணமாகத்தான் சம்பந்தம் விட்டுபோய்விட்டது
பூஜா- சும்மா ஏதாவது சொல்லாதே... இவளை உண்மையாகவே மாப்பிள்ளைக்கு பிடித்திருந்தாள் வரதட்சணை எல்லாம் ஒரு விஷயமே இல்லையே
னு சொன்ன போதுதான் சுஜாதாவிற்க்கும் அந்த எண்ணம் வந்தது. அவள் அது பற்றி யோசித்துக்கொண்டு இருக்கும் போதே பேச்சு திசை திரும்பியது. தங்களின் பெற்றோர்களை பற்றி அவர்கள் பேசிக்கொண்டு இருக்க சுஜாதாவிற்க்கு அவளது பெற்றோர் நியாபகம் வந்துவிட்டது
எந்த நிமிடமும் அழுத்துவிடும் மனநிலமையில் அவள் இருக்கும் போதுதான் ,
பூஜா- சுஜா உன் அப்பா அம்மாக்குன்னு சொந்தமா ஒரு வீடாவது இருக்கா? இல்ல அதுக்கு கூட வக்கில்லையா?
அவ்வளவுதான் உடனே சுஜா அழுதுவிட்டாள். அவளது கண்களில் வந்த கண்ணீரை பார்த்து வினோத் பதரிவிட்டான். இதுவரை அவள் எதற்கும் அழுததில்லையே என அவன் எண்ணிக்கொண்டு இருக்கும் போதே
லாவண்யா- போதும் நிறுத்துங்க... எவ்வளவு தான் கஷ்டப்படுத்துவீர்கள்? அப்பா அம்மா இல்லாத பொண்ணு அவள்...
பூஜா- அப்படினா அனாதையா நீ?
னு கேட்டதுமே அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அழுதுகொண்டே அங்கிருந்து ஓடிவிட்டாள் சுஜாதா.
வினோத்- நிறுத்து பூஜா... அறிவுகெட்ட தனமா பேசுற?
முதல் முறையாக பூஜாவை எதிர்த்து பேசுகிறான் வினோத். அவனுக்கு சுஜாதா அழுததை பார்க்க முடியவில்லை. அவள் அழுததும் இவன் மனது ஏனோ வலிக்க தொடங்கியது.
10
லாவண்யா சுஜாவை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தாள். அதே நேரம் வினோத்தும் பூஜாவும் வீட்டிற்கு வந்தனர்.

வீட்டிற்குள் நுழைந்த சுஜா, அங்கு சூர்யாவைக்கண்டாள். அவனைப்பார்த்ததுமே சற்றே அதிர்ச்சி அடைந்தவள், சூர்யாவும் அவளைப்பார்த்து அதிர்ச்சியில் இருக்கிறான் என்பதை அவனது பார்வையில் இருந்து புரிந்து கொண்டாள்.
லாவண்யா- என்ன சூர்யா இப்போதான் வீட்டிற்கு வழி தெரிந்ததா
என்று காதில் விழுந்ததும் தான் சுதாரித்தான்.
சூர்யா- எப்படி இருக்க சுஜா
சுஜா- ம்ம்..நீங்க?
சூர்யா- நானும்தான்
லாவண்யா- உங்க இரண்டு பேருக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்கா
சுஜா- ம்ம்ம்... நீங்க எப்படி இங்க?
லாவண்யா- ஏய்! நான் ஒருத்தி இருக்கேன்பா...
அதற்குள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்துவிட சுஜா லாவண்யாவை அழைத்துக்கொண்டு அவளது அறைக்குச்சென்றாள்.
11
"உனக்கு எப்படி சூர்யாவை தெரியும்?"
"சூர்யா உனக்கு என்ன வேணும்?"
"வினோத்தோட சித்திப்பையன் தான் சூர்யா."
"ஓ..."
"எப்படி தெரியும்னு சொல்லு... அவன் உன்னை பார்க்கும் பார்வையில் காதல் ரசம் சொட்டுதே"

"கிலிக்குது"
"என்ன டி?"
"அந்த காதல் ரசதைத்தான் அன்னைக்கே பார்த்தனே"
என்று விரக்தியாக கூறவும்,
"இரு... அப்படினா உன்னை பெண் பார்க்க வந்தது சூர்யாதானா?"
