பெண்மை

பெண்மை

சம்பவம் 1


மகளிர் தினத்தை முன்னிட்டு அந்த பெண்கள் உயர்நிலை பள்ளியில் சிறப்பு உரை நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அங்கு தனது பேச்சுத்திரனை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தார் ஒரு பிரபலமான கட்சியின் தலைவர் துங்கபத்திரன்

"பெண் என்பவள் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் என்று ஆண்கள் உணர வேண்டும். பாரதி முதல் பாலச்சந்தர் வரை அனைவருமே பெண்களின் சிறப்பை பல வகைகளில் உணர்த்தி வந்தனர். பாரதி சொன்னது போல் இன்றைய பெண்கள் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாக திகழ்கின்றனர்...."
இவ்வாறு பெண்மையின் சிறப்பை 45 நிமிடங்கள் அவர் பேசிமுடிக்கவும் அவையில் பலத்த கரகோஷம் எழுந்தது.


சம்பவம் 2

அந்த மிகப்பெரிய குணச்சித்திர நடிகரின் அறையில் காத்துக்கொண்டு இருந்தார் பிரபல இயக்குனர் சங்கமன். அந்த நடிகர் வந்ததும் தங்களின் பொதுவான நல விசாரிப்புகளுக்குப் பின்னர் தான் வந்த விஷயத்தை கூறினார் இயக்குனர்.

"சார் இந்த முறை வித்தியாசமான படம் ஒன்றை எடுக்கப்போகிறேன். நீங்கள் அதில் நடிகையின் அப்பாவாக நடித்துக்கொடுக்க வேண்டும். உங்களை தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய முடியாது"

"கதை என்னனு சொல்லுங்க.. பிடிச்சுருந்தா பண்ணலாம்"

"சரி சார். கதையில் நாயகனே கிடையாது. இது முழுக்க முழுக்க பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து எடுத்த படம்."
னு ஆரம்பித்து முழு கதையை விளக்கினார்.

" கதை பிரமாதம். பெண்கள் எவ்வளவு முக்கியமானவர்கள்னு ரொம்பவே அழகா கதையில் சொல்லிவிட்டீர்கள். அதிலும் பெண்களின் கற்புக்கு பங்கம் வந்தால் அது ஆண்களுக்கு மிக பெரிய தலைகுனிவு னு எல்லோரும் உணரும் விதமா இருக்கு. நிச்சயமா நான் இதில் நடிக்கிறேன்"

னு சொன்னதும் சங்கமன் சந்தோசத்துடன் கிளம்பினான்.


சம்பவம் 3

அந்த மகளிர் சங்கத்தின் தலைவி அவசரமாக சங்கத்திற்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த அவரது மகள்
"அம்மா எனக்கு 10,000 பணம் வேண்டும்"

"எதுக்கு அவ்வளவு பணம்?"

"நண்பர்கள் கூட டூர் போறேன். வர 2 நாள் ஆகும்"

"சரி"னு பணத்தை எடுத்து கொடுத்து அனுப்பினார்.
இதை கவனித்துக் கொண்டு இருந்த அவரது கணவன்
"என்னடி அவள் தான் டூர் போறதா சொல்றானா நீயும் எங்க போறாள்? யாருடன் செல்கிறாள்? பெண்கள் மட்டுமே? ஆண்களும் வருகிறார்களா?னு எதுவுமே விசாரிக்காம பணத்தை கொடுத்து விடுறே?"

"ஏன் கேட்கணும்? பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து பழகுங்க... எங்களை பார்த்துக்கொள்ள எங்களுக்கு நன்றாக தெரியும்... எங்களை அடிமை போல நடத்தாதீர்கள். எங்கள் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்க கூடாது பெண்களின் நடத்தையை மதிப்பிட கடவுளுக்கு கூட உரிமை இல்லை" என்று ஆவேசமாக கூறிவிட்டு சங்கத்திற்கு கிளம்பினார்.


