திகிலும் ருசிக்கும் 1

திகிலும் ருசிக்கும்...1

எதையும் தெரிந்துகொள்ளாதவரை தான் மனதுக்குள் அமைதி, தெரிந்த பின் புயலும் பூகம்பமும் தான் என்பது என் விஷயத்தில் சரியாக இருக்கிறது...

இத்தனை நாளும் வீட்டில் ஏதோ பிரச்சனை இருக்கிறது, ஏதோ அமானுஷ்யம் இருக்கிறது என்றெல்லாம் பினாத்தி கொண்டிருந்த மனைவியை பார்த்து கேலிபேசி பொழுதைபோக்கிக்கொண்டிருந்தேன்....

இப்போதோ மனைவி சொன்னது சரிதான் என்பதை பார்த்து உணர்ந்த பின் அதுவும் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் தெரிந்துகொண்ட பின்... இந்த இரண்டு நாள் தனியாக எப்படி சமாளிக்க போகிறேனோ என நினைக்கவே பயமாக தான் இருக்கிறது...

இதோடு பத்து முறை போன் பண்ணிவிட்டேன், என்னை அலைக்கழிக்கும் எண்ணத்தோடு போனை கூட எடுக்காமல் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறாள் என் துணைவி...அப்பொழுதுதானே பதினோராவது முறை அவள் எடுத்துவிட்டால் என் ஆண்மை முறுக்கையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டி அழுதுபுலம்புவேன்...என்ன ஒரு வில்லத்தனம்... அவளை சொல்லியும் குற்றமில்லை, இந்த வீட்டிற்கு வந்த ஆறுமாதமாகவே அவளும் அழுதுபுலம்பி கொண்டு தான் இருந்தாள், நான் தான் வீம்புக்காகவே அவளை பொருட்படுத்தாமல் வீடு வசதியாகயும், வாடகை கம்மியாகவும் இருப்பதால் எதையும் சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டேன்....

வீட்டை பற்றி சொல்லவேண்டுமானால் அந்த காலத்து முற்றம், திண்ணை, தூண்கள் தாங்கும் நடுக்கூடம், புழங்காத சிற்றறைகள், அழுக்குப்படிந்த அட்டால்..துளசி செடி இல்லாத துளசிமாடம்... ஒட்டு வீடுதான் என்றாலும் வீடு விசாலமாக நன்றாகவே இருந்தது...வாஸ்துவில் கூட குளறுபடியெல்லாம் இல்லை....

அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகள் எல்லாம் இடிபட்டு பிளாட்டாக இருக்க இந்த ஒற்றை வீடு மட்டும் குடித்தனத்திற்கு ஏற்றதுபோல விட்டுவைக்கப்பட்ட விஷயம் என் மூளைக்குள் அபாயமணி அடிக்காத ஒன்றாகவே ஒதுக்கப்பட்டது என்னை சிக்க வைக்க என் எதிரிகள் செய்த சூழ்ச்சியோ என்னவோ...

குடித்தனம் வந்த நாள்முதல் தண்ணியில் பிரச்சனை, சமையலறையில் பிரச்சனை, அவ்வப்போது ஒன்றிரண்டு ஓடுகள் உடைந்து விழும்...இப்படி ஏதாவது நிகழ்ந்துகொண்டே இருந்ததில் என் மனைவி சுதாரித்துக்கொண்டாள்...நானோ இதெல்லாம் எல்லாவீடுகளிலும் நடப்பது தானே, இதெல்லாம் ஒரு விஷயமா என்று அலட்சியப்படுத்திவிட்டேன்...

இப்படி தான் இதற்க்கு முன்னமே இருந்த வீடுகளில் ஏதோ வாஸ்து சரி இல்லை, அதனால் தான் இத்தனை நாளும் குழந்தை நிற்காமல் போனதென புலம்பி தள்ளினாள், இதோடு பத்துவீடு மாறியும் அவள் கருவுக்குள் ஒன்றும் நின்றபாடில்லை....

