அவனும் நானும்-அத்தியாயம்-02

....அவனும் நானும்....

அத்தியாயம் : 02

மூன்று தளங்களைக் கொண்ட அந்த விளம்பர நிறுவனத்தின் முன்னே வந்து நின்ற கறுப்பு வண்ணக் காரிலிருந்து இறங்கினாள் கீர்த்தனா...சேலையில் அழகோவியமாய் மிளிர்ந்தவள்,தலையினைக் கொண்டையிட்டிருந்தாள்...அவளின் இருபத்தேழு வயதிற்குச் சற்றும் பொருத்தமின்றி அவளது முகத்தினில் ஓர்வித தீவிரம் குடிகொண்டிருந்தது...

வேக நடையோடு எதிரில் வந்து வணக்கம் வைத்த அனைவருக்கும் சிறு தலையசைப்பை பதிலுக்கு வழங்கியவாறே உள் நுழைந்தவள்.. அவளுக்கான அறையினுள் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டாள்...அவளைத் தொடர்ந்து பின்னாலேயே வந்து சேர்ந்தாள்...அவளின் தனிப்பட்ட காரியதரிசி சத்தியா...

"குட் மோர்னிங் மேடம்.."

"வெரி குட் மோர்னிங் தியா...இன்னைக்கு என்னோட ஈவ்னிங் ப்ரோகிராம்ஸ் எல்லாத்தையும் கான்சல் பண்ணிடுங்க...அதை எல்லாத்தையும் வாற புதன்கிழமைக்கும்,வியாழக்கிழமைக்கும் மாத்திடுங்க..."

"ஓகே மேடம்...அப்புறம் வானவில் பத்திரிகையில் இருந்து உங்களைப் பேட்டி எடுக்குறதுக்காக டைம் கேட்டிட்டே இருக்காங்க..."

"நான்தான் யாருக்குமே பேட்டி கொடுக்குறதில்லைன்னு உங்களுக்குத் தெரியுமே தியா...அதை அவங்ககிட்டையும் தெளிவா சொல்லிட வேண்டியதுதானே..."

"நான் சொன்னேன் மேடம்...ஆனால் அவங்க தொடர்ந்தும் முயற்சி பண்ணிட்டே இருக்காங்க...வருடா வருடம் அரசோட பெண் சாதனையாளர் விருதினை வின் பண்றவங்களை கடந்த பத்து வருடங்களாய் அவங்கதான் பேட்டி கண்டு வருகிறார்களாம்...இந்த வருடம் அதை நீங்க வின் பண்ணியிருக்கிறதால கண்டிப்பா உங்க பேட்டி அவசியம் வேணும்னு சொல்லுறாங்க.."

"இங்க பாருங்க தியா...எதனாலையும் எதுக்காகவும் நான் யாருக்குமே பேட்டி கொடுக்குறதாயில்லை...சில முடிவுகளை என்னால யாருக்காகவுமே மாத்திக்க முடியாது...இதை எப்படிச்யாச்சும் நீங்களே தீர்த்து முடிச்சிடுங்க...இதுக்கப்புறமும் இது என்னோட காதுக்கு வரக்கூடாது...புரிஞ்சுதா...??.."

"புரிஞ்சுது மேடம்...நான் பார்த்துக்குறேன்..."

"ம்ம்...சரி தியா...அப்புறம் எவர்கிறீன் கம்பனியோட நாம போட்ட ஒப்பந்தத்துக்கான பேப்பர்ஸ் தயார் பண்ணிட்டீங்களா...??.."

"தயார் பண்ணிட்டிருக்கேன் மேடம்...இன்னும் ஐந்து நிமிடத்தில அந்த பைல் உங்க மேசையில இருக்கும்..."

"ம்ம் சரி தியா...இப்போ நீங்க போகலாம்.."

அவளது உத்தரவில் அறையைவிட்டு வெளியேறியவளுக்கு கீர்த்தனா ஒரு புரியாத புதிராகத்தான் தெரிந்தாள்...கடந்த மூன்று வருடங்களாய் அவளிடம் அவள் காரியதரிசியாகப் பணி புரிகிறாள்....இருந்தும் அவளால் அவளை பல சந்தர்ப்பங்களில் புரிந்து கொள்ளவே முடிவதில்லை...