"ம்ம்..."
"அடப்பாவி... சொல்லவே இல்லை..."
"அதை பற்றி பேசாதே"
"உன்னை அவன் பார்க்கும் பார்வையில் காதல் தெரியுதே... "
"அதை பற்றி பேசாதே"
"உன்னையே வேண்டாம்னு சொல்லிட்டானா? அவனை உண்டு இல்லைனு செய்றேன்"
"அவங்க அம்மா சொன்னதுக்கு இவர் என்ன செய்ய முடியும்?"
"பாருடா இதுக்கு பெயர்தான் பாசமா?"
"அதெல்லம் ஒன்னும் இல்லை"
னு சொல்லிட்டு வெளியே வந்துவிட்டாள்.
12
அன்று மதியான அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது
சுமன்- நாளைக்கு எல்லோரும் போய் கல்யாணத்திற்கு ட்ரெஸ் எடுத்துட்டு வந்துடுங்க
பூஜா- எதுக்கு எல்லோரும்? எப்படியும் லாவிவரமாட்டாள். அவளுக்கு துணையா சுஜாவும் வீட்டிலேயே இருக்கட்டும். அதுவும் இல்லாமல் அவளுக்கு ட்ரெஸ் செலெக்க்ஷன் பற்றி என்ன தெரியும்?
சூர்யா- அண்ணி... சுஜா நல்லாவே ட்ரெஸ் செலக்ட் செய்வாள். இல்லைனால் நான் அவளுக்கு உதவுகிறேன். நீங்க அதை பற்றி கவலை படவேண்டும்.
என்று கூறியதும் வினோத் பூஜா இருவருக்குமே ஒரே நேரத்தில் கோவம் தலைக்கு ஏறியது.
"இவன் யார் சுஜாக்கு ட்ரெஸ் செலக்ட் செய்றதுக்கு?" என்று வினோத் மனதுக்குள் நினைத்துக்கொண்டே இருக்கும் போது பூஜாவிற்கு சுஜா மீது இன்னும் கோவம் வந்தது.
13
சூர்யா அன்று மாலை சுஜாவை தனியாக சந்தித்த போது,
"சுஜா நான் சொல்றத கொஞ்சம் கேள்"
"நாம பேச எதுவும் இல்லை" னு சொல்லிட்டு இருக்கும் போதே பூஜா வந்துவிட்டாள்.
பூஜா- சூர்யா உன்னை வினோத் கூப்பிடுறான்
சூர்யா- நீ போ. நான் வரேன்
பூஜா- நான் சுஜா கூட பேசணும் நீ போ
னு சொல்லவும் சூர்யா சென்றுவிட்டான்.
பூஜா- இங்க பாரு சுஜா சூர்யா கூட இனிமேல் நீ பேசக்கூடாது. அப்படி பேசறது பார்த்தேன் நடக்குறதே வேற... ஜாக்கிரதை
என எச்சரித்துவிட்டு சென்றாள்.
"இந்த பூஜாக்கு வேற வேலையே கிடையாது"
என எண்ணிக்கொண்டு சுஜா சென்றுவிட்டாள்.
வீட்டிற்கு வந்ததும் லாவண்யா சுஜாவை தனியாக அழைத்து சென்று பேசினாள்.
"என்னதான் நடந்தது சுஜா. சூர்யா உன்கூட பேச முயற்சி செய்றதைப் பார்த்தால், அவன் உன்னை வேண்டாம்னு சொன்னதுபோல இல்லையே. உண்மையை சொல்லு. என்னதான் நடந்தது"
என ரொம்பவே வலிருத்திக் கேட்கவும் சுஜா அவளை பெண் பார்க்க வந்த போது நடந்த சம்பவத்தை விவரித்தாள்.
14
அன்று சுஜாவை அவளது சித்தி மல்லி அலங்கரித்துக்கொண்டு இருந்தார்.
"எதுக்கு சித்தி இவ்வளவு மேக்கப்... எனக்கு சங்கடமா இருக்கு"
"வாய மூடு... எப்படியாவது இந்த சம்பந்தம் முடியனும். அப்போதான் உன்னை கட்டிக்கொடுத்து அனுப்பிவைக்க முடியும். அடுத்து என் பொண்ணு ஒருத்தி இருக்குறது மனசுல இருக்கட்டும்."