சம்பவம் 4

"வைஷாலி உன்னை எந்த பையனோ காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாக சொன்னாயே... இன்று என்னுடன் வா. அவனை எனக்கு அடையாளம் காட்டு"

"அண்ணா பிரச்சனை வேண்டாம்ணா"

"அதெல்லாம் இல்லை. அவனுக்கு சொல்ற விதத்தில் சொல்லி புரியவைக்கிறேன். பெண்களை நிம்மதியாக இருக்க விடமாட்டார்களா?சரி வா என்னுடன்" என்று கூறி தங்கையை அழைத்துக்கொண்டு சென்ற தன் மகன் ரவியை பார்த்து பூரித்துப்போனாள் அவனது தாய்.

சம்பவம் 1 தொடர்ச்சி

தனது வீட்டிற்குள் துங்கபத்திரன் நுழைந்த போதே ஒரே கூச்சலாக இருந்தது. சத்தம் போட்டுக்கொண்டு இருந்தது அவனது மகன் தான்

"ஏன் டா கத்திட்டு இருக்கே?"

"கல்யாணத்துக்கு போடுறதா சொன்ன 200 பவுன் ல 100 தான் போட்டாங்க இவள் வீட்டில். மீதி100 பவுனே இன்னும் வரவில்லை அதற்குள் இவள் கருதரித்துவிட்டாள்." என மனைவியை முறைத்தபடி பேசினான் அவன்.

"இதுக்கு எதுக்கு கோவமா இருக்கே... முதல்ல இரண்டு பேரும் மருத்துவமனைக்கு செல்லுங்கள். பிறகு கருவை களையுங்கள்"

"மாமா.. " என அவளது மருமகள் அளறிவிட...

" கவலை படாதமா... ஒன்னும் ஆகாது... அந்த மீதி 100 பவுன் எப்போ உங்க வீட்டில் போடுகிறார்களோ அப்போ குழந்தையை பெத்துக்கோ.." னு சொல்லிட்டே தனது அறைக்கு வந்தவர்

"வரதட்சணையை கொடுக்க வக்கு இல்லை இந்த லட்சணத்தில் குழந்தை ஒரு கேடா? அடியே தெய்வானை நான் வீட்டுக்கு வந்து எவ்ளோ நேரம் ஆகிவிட்டது... சீக்கிரம் குடிக்க தண்ணி கொண்டு வாடி கழுதை.." னு தனது மனைவியை திட்டிக்கொண்டே கட்டிலில் அமர்ந்தார்.


சம்பவம் 2 தொடர்ச்சி

தனது அழுவலகத்திற்குள் நுழைந்த இயக்குனர் சங்கமன் தனது காரியதரிசியை(PA) அழைத்தார்.

"சென்ற வேலை என்னாச்சு சார்"

"அவர் நடிக்க சரினு சொல்லிவிட்டார்"
னு மகிழ்ச்சியாக கூறிக்கொண்டு இருக்கும் போது

" சார் உங்க கதையோட நாயகி கதாபாத்திரத்திற்கு நடிக்க வந்த வேணிங்கர பெண்ணே நல்லா நடித்ததே. ஏன் அந்த பெண்ணை விட்டுவிட்டு சரியாவே நடிக்க வராத இன்னொரு பெண்ணை தேர்வு செய்தீர்கள்"

"அடேய் அந்த வேணிக்கு நடிக்க மட்டும் தான் வந்தது. அது நமக்கு பிரயோஜனம் இல்லை. சினிமாக்கு வரும் போது ஒரு சில இடங்களில் சில விஷயத்தை அனுசரித்து நடக்கணும். அது புரியாம அந்த வேணி கோவப்பட்டு கத்த ஆரம்பித்துவிட்டாள். அதனாலதான் அவளை நடிக்க வைக்கவில்லை. ஆனால் இப்போ நடிக்க போகிற பெண் அனுசரணையாக இருக்கிறாள்" என சிரிக்க அவனது காரியதரிசியும் அவனுடன் சேர்ந்து சிரித்தான்.