அவள் தன்னிடம் பணி புரியும் ஊழியர்களிடம் குரலை உயர்த்தி அதிகாரத் தொனியில் கட்டளையிட்டு வேலை வாங்கும் ரகமும்மில்லை...அதற்காக அவர்களிடம் சிநேகத்தோடு உறவாடுபவளுமில்லை....ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு விதமாக நடிக்கத் தெரியாதவள்...யாருக்காகவுமே தன் சுயத்தினை மாற்றிக் கொள்ளவும் விரும்பாதவள்...எந்த வேறுபாடுமின்றி அனைவரிடமுமே ஒரே மாதிரியாகவே பழகும் அவளின் குணமும்,எந்த வேலையாக இருந்தாலுமே அதை திறன்படச் செய்து முடிக்கும் அவளது திறமையும்தான் ஐந்து வருடங்களிற்கு முன் சரிவிலிருந்த இந்த விளம்பர நிறுவனத்தை ஒரே வருடத்திலேயே தூக்கி நிறுத்த உதவியது எனலாம்...

அவளது தந்தை ராகவனால் உருவாக்கப்பட்டதுதான் இந்த விளம்பர நிறுவனம்..தனியாளாகவே அதை திறன்பட நிர்வகித்து வந்தவர்...தொழிலில் திடீர் நஷ்டம் ஏற்படவும் நிலைகுலைந்து போய்விட்டார்..சரிந்து போன நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான ஓர் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்காக மனைவியையும் அழைத்துக் கொண்டு வெளியூர் நோக்கிச் சென்றவர்,அப்படியே மனைவியையும் உடன் அழைத்துக் கோண்டு மேலிடத்திற்கு பயணமாகிவிட்டார்...

திடீரென்று நிகழ்ந்த அந்த கார் விபத்தில் அவளின் தந்தை,தாய் இருவருமே அதே இடத்திலேயே உயிரிழந்து போக..இடைப்பட்ட அந்த வயதில் என்ன செய்வதென்று புரியாது குழம்பி நின்றாள்...அப்போது அவளுக்கு இருந்த ஒரே ஆதரவென்றால் அவளது அண்ணன் அஸ்வின்னும்,அவளின் நெருங்கிய நண்பன் ஆனந்தும் மட்டுமே...

அஸ்வின் அப்போதுதான் பொறியியல் பிரிவில் இறுதி வருடம் படித்துக் கொண்டிருந்தான்...அவனுக்கும் அன்றைய நிலையில் என்ன செய்வதென்றே தெரிந்திருக்கவில்லை...முடிந்தவரையில் தங்கைக்கு ஆறுதலாக இருந்தவனால்,தொழிலில் ஏற்பட்ட இழப்பினை எப்படி ஈடுகட்டுவதென்பது புரியவேயில்லை...பெற்றோர்களின் இழப்பு ஒருபுறம் தொழிலின் நஷ்டம் இன்னொருபுறமென்று அவர்களிருவருக்கும் கடவுள் ஒரே நேரத்திலேயே கஸ்டங்களை அள்ளிக் கொடுத்தார்...

கீர்த்தனாவும் அப்போது பொறியியல் பிரிவினில்தான் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தாள்...அண்ணன் தங்கை இருவருக்குமே விளம்பர உலகினைப்பற்றிய அறிவோ அனுபவமோ அன்றைய நிலையில் சிறிதும் இருக்கவில்லை...என்ன செய்வதென்று இருவருமே தவித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு
உதவிக்கரம் நீட்டியவன்தான் ஆனந்..உதவிக்கரம் என்பதை விடவும் அவன் செலுத்திய நன்றிக்கடன் என்று சொல்வதே உகந்தது...

ஆனந்தின் தாயும்,கீர்த்தனாவின் தாயும் பால்ய வயதுச் சிநேகிதிகள்...அதனாலேயே ஆனந்திற்கும் கீர்த்தனாவிற்குமிடையில் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நட்பு வேரூன்றிக் கொண்டது...ஆனந் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவன்...பதினைந்து வயதில் தாயையும் இழந்து அநாதரவாக நின்றவனை கீர்த்தனாவின் தந்தையும் தாயும்தான் அரவணைத்துக் கொண்டார்கள்...