என சொல்லிக்கொண்டே அலங்காரத்தை முடிக்கவும் மாப்பிள்ளை வீட்டினர் வரவும் சரியாக இருந்தது. அனைவர் முன்னிலையிலும் நமஸ்கரித்துவிட்டு சுஜா எழும்போது இனிமையான ஆண் குரல் ஒன்று கேட்டது
"நீங்க யாரும் தப்பா நினைக்கலைனா நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?"
என்று கூறிய சூர்யாவை அப்போதான் சுஜாதா நிமிர்ந்து பார்த்தாள்.
மல்லி- சொல்லுங்க தம்பி
சூர்யா- உங்க பெண்ணை இந்த அலங்காரதைலாம் கலச்சுட்டு வீட்டில் எப்படி இருப்பார்களோ அதே போல அழைத்து வர முடியுமா
மல்லி- எதுக்கு?
சூர்யா- காரணமாகத்தான்.
மல்லி சுஜாவை பார்க்க அவள் சென்று முகத்தை கழுவி பொட்டு வைத்துக்கொண்டு வழக்கமாக உடுத்தும் சுடிதாரில் ஒன்றை அணிந்து வந்தாள்.
சூர்யா- பாருங்க உங்க பெண்ணை.... தேவதை மாதிரி இருக்காங்க... எதுக்கு மேக்கப் போட்டு அவங்க அழகை கெடுக்கணும்
என்று கூறிய சூர்யாவின் கண்ணை பார்த்தவளுக்கு சற்றே நிம்மதி வந்தது.
15
பிறகு சூர்யா சுஜாவிடம் தனியாக பேச வேண்டும் என்றும் வெளியே அழைத்து சென்று பேசப் போவதாகவும் சொல்லி சுஜாவை தனது காரில் அழைத்துக்கொண்டு சென்றான்.
"இது வரைக்கும் எத்தனை முறை உன்னை பெண் பார்த்திருக்கிறார்கள்"
"நீங்கதான் முதல் முறை வந்துருக்கிங்க... வேறு யாரும் வந்ததில்லை"
"நல்லது. யாருதான் இந்த முறையை கொண்டு வந்ததோ தெரியல... இப்படி முன்ன பின்ன தெரியாதவங்க முன்னாடி நிற்க சங்கடமா இருக்கும்னு தோணலையா? பெத்தவங்க முன்னாடியே பெண்ணை சயிட்(sight) அடிக்குறதுக்கு பெயர்தான் பெண் பார்ப்பது..."
என எரிச்சல் பட்டுக்கொண்டே சொன்னான்.
"இங்க பக்கத்துல கோவில் எங்க இருக்கு"
"பக்கத்து தெருவில்தான்"
"அங்க போய் பேசலாமா"
"ம்ம்."
"இன்னைக்கு நீ கோவிலுக்கு வரலாம்தானே?"
"ம்ம்."
16
அடுத்த 5 நிமிடத்தில் கோவிலில் இருந்தனர். சாமிதரிசனம் செய்துவிட்டு அங்கு இருந்த மண்டபத்தின் படிக்கட்டில் அமர்ந்தனர்.
"சுஜா நாம இரண்டு பேருமே இப்போ நம்ம வாழ்க்கையின் முக்கியமான ஒரு முடிவை எடுக்கும் கட்டத்தில் இருக்கின்றோம். அதனால எல்லா விஷயத்தையும் பேசி தெளிவா தெரிஞ்சுக்கலாம். அவசரப்பட்டு முடிவெக்க வேண்டாம். எனக்கு உன்னை பார்த்ததுமே பிடிச்சுருச்சு. ஆனால் வெறும் வெளி தோற்றதைவைத்து மட்டும் முடிவெடுக்க கூடாது. அதனால முதல்ல நான் என்னை பற்றி சொல்லுறேன். பிறகு நீ சொல்லு. பிடிச்சுருந்தா மேற்கொண்டு பேசலாம்"
"ம்ம்ம்..சரி..."