வாஸ்த்து காரணம் இல்லை, உன் சுகவீனம் தான் காரணம் என்று சொன்னால் ஓவென அழுது ஊரைக்கூட்டி பஞ்சாயத்து வைப்பாள்...எதற்கு வம்பு சிவனே என இருந்துவிட்டால் தொல்லை இல்லை என அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒவ்வொரு வீடாய் மாறி இந்த வீட்டிற்கு வந்து உட்கார்ந்த ஆறுமாதத்தில் பேய் கதை சொல்கிறாளே என எரிச்சல் பட்டதோடு சரி, வேறொன்றும் நினைக்கவில்லை....
ஒரு ஆண்பிள்ளை இத்தனை தூரம் புலம்புகிறேனென்றால் இந்த வீட்டில் அத்தனை பெரிய சம்பவத்தை பார்த்த பீதி தான்...
நேற்று தான் அவள் தாய்மாமா வழி சொந்தத்தில் விஷேஷமென சொல்லிவிட்டு கிளம்பினாள், கூடவே என்னையும் அழைத்தாள் தான், அவள் வீட்டு சொந்தங்களுக்கும் எனக்கும் அறவே ஆகாது...நான் குழம்பில் உப்பில்லை என்றால் அவர்கள் குழம்பே இல்லை என்று பானையை கவுத்திவிட்டு வெறும் வயிற்றில் அனுப்பும் கூட்டம்....

ஓன்று சொல்லக்கூடாது, மூஞ்சை மூஞ்செலி கணக்கில் தூக்கிவைத்துக்கொண்டு மூலைக்கு மூலை மிருதங்கம் வாசிப்பார்கள்...என் வாயோ சும்மா இராது, எதை பார்த்தாலும் அதில் இருக்கும் குறை பசை மாதிரி என் கண்ணில் வந்து ஒட்டிக்கொள்ள, அதை பார்த்தமாத்திரத்தில் இருந்து யாரிடமாவது சொல்லிவிட உதடு துடிக்கும், இத்தனை ரசபாதங்கள் இருக்க எதற்கு மீண்டும் இப்படி ஒரு தர்மபோராட்டம் நடத்தவேண்டுமென தனியே அவளை மட்டும் அனுப்பிவிட்டு இப்போது அவஸ்தை படுகிறேன்...

அவள் போனதுமே இந்த வீட்டில் பாத்திரம் உருள்கிறது, நாற்காலி அசைகிறது, ஒன்றும் வைத்த இடத்தில் சிரத்தையாக இல்லை, என் நெஞ்சை பதைக்க வைக்கவே மல்லுக்கு நிற்பதுபோல் அத்தனையும் தாறுமாறாக தவம் செய்கிறது...

கண்ணெல்லாம் சிவக்க சிவக்க நேத்து சிவராத்திரியாய் போனது, காலையில் அசந்து தூங்கினால் இந்த பழைய கதையெல்லாம் மண்டைக்குள் சுண்டெலி மாதிரி ஓடிக்கொண்டு நினைவுகளை கொறிக்க ஆரம்பித்துவிட்டது...

பால்காரனும், காய்வண்டியும் மட்டும் தான் இந்த தெருவில் போக்குவரத்து செய்பவர்கள், இன்னும் அவர்களையும் காணவில்லை, எத்தனை நேரம் தான் இந்த பகல் வேளையிலும் மனசை அலசிக்கொண்டு உட்கார்ந்திருப்பது, வெளியில் போகலாம் என்றால் எங்கே போவது, டீ கடைக்கு போகலாம் தான், ஆனால் அரசியல் பேசாதீர்கள் என்ற போர்டுக்கு பக்கத்துலேயே நின்று அரசியல் பேசும் கூட்டத்தில் அவர்களின் பெருமைபீத்தல்களில் ரத்தம் சூடேறி மீசைமுறுக்கேறி நா துடிக்க, எதாவது பேசித்தொலைத்துவிட்டால் வம்பு வழக்காகிவிடும்...

அப்படி ஏற்கனவே சில வம்பு வழக்குகள் வந்ததில் இருந்து டீ கடைப்பக்கம் போவதில்லை என சில மாதங்களுக்கு முன் உத்தேசித்திருந்தேன்...அக்கம் பக்கம் வீடிருந்தால் இத்தனை தொல்லை இருந்திருக்காது, இந்த தெரு முழுக்க பிளாட் போட்டு ஒற்றை வீட்டை அம்போ என விட்டு வைத்திருந்ததால் வெளியில் நடமாட்டமும் இல்லை, பக்கத்துக்கு தெருக்களிலும் அப்பார்ட்மெண்ட் ஆகியிருந்தது, கேட்டில் செக்யூரிட்டி தவிர ஒருத்தனும் வீட்டை விட்டு ஜன்னல் வழியாக கூட தலையை காட்டுவதில்லை, சிலர் எந்த நேரத்தில் வெளியே வருகிறார்கள், வேலைக்கு போகிறார்கள் என்பது கூட தெரியாத புதிர், எல்லாம் ஐடி கம்பெனி ஆசாமிகள்...

நாயும் நரியும் ஊளையிடும் வேலை திருடன் போல வந்து வீட்டுக்குள் புகுந்து கதைவடைக்கும் நாயகர்கள்....