அஸ்வின்னும் கீர்த்தனாவும் விளம்பரத்துறையில் ஆர்வமற்றவர்களாக இருக்க...ஆனந்திற்கு அந்த துறை மீதான ஆர்வம் அதிகமாகவே காணப்பட்டது...அவனது ஈடுபாட்டினைக் கண்டு கொண்ட ராகவன், அவனைத் தன் செலவிலேயே அமெரிக்காவிற்கு அனுப்பிப் படிக்கவும் வைத்தார்...

அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் அவன் விளம்பரம் தொடர்பான கற்கைநெறியினை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து..தாய்நாட்டிற்குத் திரும்பக் காத்திருந்த நிலையினில்தான்,கீர்த்தனாவின் தந்தை தாயின் இழப்புச் செய்தி அவனைத் தேடிச் சென்றது...

அதுவரையிலும் பண விவகாரம் தொடர்பில் எதுவுமே அறிந்து வைத்திராத அஸ்வின்னும் கீர்த்தனாவும்,அவர்களின் இறப்பின் பின்தான் தந்தை தொழில் தொடர்பில் பலதரப்பட்ட பணப் பிரச்சினைகளில் சிக்கி அவஸ்தைப்பட்டிருக்கிறார் என்பதையே தெரிந்து கொண்டார்கள்...

என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் விளம்பர நிறுவனத்தை விற்றுவிடலாம் என்பதே அஸ்வின்னின் யோசனையாக இருந்தது...காரணம் விளம்பர நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தக் கூடிய ஆற்றல் அன்றைய நிலையில் இருவருக்குமே இருக்கவில்லை...விளம்பர நிறுவனத்தினை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தினையும் வைத்துக் கொண்டு...மீதி வாழ்க்கையை நடத்த தனக்கு கம்பஸ் இன்டெர்வியூவில் கிடைத்த வேலையே போதுமென்று நம்பினான் அவன்...

ஆனால் அவனின் முடிவினை ஏற்றுக் கொள்ள கீர்த்தனாவின் மனம் ஒப்பவில்லை...காரணம் தந்தை ராகவன் எந்தளவிற்கு அவரின் குடும்பத்தை நேசித்தாரோ,அதே அளவிற்கு அவரது விளம்பர நிறுவனத்தையும் நேசித்தார்...அந்த நிறுவனத்தின் ஒரு துளி வளர்ச்சியும் அவரின் உதிரத்தில் உருவானதென்பதை கீர்த்தனா நன்கு அறிவாள்...

ஆதலால் அதை விற்றுவிட அவள் மனம் இடம் கொடுக்கவில்லை...அதே வேளை அவளுக்கு என்ன செய்வதென்பதும் புரியவில்லை...அனைத்துப் பேரிடிகளும் அவளை ஒன்றாகச் சேர்ந்து தாக்கியதில் மொத்தமாகவே நிலைகுலைந்து போயிருந்தவள்...ஓர் முடிவுக்கு வந்தவளாய் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்...அன்று எழுந்தவள்தான் இன்றுவரையிலும் அதே எழுச்சியோடுதான் பயணித்துக் கொண்டிருக்கிறாள்...

"இதை விற்குறதில எனக்கு உடன்பாடில்லை அண்ணா...இது முழுக்க முழுக்க நம்ம அப்பாவோட உழைப்பில உருவானது...அதை எதுக்காகவும் நாம விட்டுக்கொடுத்திடக் கூடாது..."

"நீ சொல்றதெல்லாம் சரிதான்...ஆனால் அதை எடுத்து நடத்துறதுக்கு அது தொடர்பான அறிவும் அனுபவமும் வேணுமே கீர்த்து..."

"அறிவும் அனுபவமும் இருந்தாதான் எதையுமே சாதிக்க முடியுமா அண்ணா...?முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும்...நம்மளால எட்ட முடியாத உயரத்தைக் கூட எட்டிப் பிடிச்சிடலாம்...நான் அப்பாவோட இடத்தில இருந்து இந்த விளம்பர நிறுனத்தை எடுத்து நடத்துறேன் அண்ணா..."

"நீ நினைக்கிற மாதிரி இல்லைமா...விளம்பர உலகம் மிகவும் ஆபத்தானது...அந்த உலகத்தில எதுவுமே தெரியாம நீ மட்டும் தனிச்சு என்ன செய்திட முடியும்..."

"அவளால முடியும் அஸ்வின்...அவளுக்குத் துணையா நான் இருக்கிறேன்..."