"நான் சூர்யா... சொல்லிக்குற அளவுக்கு பெருசா எதையும் சாதிக்கவில்லை. அப்பா பிசினஸ் செஞ்சுட்டு இருந்தாரு. இப்போ அவருக்கு உடம்பு கொஞ்சம் சரி இல்லை. அதனால் நான் பொறுப்பேர்த்துக்கொண்டேன். அது வரைக்கும் அனுபவதுக்காக வெளியே 2 கம்பனியில் வேலை செய்தேன். இந்த வரனை கொண்டு வந்ததே அப்பா தான். அவருக்கு உன்னை எனக்கு திருமணம் செய்து வைக்க ஆசை. ஆனால் நம் வீட்டை பொறுத்த வரைக்கும் (நம் வீடு என அவன் சொன்னது சுஜாவிற்கு பிடித்திருந்தது) அம்மா எடுப்பதுதான் முடிவு. அம்மா ரொம்ப பாசமானவங்க. அதே நேரத்தில் பிடிவாதம் உள்ளவர்களும்கூட. அவங்களுக்கு மட்டும் உன்னை பிடித்துவிட்டால் அவங்க பெண்ணாகவே உன்னை பார்த்துப்பார்கள். கடைசியா சுதா. என் செல்ல தங்கை. அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்
எனக்கு பிடிச்சதெல்லம் அவளுக்கும் பிடிக்கும். ஸ்வீட் பிசாசு அவள். அப்புறம் கெட்ட பழக்கம்னு இது வரைக்கும் எதுவும் இல்லை
அவ்ளோதான் நான். அம்மாக்கும் எனக்கும் தான் இனிமேல் உன்னை பிடிக்கணும்."
என அவன் சொல்லி முடித்தான்.
"அப்படினா என்னை இதுவரைக்கும் பிடிக்கவில்லையா?"
"அப்படி இல்லை. பிடிச்சதாலதான் கோவிலுக்கு கூட்டிட்டு வந்தேன். ஆனால் உன் மனசுல என்ன இருக்குனு தெரியலையே."
"அதுக்கு முன்னாடி என்னை பற்றி நான் சொல்லிவிடுறேன். எனக்கு 3 வயசு இருக்கும் போதே ஒரு விபத்துல என் அம்மா அப்பா இரண்டு பேருமே தவரிட்டாங்க. அதுக்கு பிறகு என்னை பார்த்து கொண்டது என் சித்தி சித்தப்பா தான். நான் என் அப்பா அம்மாக்கு ஒரே பொண்ணு. எனக்கு என் அப்பா அம்மா கூடவே சேர்ந்து நானும் அப்போவே போயிருக்கலாம்னு அடிக்கடி தோணும். முக்கியமா மத்த பிள்ளைங்களை அவங்க அப்பா அம்மா பார்த்துக்கும்போது தோணும். சித்தி வீட்டுல என்னை வளர்த்தார்கள். அவ்ளோதான். அவங்க பொண்ணுதான் அவங்களுக்கு முக்கியம். அவங்க பக்கமும் நியாயம் இருக்குதுதானே. ஆனால் என் சொந்தகாரர்களும் சுத்தி இருக்குறவங்களும் என்னை அனாதைன்னு சொல்லும் போது எனக்குள்ள ஏற்படுற வலி கொஞ்ச நாள்ல வெறியா மாறிடுச்சு. அவங்க என்னை பாரத்து பிரம்மிக்கணும்னு நினைச்சேன். நல்லா படிச்சேன். 10,12 இரண்டிலுமே மாவட்டத்திலேயே முதல் மாணவியாக வந்தேன். எல்லா விளையாட்டு போட்டி, பேச்சு போட்டு, நடனம்னு எதையுமே விட்டு வைக்காம கலந்துகிட்டேன். வெற்றியும் பெற்றேன். ஆனால் அது எதுவுமே எனக்கு பெருசா தெரியல. இதெல்லாம் நடக்கும் போதுதான் அந்த மாதிரி பேச்சுக்கள் அதிகமாகிடுச்சு. என் மேல பரிதாபாபட்டவங்க தான் அதிகமா இருந்தாங்க. எனக்கு அது சுத்தமா பிடிக்கல.... "
என்று கூறி சற்று நேரம் இடைவெளி விட்டு பேசினாள்
"இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமானு தெரியல. ஆனால் தெரிந்திருப்பது அவசியம். அதனால சொன்னேன்"
