கூவத்தின் மணம் மனம்

ஒரு நாள், காலை மணி 7:30 மணிக்கு,
"காலையில் பொழுது விடிந்தே விட்டது.. இன்னும் என்னடா தூக்கம்?வேளைக்கு போக வேண்டாமா நீ.. முருகா இவன நீ தான்ப்பா காப்பாத்தணும்" என்று ரமாதேவி கத்துவது இவனுக்கு கேட்பதாய் இல்லை.
பல முயற்சிக்கு பின் அவன் மகனிடம் இருந்து பதில் வந்தது. கூடவே எரிந்து விழும் வார்த்தைகளும் பரிசாக வந்தது.
"ஒரு அஞ்சு நிமிஷம் மா... நீ வேற ஒரு பக்கம் உயிர எடுக்காத மா "
"ஆமா டா.. இந்த வீட்டுக்கு இந்த ஏமாந்த பொண்ணு சிக்கிட்டானு எல்லாரும் என்ன இப்புடி பண்றிங்கள்ள.. எல்லாம் என் தலையெழுத்து"
"காப்பி போட்டுட்டேன்! அப்பறோம் ஆரண காபி தான் குடிக்கணும் பாத்துக்கோ"
காப்பி பிரியனான முருகன் எழுந்து வந்து "அம்மா! முருகனையே முருகன் கிட்ட காப்பாத்த சொல்லுற இதெல்லாம் நியாயமா?"
"டேய் காலங்காத்தால ஆரம்பிக்காத உன் மொக்கைகள எல்லாம் கேட்டுக்க நான் ஒன்னும் உன் பொண்ணு ஆர்த்தி இல்ல.. எனக்கு நெறய வேலை இருக்கு.. சீக்கிரம் ஆபிஸ்க்கு போ!"
"அம்மா தூக்கத்துல கடுமையா பேசிட்டேன்.. ஸாரி மா!..கோச்சிக்காத" என்றான் முருகன்.
"டேய் நான் எல்லாம் கோச்சிக்கிட்டா.. உங்க அப்பனும் நீயும் என்கிட்ட பல ஜென்மம் மன்னிப்பு கேட்டாலும் தீராது டா.. நான் அதெல்லாம் பெருசா எடுத்துக்கல போ டைம் ஆயிடுச்சு பாரு!" என்றாள் ரமா.
அவனும் தூவாலைக்குழாய் திறந்து நன்றாக குளித்து விட்டு அவனது பிரச்சனைகளை நோக்கி தயாராகி அவனுடைய கிழமையை எதிர்கொள்கிறான் முருகன்.

இப்படியாக வாழக்கையில் சராசரியாக ஒவ்வொரு வீட்டிலும் காலையில் நடக்கும் ஒன்று தான். இதை நாம் அறிந்ததே!

"கூவம் ஒரே நாத்தம்! இந்த பாலத்துக் கிட்ட தான் வண்டி நிக்கணுமா டிராபிக் எப்படியும் க்ளியராக பத்து மிமிஷம் ஆகும் போல.. சரி பாட்டு கேட்போம்" என்று காதுகேள் பொறியை மாட்டினான். தலைக்குட்டையை மூக்கில் பொத்தி முகமுடியாய் அணிந்து கொண்டபின் அந்த கூவத்தை நோக்கினான்.

யாரோ குப்பைகளை எரிவதை கண்டான். மனத்துக்குகள் கோபம் சுர்ர்ர்ர் என ஏறியது. "இவர்களை எல்லாம் என்ன செய்வது சுத்தம் இல்லை சுகாதாரம் இல்லை. தற்குறிகளாகவே வாழ்கிறார்களே! அப்புறம் கூவம் என் நாறாது?"

வண்டிகள் நகர தொடங்கின. அவன் வண்டியும் நகர்ந்தது. அவனும் நகர்ந்தான், ஆனால் நாற்றம் மட்டும் நகரவில்லை.

அதே நாள், காலை 3:30 மணிக்கு
அதிகாலையில் வெயில் காலத்தில் வரும் வறட்டு பனி நிலவுகிறது. உடம்பில் சோர்வு தூக்கம் அவளை விடுவதை இல்லை எனினும் அவள் முழிப்பை உணருகிறாள்.
"அக்கா! அக்கா!" என்று யாரோ கூப்புடுகிறார்கள். கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. கண் விழித்தாள் ராதா. அவள் பக்கத்தில் கணவனும் குழந்தையும் அசந்து தூங்குகிறார்கள்.
"அக்கா!"
"இதோ வரேன் நிர்மலா"
"நேரம் ஆயிடுச்சு கா! விடிஞ்சிரும் போல.. அப்பறோம் ரொம்ப கஷ்டம்" என்று விமலா வசரபடுத்தினாள்.
"புரியுது டி! இதோ வந்துட்டேன்" என்று ராதா எழுந்து குடிசையின் கதவை திறந்தாள்.
அவசரமாக சென்றாள். கூவத்தை நோக்கி!
உடன் வந்த பெண்கள் கூவக்கரையில் ஓரமாக ஓதுங்குவதை கண்டாள். இவளும் ஒதுங்கினாள்.
"ஒரே நாத்தம்! கடவுளே!"
"அக்கா! அந்த கார்பொரேஷன் கக்கூஸ்ல போய் நோய் வந்தது தான் மிச்சம்! அதுக்கு இந்த நாத்தம் எவ்வளவோ தேவல!" சற்று தூரத்தில் இருந்து விமலாவின் ஓசை கேட்டது.
"எல்லாம் நம் தலையெழுத்து! டீ!" என்று குற்ற உணர்வோடு ராதா கூவத்தை நோக்கினாள்.
கொண்டு சென்ற தண்ணீரில் கால்களை கழுவி விட்டு அவள து பிரச்சனைகளை நோக்கி தயாராகி அவளுடைய கிழமையை எதிர்கொள்கிறாள் ராதா.
உடன் வந்த பெண்கள் முன்னே செல்கின்றனர். இவளும் செல்கிறாள். ஆனால் நாற்றம் மட்டும் செல்லவில்லை.
இப்படியாக வாழக்கையில் சராசரியாக ஒவ்வொரு வீட்டிலும் காலையில் நடக்கும் ஒன்று தான். இதை நாம் அறிந்ததே! (அறிந்தோமா? இதுவே கூவத்தின் மனம்!)

- காவியா

எழுதியவர் : காவியா (6-Apr-18, 6:02 am)
சேர்த்தது : காவியா
பார்வை : 199

மேலே