சோர்ந்து போயிருந்த கீர்த்தனாவின் மனதிற்கு ஆனந்தின் அந்த வார்த்தைகள் நம்பிக்கையூட்டுபதாக அமைந்தன...

"ஆனால் நீ கூட இப்பதான் படிப்பை முடிச்சிருக்கடா...நம்ம கம்பனி நல்ல நிலைமையில இருந்தா கூட பரவாயில்லை...இப்போ இருக்கிற மோசமான நிலையில இதை எடுத்து உங்களால மட்டும் எப்படி நடத்த முடியும் சொல்லுங்க...??.."

"நீ ஏன்டா நெகடிவ்வா திங் பண்ற...எல்லாம் நல்லதாவே நடக்கும்னு நம்புவோம்...அங்கிள் கூட இதை ஒன்னும் ஒரே நிமிடத்தில இந்த நிலைக்கு கொண்டுவந்துவிடவில்லையே...இதுக்குப் பின்னால் அவரோட உழைப்பும் முயற்சியும் எந்தளவு தூரத்திற்கு இருந்திருக்கின்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்...அவரைவிடவும் பல மடங்கு உழைப்பை நாம போடுவோம்...முடியும்னு நினைச்சா முடியாதது எதுவுமேயில்லை அஸ்வின்..."

"...நீ உனக்கு கிடைச்சிருக்குற வேலையில போய் சேரு...உன்னோட இலட்சியம் என்னன்னு எனக்கும் கீர்த்துக்கும் நல்லாவே தெரியும்...நீ தனியா கட்டுமானக் கம்பனி தொடங்கனும் என்குறதுதான் அங்கிள்,ஆன்டியோட ஆசையும் கூட...அதுக்கு என்ன பண்ணனுமோ அதை நீ பண்ணு...உனக்குத் துணையா நாங்க இரண்டு பேரும் இருக்கோம்...அதை மாதிரி எங்க மேலையும் முழு நம்பிக்கை வை...கீர்த்துவும் நானும் நிச்சயமாய் சாதிச்சுக் காட்டுவோம்..."

அவனது நம்பிக்கையான வார்த்தைகள் அஸ்வின்னின் மனதையும் அசைத்துப் பார்த்தது...தங்கையின் கண்களை உற்று நோக்கினான்...அதில் கண்ணீர் மறைந்து சாதிக்க வேண்டுமென்ற ஓர் உறுதி வந்திருப்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது...

"எனக்கு உங்க இரண்டுபேர் மேலையுமே முழு நம்பிக்கை இருக்கு...என்ன நடந்தாலும் நாம எல்லாரும் ஒன்னா சேர்ந்து சமாளிச்சுக்கலாம்..."

அவன் வாயிலிருந்தும் அந்த வார்த்தைகள் வந்த பின்னர்தான் கீர்த்தனாவின் மனதிலும் அமைதி பரவியதென்று சொல்ல வேண்டும்...அந்த நிமிடத்திலிருந்தே தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டு அடுத்து நடக்க வேண்டிய வேலைகளில் கவனத்தைச் செலுத்தியவள்..பொறியியல் படிப்பினை அத்தோடு இடைநிறுத்திக் கொண்டு ஒன்லைன்னில் விளம்பரக் கற்கைநெறியினை ஆனந்தின் துணையோடு தொடர்ந்தாள்...

அஸ்வின் அவள் மேல் வைத்த நம்பிக்கையும்,ஆனந்தின் துணையும் அவளிற்கு கைகொடுக்க..சரிந்து போகக் காத்திருந்த விளம்பர நிறுவனத்தை ஒரே வருடத்திற்குள்ளாகவே தூக்கி நிறுத்தினாள்...இரவு பகல் பாராது உழைத்த அவளின் முயற்சிக்கு வெற்றியாக இன்று அவளிற்கு கிடைத்திருப்பதுதான் இந்த வருடத்திற்கான "பெண் சாதனையாளர்"என்ற விருது...

ஆனாலும் அந்த விருதினை வென்றெடுத்ததில் அவளின் உள்ளம் உவகையடையவில்லை...காரணம் தொழிலில் அவள் வென்றுவிட்டதாய் அகிலமே கூறினாலும்,வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் அவள் தினம் தினம் தோற்றுக் கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் உள்மனம் மட்டுமே அறியும்...


தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (4-Apr-18, 4:22 pm)
பார்வை : 854

மேலே