சுஜா தனது கண்ணில் தேங்கி நின்ற கண்ணீருடன் சூர்யாவை பார்த்தாள். அவன் மெல்ல அவளது கையை பற்றிய வண்ணம்,
"சுஜா... இப்போ உன் கண்ணுல இருந்து வெளிவர தயாராக இருக்குற கண்ணீர் என்னைக்குமே வராத மாதிரி பார்த்துக்க வேண்டியதுதான் என் வேலை. உனக்கு ஒரு நல்ல அம்மா அப்பாவா இருக்க என் அம்மா அப்பாவாலதான் முடியும். எனக்கு உன் மேல இருக்குறது பரிதாபம் இல்லை... எப்போ உன்னை பார்த்தனோ அப்போவே நீதான் என் மனைவினு முடிவு செய்துவிட்டேன். எங்கே இதை முன்னாடியே சொன்னால் தப்பா நினைப்பியோனுதான் சொல்லல... உனக்கு சம்மதம்னா சொல்லு இப்போவே அம்மாகிட்ட பேசி நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்கிறேன். இவ்ளோ நேரம் நீ என் கையை தட்டு விடாத்தைப் பார்த்தால் உனக்கு கல்யாணத்துல சம்மதம்னு நினைக்குறேன்... அம்மாகிட்ட பேசவா?"
என அவன் கெஞ்சும் குரலில் கேட்க சுஜாவும் "சரி" என்றாள்

17
சூர்யாவிடம் இருந்து நல்ல செய்தி வரும் என காத்திருந்த சுஜாவிற்கு கிடைத்த தகவல் மாப்பிள்ளை வீட்டினர் சம்பந்தம் வேண்டாம் என கூறிவிட்டனர் என்பதே. ஏற்கனவே உடைந்து இருந்த சுஜாதா இப்போது மொத்தமாக உடைந்து விட்டாள்.
லாவண்யா- சரி நீ கவலை படாத.. உனக்கு ஏற்றவன் கண்டிப்பா வருவான். இந்த விஷயம் யாருக்கும் தெரியவேண்டும்.
சுஜா - ம்ம்ம்
அன்று மாலை சுஜாவை தனியாக சந்தித்த வினோத்
"இங்க பாரு சுஜா சூர்யா ஏதாவது விளையாட்டுக்கு பேசிட்டு இருப்பான். நீ அதை நினைத்து கனவுல இருக்காதே... சூர்யா எங்களைவிட பணக்காரன். அதனால அவன் தகுதிக்கு ஏற்றது போலத்தான் சித்தி பொண்ணு பார்ப்பாங்க... நீ தேவை இல்லாம ஆசையை வளர்த்துக்காதே"
என்று சற்றே மிரட்டும் குரலில் எச்சரித்துவிட்டு சென்றான்.

"இவருக்கு வேற வேலையே இருக்காதா?எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுட்டு இருக்காரு" என எண்ணிக்கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டாள்.
18
அடுத்த நாள் சூர்யாவும் சுஜாவும் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்த வினோத் கோவமுற்றான். அன்று மறுமுறை சுஜாவிடம் தனியாக பேச வாய்ப்பு கிடைத்தபோது
"சுஜா நான் உன்கிட்ட இப்போ ஒரு உண்மையை சொல்லணும். சூர்யாவோட அம்மா ஏற்கனவே அவனுக்கு ஒரு பெண்ணை முடிவு செய்துவிட்டார்கள். அவங்களோட உயிர் தோழி உடைய பெண்ணை தான் சூர்யாக்கு கல்யாணம் செய்து வைக்கணும்னு இருக்காங்க. சித்திக்கு மட்டும் நீயும் சூர்யாவும் பழகுவது தெரிந்தால் அவ்வளவு தான். அவங்க என்ன வேணும்னாலும் செய்வாங்க... உன்னை சும்மா விடமாட்டங்க சுஜா... தயவை செய்து நான் சொல்றத கேளு சுஜாமா... அவனை மறந்து விடு... உன்னை யாராவது ஏதாவது சொன்னால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது"
"இது என்ன எப்போதும் இல்லாத புது அக்கறை?"