எனக்குதான் ஒருவாரத்திற்கு ஒருவேளையும் இல்லாமல் போய்விட்டது, காரணம் சொல்லாமலே விட்டுவிட்டேனே, ரெண்டு நாளைக்கு முன்னர் தான் ஒரு பளுவை தூக்கி கையை சுளுக்கி கொண்டேன், என் அலுவலகத்தில் அவ்வப்போது இப்படி நடப்பது தான், என்ன ஓன்று இந்த பளுதூக்கும் வேலை என் டிபார்ட்மென்ட் வேலை அல்ல, அடுத்தவர்கள் வேலையை பங்குபோட்டுக்கொண்டு செய்வதாலே எனக்கு அலுவலகத்தில் இளிச்சவாயன் என்றொரு நல்ல பெயர் உண்டு...

யார் என்ன சொன்னால் என்ன , நாலு பேருக்கு நல்லதை செய்துவிட்டு எதன் வழியாவது அடுத்த தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கவேண்டும் என்பதே என் லட்சியம்...

அப்படி என் லட்சிய வழியில் உதவி செய்தபோது கையை சுளுக்கி மேலதிகாரியின் அனுதாபத்தை சம்பாதித்து கொண்டு ஒருவாரம் விடுப்பு நான் கேட்காமலே சலுகையாக கிடைக்க வேறுவழியில்லாமல் வீட்டில் இத்தனை சங்கடங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்....

சொல்லப்போனால் இரண்டு நாள் நன்றாகவே கழிந்தது, என் மனைவியின் சமையல் வாசம் மூக்கை துளைக்க காபியும் பலகாரமுமாக சலிக்காமல் உண்டு என் கைசுளுக்கு கூட மறக்கும் அளவுக்கு சாவகாசமாக பொழுது போனது....

நேற்று அவள் போனாள், கூடவே என் நிம்மதியையும் கட்டுசோறு மாதிரி கட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டாள்...

கட்டுசோறு எனும்போது தான் நினைவுக்கு வருகிறது, புளியோதரையை கிளறி அகன்ற பாத்திரத்தில் நிரப்பி கூடவே முறுக்கு, தட்டை எல்லாவற்றையும் ஒரு தூக்கில் அடைத்துவைத்துவிட்டு தான் கிளம்பினாள்...

என் மனைவி கைப்பக்குவம் என்றால் அப்படி ஒரு கைப்பக்குவம், அவள் செய்யும் ஒவ்வொரு உணவும் ருசியில் ஆளையே கொன்று எடுத்துவிடும், இந்த ருசியில் மயங்கி தான் பொண்ணு பார்க்க போன அன்றே நிச்சயம் செய்துவிட்டு ஒரே மாதத்தில் அவளை கட்டிக்கொண்டு கையோடு கூட்டிவந்தேன்...

அவளை பொண்ணு பார்த்த அன்று அவள் போட்டிருந்த புடவை நகையைவிட அவள் கைப்பக்குவத்தில் செய்த சிற்றுண்டி தான் என்னை கட்டி இழுத்து அவள் மீது மயக்கத்தையும் கிறக்கத்தையும் உண்டாக்கிவிட்டது...நான் ஒரு சாப்பாட்டு ராமன் என்பது என்னை தெரிந்த அத்தனை பேரும் அறிந்து வைத்திருந்த ஓன்று...

அதிலும் அவள் புளியோதரை செய்தால் தெருவே மணக்கும், முன்பு இருந்த வீட்டில் இவள் புளியோதரைக்கெனவே சில ரசிகைகள் இருந்தார்கள், புளியோதரை வாசம் வந்தால் போதும், படையெடுத்து வந்து புளியோதரையை அள்ளிகொண்டுபோகமுடியவில்லை என்றாலும் கிள்ளிகொண்டாவது போவார்கள்...

அப்படி ஒரு ருசி, மணம்....அந்த ருசி தான் இன்று கூட வீட்டை விட்டு போகாமல் என்னை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது, காலை எழுந்ததுமே புளியோதரையை வாயில் அள்ளிப்போட்டு ருசித்து விட்டு தான் இத்தனையும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்...

காபி மட்டும் இன்னும் குடிக்கவில்லை, பால்காரன் இன்னும் வந்தாகவில்லையே, காபி குடித்தால் தான் எனக்கு அன்றைய நாளே தொடங்கும்....

தெருவில் யாரோ வரும் சத்தம் கேட்கிறது....பால்காரனாக தான் இருக்கும்....

எழுதியவர் : ராணிகோவிந் (6-Apr-18, 1:20 pm)
பார்வை : 739

மேலே