சம்பவம் 3 தொடர்ச்சி

மகளிர் சங்கத்தில் அமர்ந்து எதையோ தீவிரமாக எழுதிக்கொண்டு இருந்த மகளிர் சங்க தலைவியை நோக்கி அவளது தோழி வந்தாள்

" ச்ச... எப்படித்தான் இப்படி எல்லாம் முடியுதோ"

"என்ன விஷயம். வரும் போதே புலம்பிக்கொண்டே வருகிறாய்?"

"எதிர்த்த வீட்டு சுலோச்சனா இருக்கா பாரு அவள் செய்வது சுத்தமாக பிடிக்கவே இல்லை"

"சுலோச்சனாவா ? இந்த முறை அவள் என்ன செய்தாள்?"

"3 நாள்... ஆம்பள பசங்க கூட வெளிய தங்கிட்டு வந்துருக்கா... அதையும் அவள் அம்மா என்னிடம் வெட்கமே இல்லாமல் சொல்கிறாள்"

"ஐயையோ... இது என்ன அநியாயமாக இருக்கிறது... ச்சி...இவளும் ஒரு பொண்ணா? பொண்ணுனா அடக்க ஒடுக்கம இருக்க வேண்டாமா? இப்படியா ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது? ஆமா அவள் தனியாகவா அவர்களுடன் சென்றாள்?"

"இல்லை அவளுடன் இன்னும் இரண்டு பெண்களும் சென்றார்களாம்"

"வெட்கங்கெட்ட குடும்பம். இந்த மாதிரி பொண்ணுங்களை இந்த இடத்தில் அனுமதிக்கவே கூடாது. நான் அவள் இருக்கும் அபார்ட்மெண்ட் செகிரேட்டரி இடம் இது பற்றி பேசுகிறேன்"
என்று கூறிக்கொண்டே இருக்கும் போது அவளது மகளின் குறுஞ்செய்தி வந்தது

'அம்மா நான், மணி, ஈஸ்வர், வருண், பூஜா எல்லோரும் எனது காரை எடுத்துக்கொண்டு ஊட்டி செல்கிறோம்.'

'ஜாக்கிரதையாக சென்று வாருங்கள். பணம் வேண்டும் என்றாள் சொல்' என பதிலுக்கு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு சுலோச்சனாவை பற்றி தனது தோழியிடம் குறை பேச தொடங்கினாள்.


சம்பவம் 4 தொடர்ச்சி

ஒரு வாரத்திற்கு பிறகு, தொலைக்காட்சியில் செய்தி ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்தது. அதில்

'10 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளியை போலீசார் இன்று மதியம் கைது செய்தனர். அவர் அந்த குழந்தையின் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞர் என்பதும், அவர் பெயர் ரவி என்பதும் தெரியவந்துள்ளது. போலீஸார் விசாரித்ததில் குற்றவாளியும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்....'

இதை பார்த்த ரவியின் தாய் தனது மகன் ரவியை நினைத்து கோபத்தில் கொந்தளித்துக்கொண்டு இருந்தார்.

தூரத்தில் எங்கோ

' 5 வயது பிஞ்சுப்பெண்ணை
நசுக்கும் காமுகன் இங்குண்டு...
அரை குறை ஆடை காரணமா?
அந்த சிசுவையும் சேலையில் மூடனுமா?

தன் மனக்கவலை உன்னிடம் புகுத்தும் தந்திர உலகம் இது கவனி
ஆணுக்கு தாய்ப்பால் கொடுத்திடும் காம்பில்
உனக்கு கள்ளிப்பால் கசிந்திடும் கண்மணி....'
என்ற பாடல் ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்தது.

எழுதியவர் : anu (4-Apr-18, 7:49 am)
Tanglish : penmai
பார்வை : 569

மேலே