"புதுசாலாம் இல்லை, எப்போதுமே இருக்கறதுதான். அதனாலதான் சொல்றேன்"
"இதையே நான் சொன்னால்... பூஜா கூட நீங்க பழக கூடாதுனு நான் சொன்னா செய்வீர்களா?"
"பூஜாவும் நானும்..."
"போதும். சொல்லித்தான் தெரியனும்னு இல்லை. அதைத்தான் பார்க்கிறேனே"
என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்
19
அடுத்த நாள் சூர்யாவின் அம்மா லாவண்யா வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு சுஜாவை கண்டு முதலில் அதிர்ச்சி அடைந்தவர், அவளிடம் பேசினார்.
"நீ இங்க என்னமா செய்ற?"
"லாவண்யா என்னோட அத்தை பொண்ணு தான்"
"ஓஹோ... எங்க உன் அம்மா வரலையா?"
"எனக்குத்தான் அம்மா அப்பா இல்லையே ஆண்ட்டி"
"என்னமா சொல்ற? அப்படினா மல்லி?"
"அவங்க என் சித்தி"
"முக ஜாடை வேறு மாதிரி இருக்கேன்னு சந்தேகப்பட்டேன்.."
"ஓ..."
"உன் அம்மா பெயர் என்ன?"
"எதுக்கு ஆண்ட்டி?"

னு கேட்கும் போதே
வினோத்- சித்தி அவள் சின்ன பொண்ணு. ஏதாவது சொல்லிடாதீங்க...
செண்பா- எனக்கு தெரியும். நீ சொல்லு சுஜாதா
சுஜா- காந்திமதி
செண்பா- கா...காந்திமதியா? அப்படினா உன் அப்பா பெயர் தமிழ்செல்வனா?
சுஜா- ஆமாம். அது எப்படி உங்களுக்கு தெரியும்
சூர்யா- என்னமா நடக்குது இங்க
செண்பா- சூர்யா என் தோழியோட பெண்ணைத்தான் நீ கல்யாணம் செய்யணும்னு சொன்னனே.. அது காந்திமதியோட பெண்ணைத்தான் டா. இதனை வருஷமா நான் தேடிட்டு இருந்தது சுஜாவைத்தான்... வந்த வரனை எல்லாம் நான் தட்டிகளித்தது சுஜாவை உனக்கு திருமணம் செய்து வைக்கத்தான். இது தெரியாம நானே உங்க கல்யாணத்தை நிறுத்திடனே... இனிமேலும் தாமதிக்க கூடாது... லாவண்யா திருமணம் முடிந்ததும் உங்க திருமணத்தை நடத்த வேண்டும்
என அவர் கூறவும் அனைவருக்கும் வியப்பாக இருந்தது. அதில் இருவருக்கு மட்டும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
ஒன்று வினோத்.
ஏன் என்றால் அவன் சுஜாவை காதலித்துக்கொண்டு இருந்தான். அதை அவன் உணர்ந்த சமயம் சூர்யா வந்துவிட்டான். அதனால் சுஜாவிடம் அதை தெரியப்படுத்தாமல் இருந்தான். ஆனால் ஏற்கனவே சுஜா சூர்யாவை திருமணம் செய்ய சம்மதித்து இருப்பாள் என அவன் நினைக்கவே இல்லை.
மற்றொரு ஆள், சுஜா தான். ஏன் என்றால் அவள் சூர்யாவை திருமணம் செய்ய சம்மதித்ததற்கு காரணமே தனக்கு ஒரு குடும்பம் கிடைக்க போகிறது என்ற ஆசையில் தான். ஆனால் வினோத்தை அவள் பார்த்ததில் இருந்து அவள் அவனை காதலிக்க தொடங்கிவிட்டாள். பூஜாவை அவன் திருமணம் செய்ய போகிறான் என்பது அவளுக்கு அடிக்கடி மனதில் வந்து போகும் இருப்பினும் அவள் வினோத்தை விரும்பிக்கொண்டு தான் இருந்தாள். இப்போது செண்பகம் இப்படி சொல்லவும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள்.
20

அடுத்து நடந்த அனைத்தும் கனவுபோலவே இருந்தது. லாவண்யாவின் திருமணத்தன்றே சுஜாக்கும் சூர்யாக்கும் நிச்சயம் என முடிவு செய்யப்பட்டது.
வீட்டில் திருமணக்கலைகட்ட தொடங்கியது. இப்படியாக திருமணத்திற்கு 2 நாட்களுக்கு முன்னர் இரவு, சுஜா காற்று வாங்க மாடிக்கு சென்றாள். அங்கு அவளுக்கு முன்பே வினோத் நின்றுகொண்டு இருந்தான்.
"என்ன சுஜா இங்க"
"சும்மா காற்று வாங்க..."
"பனிக்காத்து உடம்புக்கு ஆகாது.. இன்னும் 2 நாள்ல உனக்கு நிச்சயம் வேறு நடக்க போகிறது. அதனால உள்ளே போ"
என கூறியவனின் வார்த்தையில் வலி இருப்பது சுஜாக்கு தென்பட்டது. ஆனால் அது தனது பிரம்மை என எண்ணி பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
லாவண்யாவின் திருமணத்தன்று சுஜா, வினோத் இருவருக்குமே வேதனை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே சென்றது. சரியாக திருமணம் முடிந்து நிச்சயத்தை நடத்த ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கும் போது சுஜா தனது அறையில் அழுதுகொண்டு இருந்தாள். தனது பெற்றோரை நினைத்துக்கொண்டு இருந்தாள்
"அம்மா நீங்க உயிரோட இருந்திருந்தா நான் இவ்வளவு வேதனை பட்டிருக்க மாட்டேன்... என் விருப்பத்தை நீயாவது கேட்டிருபியேமா... " என்று அவள் அழுது கொண்டு இருந்த போது அவளை அழைத்து செல்ல சுதா வந்தாள். வேறு வழி இன்றி சுஜாவும் அவளுடன் சென்றாள். அங்கு அவளுக்கென போடப்பட்டு இருந்த இருக்கையில் அமரந்தவள் அப்போதுதான் மணமகன் இருக்கையில் வினோத் இருப்பதை கண்டாள்.
நடப்பது புரியாமல் அவள் விழிக்கவும்
"சுஜா... உன்னை சந்தோசமாக பார்த்துப்பேன் என்று உன் அம்மாக்கு வாக்கு கொடுத்தேன்... உன் சந்தோசம் வினோத்திடம் தான் இருக்கிறது என்று சூர்யா கண்டறிந்து கூறினான். என் பையன் ஆசையை விட உன் சந்தோசம் தான் முக்கியம்னு தோணுச்சு அதனாலதான் உனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க இந்த ஏற்பாடு"
என செண்பகம் கூறவும், சுஜா குழப்பத்துடன் வினோத்தை பார்த்தாள்
"இன்ப அதிர்ச்சி உனக்கு மட்டும் இல்லை. எனக்கும் தான்"
என கூறி அவன் சிரிக்கவும்
"அப்படினா பூஜா...."
"பூஜாவும் நானும் காதலிக்கறதா நீங்க தப்பா புரிஞ்சுருக்கிங்க... அவள் எனக்கு நல்ல தோழி அவ்வளவு தான்..."
னு அவன் சொன்ன போதுதான் சுஜாக்கு முகத்தில் சந்தோஷமே பரவியது.
செண்பகம் வடிவில் தனது அன்னையைக்கண்டாள் சுஜா. தனது அம்மா இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் என்று அவளுக்கு தோன்றியது.
சுஜா சூர்யாவிற்கு நன்றி தெரிவிக்கவும்
"நான்தான் சொன்னனே... உன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்னு... சுஜா நான் வந்த அன்னைக்கே தெரிஞ்சுக்கிட்டேன் நீயும் வினோத்தும் விரும்பரிங்கன்னு. அதை பற்றி உன்னிடம் பேச வந்தேன் ஆனால் நீ வேறு ஏதோ நினைத்துக்கொண்டு பேசவே இல்லை. எப்படியோ நீ சந்தோசமா இருந்தா போதும்"
என அவன் கூறியது வினோத் சுஜாதா இருவருக்கும் நிறைவைத்தந்தது.
அடுத்த 2 மாதத்தில் சுஜாதா வினோத் திருமணம் பெரியோர்களால் நடத்திவைக்கப்பட்டது.

சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
